Saturday, February 26, 2005

சுதந்திரம் பிளவு படாதது.

சங்கராச்சாரியார் விவகாரத்தில் ஜெயலலிதா அரசு காட்டி வரும் தீவிரம் இது ஒரு குற்ற வழக்கு மட்டுமல்ல என்ற சந்தேகத்தை ஒவ்வொரு நாளும் தீவிரமடையச் செய்து வருகிறது. அண்மையில் ஆடிட்டர் குருமூர்த்திமீது சங்கராச்சாரியார் விவகாரம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்படி தெரிவிக்கவேண்டிய தகவல்களை மறைத்தல், உயர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் கூற மறுத்தல், போலி ஆதாரங்களை அளித்தல் என பல்வேறு பிரிவுகளில் குற்றம் சாட்டப்ப்படுள்ளது.. சோ, த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோர் குருமூர்த்தியின் கட்டுரைகளை பிரசுரித்ததற்காக காவல்துறையினரால் விசரிக்கப்பட்டிருக்கின்றனர். ஜெயலலிதா அரசு பத்திகைகள் மேல் நடத்திவரும் தாக்குதல்களின் இன்னொரு அத்தியாயமே இந்த வழக்கும் விசாரணைகளும். அரசின் அதிகாரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகள் பற்றிய கேள்விகளை இது மீண்டும் ஒரு முறை விவாதத்திற்குக் கொண்டுவருகிறது.

சோ போன்றவர்கள் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஒடுக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது அதில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான பிரிவுகளை எந்தத் தயக்கமும் இன்றி ஆதரித்து நின்றார்கள். அவை தங்களிடம் வராது என்ற ஒரே நம்பிக்கைதான் அதற்குக் காரணம். குருமூர்த்தியின் கருத்துக்கள் இந்துத்வா அமைப்புகள் இப்பிரச்சினையில் வெளியிட்டுவரும் அறிக்கைகளின் இன்னொரு பிரதி மட்டுமே. இந்த வழக்கிற்கு எதிரான கண்மூடித்தனமான எதிர்நிலையை அவரது கட்டுரைகள் வெளிப்படுத்தின. அவை ஒரு பத்திரிகையாளனின் ஆய்வு நிலை சார்ந்த சுயேச்சையான அபிப்ராயங்கள் அல்ல. அது குற்றம் சாட்டபட்ட தரப்பின் நிலைப்பாடு. ஆனால் ஒரு பிரச்சினையில் ஜெயலலிதாவிற்கு உவக்காத கருத்துக்களை சொன்னால் நக்கீரன் கோபால் சந்தித்த அதே விதியைத்தான் சோவும் குருமூர்த்தியும் சந்திக்கவேண்டியிருக்கும் என்பற்கு சாட்சியே இந்த வழக்கு.

பத்திரிகைளில் எழுதப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் தொடர்பாக போலீசிற்கு விளக்கமளிக்கவேண்டும் என்பதை ஒரு விதியாகக் கொண்டால் தமிழக காவல்துறை தனது முழுநேரப் பணியாக அதையே செய்யவேண்டியிருக்கும் .காவல் துறைக்கு பதிலளிக்க மறுப்பதும் அதனிடமிருந்து தகவல்களை மறைப்பதும் ஒரு பத்திரிகையாளனின் ஆதார நெறிகள். இவற்றிற்கு எதிரான சட்டப் பிரிவுகள் நீடித்திருப்பது மிகவும் ஆபத்தானது. அனுமானங்கள், சந்தேகங்கள், மறைமுகத் தகவல்கள் அடிப்படையில் ஒரு பத்திரிகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும் செய்திகளும் 'உண்மைகள்' அல்ல. ஒரு பிரச்சினையின் மையத்தை நெருங்குவதற்கான பல்வேறு நிலைகளிலான பாதைகள் அவை. அவை ஏற்கப்படவோ மறுக்கபடவோ செய்யலாம். ஆனால் அவற்றை அழிக்க முயற்சிப்பது இந்த அரசிற்கு கருத்துக்கள் தொடர்பாக இருக்கும் பதட்டத்தையே காட்டுகிறது.

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினைகளில் எடுக்கப்படும் நிலைப்பாடுகள் பல சமயங்களில் பெரிதும் சுயசார்புகளை மையமாகக்கொண்டிருக்கின்றன. இவை ஒருபிரச்சினையின் ஆதாரமான கேள்விகளை பலவீனமடையச் செய்துவிடுகின்றன. பாதிக்கப்படும் நபர்களின் பின்புலங்கள் முரண்பாடுகளைக் காட்டிலும் முக்கியமானவை ஒரு சமூகத்தில் அரசு எந்திரத்தின் அதிகாரத்திற்கும் சிவில் உரிமைளுக்கும் இடையிலான பிரச்சினைகள். இந்த உரிமைகளை நாம் ஒருமுறை பாதுகாக்கத் தவறினால் அவற்றை மீண்டும் அடைவது கடினம். இங்கு பத்திரிகையாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பல சயங்களில் இரட்டை நிலைப்பாடுகளே இருக்கின்றன. ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகளில் குறைந்த பட்ச அளவில்கூட பொதுக் கருத்துக்கள் எட்டப்படுவதில்லை.

சுதந்திரம் பிளவுபடாதது.

மனுஷ்ய புத்திரன்
உயிர்மை மார்ச் 2005 தலையங்கம்
uyirmmai@gmail.com

Monday, February 14, 2005

காதல் கவிதைகள்:8 மனுஷ்ய புத்திரன்

காதலர் தினத்தை ஒட்டி நான் திட்டமிட்டபடி விரிவான அளவில் கவிதைகளை உள்ளிடமுடியாதபடி பல்வேறு வேலைகள் வந்து குறுக்கிட்டுவிட்டன. ஆனாலும் சில கவிதைகளையேனும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி. பி.கே. சிவக்குமார் போன்ற நண்பர்கள் சில கவிதைகள் தொடர்பாக எழுதியுள்ள ஆழமான குறிப்புகள் மிகவும் மகிழ்ச்சி தருகின்றன. கவிதைகளையோ பிற இலக்கியப் பிரதிகளையோ முன்னிட்டு இத்தகைய பேச்சுக்களை உயிர்மை வலைப்பதிவில் உருவாக்க பேராவல் எழுகிறது. திரு நாராயணன் இப்பதிவை தொடர்ந்து தன்னுடைய வலைப்பதிவில் மேலும் சில கவிதைகளை இட்டிருந்தார்.

மொத்தத்தில் இது மிகவும் மகிழ்ச்சி தரும் அனுபவம்.
எனது இரு கவிதைகளைச் சொல்லி இந்தக் காதலர் தினப் பேச்சுக்களை நிறைவு செய்யலாம். காதல்களைத் தொடர்ந்தபடி...


இழந்த காதல்

நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்


அந்த இடம்

போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்

காதல் கவிதைகள்:7 மாலதி மைத்ரி

காதல் கடிதம்

ஆண்டவன் துணை
அன்புள்ள பானுவுக்கு மாமா எழுதிக் கொள்வது
பணம் அனுப்பியது கிடைத்ததா
ஊதாரித்தனமாக செலவு செய்யாதே
கணக்கு எழுதிவை
தின்னு அழிக்காதே
வெள்ளை பூண்டு வெங்காயம்
மசாலா கறிசேத்துக்காதே
எல்லாம் உன் நன்மைக்குத்தான்
சினிமா கடைத் தெருன்னு சுத்தாதே
கீழ்வீட்டு அக்கா துணையுடன் வெளியே போவனும்
படியை விட்டு இறங்கும்போது
முந்தானையை இழுத்து போத்திக்கனும்
உடம்பைக் கொற நீ கேட்ட வளையலை
அடுத்த மாதம் கொடுத்து அனுப்புகிறேன்
என் மகள் மகாலஷ்மி அமெரிக்கா போவதற்கு
ஏற்பாடும் பணமும் தயார் செஞ்சிக்கிட்டு
கூடவே கொஞ்சம்கூலி விசா பொறுக்கினு வரேன்
அவள் ஊருக்குப் போயிட்டால்
இங்கேயே செட்டில் ஆகிடலாம்
எனக்கும் 55 ஆவப்போகிறது
இது வரைக்கும் உன் அக்காவுக்கு
துரோகம் செஞ்சது கெடையாது
ஒரு கொறையும் உனக்கு வைக்க மாட்டேன்
வீட்டுவேலைக்கு விசாகேட்டு
என் வாசல் மெதிச்ச ராத்திரி
நான் தூங்கவேயில்லை
யோசிச்சிதான் முடிவு பண்ணினேன்
ஐயோ பச்ச குழந்தை
அங்கபோய் எத்தனை கைமாறுதோ
நம்ம கையோடயே இருந்துட்டு
போகட்டுமேன்னு பிச்சைபோட்டுருக்கேன்
வரமா நெனச்சு காப்பாத்திக்கோ
எல்லாம் உன் நன்மைக்குத்தான் சொல்றேன்
ஒரு ஆறுமாசம் பொறுத்துக்கோ
பல்லாயிரம் மைலுக்கு அப்பால இருக்கன்னு
ஏதாவது துரோகம் பண்ண நெனச்ச
தேவடியா நாயே
ஆள்வச்சி தீத்துக் கட்டிடுவேன் ஜாக்கிரதை
பதில் எழுதவும்
அன்புடன்
மாமா

Sunday, February 13, 2005

காதல் கவிதைகள்:6 ஞானக்கூத்தன்

பவழமல்லி

கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி

கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்
தனிமையில் என் நினைப்புத் தோன்றுமோடி?

காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி

பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பைமுன் வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை
உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக்
கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறது உன் உந்திச்சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்.
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.

காதல் கவிதைகள்:4 நகுலன்

நான்

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?


நான்(2)


நேற்றுப்
பிற்பகல்
4:30சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன்முறுவல்
உன் கண்காண
வந்திருக்கிறேன்போதுமா
என்று சொல்லிவிட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன.

காதல் கவிதைகள்-3 சுகுமாரன்

ஸ்தனதாயினி


இனிய வெண்கலப் பழங்கள்
உன் மார்பகங்கள்
உள்ளே
உயிர்தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால்மேகம்.
ஒன்றில்
தாய்மையின் கசிவு
மற்றதில்
காதலின் குழைவு
உன் இடது முலை அருந்துகையில்
என் கண்களில்குழந்தமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடதுமுலை பரிந்து சுரக்கும் ஊற்று
உன் வலதுமுலை அருந்துகையில்
என் கண்களில்காதலின் உற்சவம்
அப்போது உன் வலதுமுலை
நெகிழ்ந்து பெருகும் அருவி
குழந்தைமையும் காதலும் கனிந்தமனவேளையில்
உன் மார்பகங்களின் இடைவெளியில்
உணர்கிறேன்
அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை.


உன் பெயர்

உன்பெயர்-

கபாலத்தின் உட்கூரையிலில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணைவரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணிநிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி

உன் பெயர்-

இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத் தரச் சொல்லும் விநோதக் கோரிக்கை*
கொய்யபட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்**
என் இதயத்தைத் துளைக்கும் அன்பின்விஷம் தடவிய வாள்
நீயே என் ஆனந்தம், அலைச்சலில் ஆசுவாசம், குதூகலம்.
நீயே எந்துக்கம், பதற்றம், பிரிவின் வலி.

காலம் அறியும்; உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு
நீயே அறிபவள்;நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரா உனக்கு?

உன் பெயர்-

இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்

* தன் காதலிக்கு பரிசாக தன் காதை அறுத்துத் தந்த வான்கோ
** யோவானின் தலையை அன்பளிப்பாக வேண்டிய பைபிள் பாத்திரம்

காதல் கவிதைகள்-2 பூமா ஈஸ்வரமூர்த்தி

மரணம் என்று சொல்
வேதனை என்று சொல்
கொடூரம் என்று சொல்
தண்ணீர் என்று சொல்
விவேகம் என்று சொல்
உற்சாகம் என்று சொல்
ரத்தருசி என்று சொல்
திருடும் கை என்று சொல்
சித்ரவதை என்று சொல்
பிணந்தின்னி என்று சொல்
காலையில் எழும்போதே காத்துகிடக்கும் நாய் என்று சொல்
விளக்கு இல்லாத ராத்திரியில் கொட்டின தேள் என்று சொல்
ரயில் ஏறிச் செத்துப்போன அவளின் கழுத்தில் கிடந்த
சேதமில்லா
மல்லிகையென்று சொல்
நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்

காதலைக் காதல் என்றும் சொல்லலாம்.

(நன்றி:காதலைக் காதல் என்றும் சொல்லலாம்)

காதல் கவிதைகள்-1 ஆத்மாநாம்

காட்சி

முதலில்
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன்
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்.


உன் நினைவுகள்

எனினும் நான்
உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக் கற்கள்
சிதறும் ஒளிக் கற்றைகளை
வீசும் விளக்கை

அப்பொழுதேனும்
துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள

முடியாது
இவ்விதம்தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின்
பரிமாணங்களைச் செதுக்கிய
ஓவியத்திற்குச் செல்வேன்
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்

உதிர முடியாத
காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும்

மெல்லிய ஒலியுடன்
நாடி நரம்புகளைத்
தொற்றிக் கொண்டு
சிறிது நேரம்
மூச்சளிக்கும் இசை

எழுத்துக் கூட்டங்களுக்கும்
தொடர்வேன்
ஏதேனும் ஒரு மூலையில்
உன் நினைவுகள்

என் அறையில்
நான் முடங்கிக் கிடக்கையில்
எப்பொழுதேனும்
அந்த உயிரிழந்த பஸ்ஸரை
அழுத்திச் சென்றுவிட்டாயோ
என்று மன மதிரும்

பின்னர்
உயிர்த்திருக்கும்
புட்களுடன்
தேடிக்கொண்டிருப்பேன்
அலையும் நினைவுகளில்

நன்றி: ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு பதிப்பகம் 2002)

உயிர்மை வலைப்பதிவும் காதலர் தினத்தைக் கொண்டாடுகிறது

காதலர் தினம் வருவதற்கு பலதினங்களுக்கு முன்பே எனக்குள் ஒர் பயங்கரப் பீதி பரவ ஆரம்பித்துவிடுகிறது.காரணம் தமிழ் ஊடகங்கள்தான். காதலர்தினத்தை ஒட்டி தமிழ்ப்பத்திரிகைகள் வெளியிடும் ஆய்வுக்கட்டுரைகளும் பேட்டிகளும் காதலை போஸ்ட்மார்ட்டம் செய்யும்விதம் விவரிக்க இயலாததது. காதல் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, காதல் நவீன வாழ்க்கையில் அடைந்துவரும் மாற்றங்கள், உண்மையான காதல் என்றால் என்ன, நட்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசம், காதலர் தினக் கொண்டாட்டத்திற்குப் பின்னே இருக்கும் நுகர்வோர் கலாச்சாரம், மேட்டுக்குடி கலாச்சாரம்... என என அறுவைகளுக்கு ஒரு அளவே கிடையாது. இதில் வெகுசன ஊடகங்களில் பணியாற்றும் நண்பர்கள் சிலர் 'கருத்து' வேறு கேட்பார்கள். தமிழர்களுக்கு எதை எடுத்தாலும் எதற்கு அது சம்பந்தமாக இவ்வளவு கருத்து தேவையாக இருக்கிறது என எனக்குப் புரியவேயில்லை.

உயிர்மையின் இந்த வலைப்பதிவில் காதலர் தினத்தை முன்னிட்டு இப்போதிலிருந்து காதலர் தினம் முடியும்வரை தமிழில் எழுதப்பட்ட முக்கியமான சில காதல் கவிதைகளை உள்ளிடப்போகிறேன். நண்பர்களே உங்களுக்கு அவகாசமும் விருப்பமும் இருந்தால் உங்களுக்கு பிடித்த காதல்கவிதைகளை இந்தப் பதிவில் எழுத அன்புடன் அழைக்கிறேன்.

காதல் வாழ்க..கருத்துக்கள் ஒழிக. (இதுவும் ஒரு கருத்துதான்)

அன்புடன்

மனுஷ்ய புத்திரன்
manushyaputhiran@yahoo.com

Saturday, February 12, 2005

சில விளக்கங்கள்

உயிர்மையின் இந்த வலைப்பதிவை தொடங்கியபோது உனக்கு ஏன் இந்த வேலை என்று நண்பர்கள் கேட்டார்கள். விவாதங்களில் பங்கேற்கும் சில அன்பர்கள் பிறர்மீது காட்டும் துவேஷமும் தனிப்பட்ட தாக்குதல்களும் நுண்ணர்வுகொண்ட யாரையும் சுலபமாக அச்சுறுத்திவிடக்கூடியவை. ஆனால் இதையெல்லாம் வேறொரு ரூபத்தில் தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் வேறொருவடிவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சந்தித்திருக்கிறேன். தமிழ் வலைப்பதிவுகளின் முகம் இந்த வன்முறை அல்ல. பல வலைப்பதிவுகள் மிகவும் முக்கியமான பதிவுகளைக் கொண்டிருக்கிறது. பொறுப்புணர்ச்சியுடனும் ஆழமாகவும் எழுதப்பட்ட பலபக்கங்கள் காணக் கிடைக்கின்றன. வருங்காலத்தில் மாறுபட்ட சிந்தனைகளுக்கான மிக முக்கியமான வெளியாக இவ்வலைப்பதிவுகள் இருக்கபோகின்றன. இது தரும் சாத்தியங்கள் மிகவும் ஊக்கமூட்டக் கூடியவை.

இந்த ஊடகத்தை உபயோகிக்கும் வாய்ப்பு விரிவடையும்போது புதிய பங்கேற்பாளர்கள் இதன் முகத்தையும் குரலையும் மாற்றி அமைப்பார்கள். இப்போது இந்த ஊடகத்தில் மேலோங்கும் சில குறிப்பிட்ட வகைமாதிரியான மனோபாவங்கள் கலைந்துபோகும்.
தெருச் சண்டையில் எதிராளியை நிலை குலையச் செய்ய தங்கள் துணியை தூக்கிக் காட்டுகிறவர்களுக்கு நிகராக கீழ்த்தரமான தாக்குதல்களைத் தொடுப்பவர்கள் எல்லா ஊடகங்களிலும் இருப்பதுபோல இணையத்திலும் இருக்கிறார்கள். இணையம் அளிக்கும் உடனைடி வெளிப்பாட்டிற்கான சுதந்திரத்தையும் முகமற்ற தன்மையையும் வன்முறைக்கான கூடுதலான வாய்ப்பாக பாவிப்பவர்கள் தங்களுடைய நியாங்களைக்கூட முன்வைக்க முடியாத பரிதாப நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். ஒருவர் எதிராளியை அவமானப்படுத்துவதால் அவரைவிட மேலான நியாயத்தைகொண்டவராகிவிட மாட்டார். இழிசொற்களை உபயோகிப்பவர்கள் அவை போய்ச் சேருமிடத்தை அறிந்தால் இன்னொருமுறை அவற்றை உபயோகிக்க துணிய மாட்டார்கள்.

உயிர்மை பதிவில் எழுதபட்ட என்னைப்பற்றிய சில கற்பனையான வாக்கியங்களைப் தொடர்பாக சில குறிப்புகளைமட்டும் இங்கே தர விரும்புகிறேன். இது அக்கற்பனைகளை இங்கே உள்ளிட்ட நபர்களுக்கு அளிக்கும் விளக்கம் அல்ல. இணையத்தை இன்னும் பொறுப்புள்ள சாதகமான ஊடகமாக கருதும் நண்பர்களுக்காக.

1. எனது இயற்பெயர் ஜனாப் சாகுல் ஹமீட் அல்ல. எஸ். அப்துல் ஹமீது. ஜனாப்புகள் எல்லோரும் ஒன்றுதான் என நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. என்மீதும் இளைய அப்துல்லாஹ்மீதும் காட்டும் வெறுப்பிற்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வெறுப்பிற்கு இந்தியாவில் ஒரு காரணம் இருக்கிறது. இலங்கையில் வேறொரு காரணம். ஆனால் அது என்னை உணர்வுபூர்வமாகத் தூண்டாது.. ஏனெனில் நான் மத நம்பிக்கைககளையோ சிறுபான்மை அடையாளத்தினையோ பின்பற்றுகிறவன் அல்ல.

2. 1983ல் என்னுடைய பதினாறு வயதில் எனது முதல் கவிதைத் தொகுப்பை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டது. 2005ல் என்னுடைய ஒரு கருத்திற்காக மணிமேகலைப் பிரசுர புத்தி என்று ஒருவர் திட்டுகிறார். கிறிஸ்துவுக்கு பிறகு புனிதர்களாகப் பிறந்து புனிதர்களான வாழ முடிகிறவர்களை வணங்குகிறேன். ஆனால் நான் பல்வேறு முரண்பட்ட தாக்கங்கள் பாதிப்புகள் வழியாக உருவாகிவந்தவன். அவை வெளிப்படையானவை. என்னாலேயே முன்வைக்கப்படுபவை. மேலும் நான் தமிழில் எழுதும் ஒரு எழுத்தாளன் என்பதால் என்னுடைய ஒவ்வொரு அபிப்ராயத்தையும் ஒட்டி என்னுடைய வம்ச சரித்திரத்தை ஆராயும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லக்கடமைப்பட்டவன். ஆனால் என்னைக் கேள்வி கேட்பவர் ஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போது பக்கத்திலிருந்த யையனிடம் பல்பம் திருடினாரா என்று நான் அவரை ஒருபோதும் கேட்க மாட்டேன்.

3. என் சக எழுத்தாளர்களோடு எனது உறவுகளை கொடிபிடிக்கும் உறவுகளாகவோ வியபார உறவுகளாகவோ புரிந்துகொள்வது என்னுடைய பிரச்சினை அல்ல. ஒரு எழுத்தாளனாக என்னுடைய அபிப்பராயங்களும் ஒரு பத்திரிகையாசிரியனாக பதிப்பாளனாக எனது தொழிழில்சார்ந்த நியமங்களும் ஒரே நேர்க்கோட்டில் இயங்குவது சாத்தியமல்ல.

4. நாச்சார் மட விவகாரத்திற்காக காலாச்சுவடு கையெழுத்து வேட்டை நடத்தியதற்கு பல மாதங்களுக்கு முன்பே நான் காலச்சுவடிலிருந்து விலகிவிட்டேன். ஜெயமோகன் தனது கவனத்தை மீறி வெளிவந்தத கதை என்று சொல்லி, ஆசிரியராக தார்மீகப் பொறுப்பேற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டபிறகும் தொடர்ந்து நடத்தபட்ட தாக்குதல்கள் பிரச்சினை சார்ந்து அல்ல. ஜெயமோகனை இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஒழித்துக்கட்டவேண்டும் என்ற ஆவேசமே அதற்குக் காரணம். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அக்கதை பற்றிய என்னுடை எதிர்ப்புணர்வை நான் குமுதம் இதழில் பதிவு செய்தேன்.

5. வெள்ளாவி விடுதலைபுலிகளால் தடைசெய்யபட்டதென்ற தகவல் அதன் ஆசிரியரால் உயிர்மைக்கு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அதற்கு யதீந்திரா என்பவர் எழுதிய மறுப்பும் நடந்தது என்ன என்பதுகுறித்து இளைய அப்துல்லாஹ் எழுதிய கடிதமும் உயிர்மையில் வெளியிடப்பட்டன. ஒரு பத்திரிகை செய்யக்கூடியது இவ்வளவே. உயிர்மைக்கு நபர்களுக்கோ குழுக்களுக்கோ எதிரான எந்த உள்நோக்கங்களும் கிடையாது. மாற்றுக் கருத்துக்களை அது தயக்கமின்றி பிரசுரித்து வந்திருக்கிறது.

6. இஸ்லாமிய அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் இஸ்லாமியர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகயுமே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செலுத்தக்கூடியது என்பதை நான் பல அரங்குகளில் முன்வைத்திருக்கிரேன். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பத்தற்கோ, ஹிந்த்துத்வாவை எதிர்ப்பத்தற்கோ இஸ்லாமிய பயங்கரவாத்தை மறைமுகமாகவோ, ரகசியமாகவோ ஆதரிப்பது மிகவும் ஆபத்தானது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறேன். ஷாபானு ஜீவானாம்ச வழக்கில் நான் ஷாபானுவை ஆதரித்து எழுதிய கட்டுரைக்காக அடிப்படை வாதிகளால் மிரட்டப்பட்டேன். கவிஞர் ரசூலின் கவிதைத் தொகுப்பை அடிப்படை வாதிகள் எதிர்த்து இயக்கம் நடத்தியபோது அவரை ஆதரித்து நான் எழுதிய கட்டுரை என்னுடை 'காத்திருந்த வேளையில்' தொகுப்பில் இருக்கிறது.

மனோரீதியாகவும் சிந்தனாபூர்வமாகவும் பிறப்பு சார்ந்த அடையாளங்களை ஒருவர் எவ்வளவோ போராடிக் கடந்துவந்தபோதும் இதுபோன்ற விவாதங்களில் ஒருவர் எடுத்த எடுப்பில் இந்த அடையாளங்கலிலிருந்தே பேசத் தொடங்கும்போது உரையாடலின் சாத்தியங்கள் பற்றிய கேள்விகள் எழுகின்றன.

இந்த நீண்ட சுயவிளக்கங்கள் எனக்கு மிகுந்த சோர்வூட்டுகின்றன. இவற்றை படிக்க நேர்ந்த்தற்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். அடுத்த பதிவுகளில் வேறு விஷயங்கள்பற்றிப் பேசலாம்.

மனுஷ்யபுத்திரன்
manushyaputhiran@yahoo.com

Wednesday, February 09, 2005

சுந்தர ராமசாமிக்கு இவ்வளவு கோபம் அவசியமா?

ஜெயேந்திரர் கொலை செய்தாரா இல்லையா என்பதைக் காட்டிலும் பெரிய பிரச்சினையாகிவிட்டது அது தொடர்பாக சுந்தர ராமசாமி வெளியிட்ட ஒரு அறிக்கை. அந்த அறிக்கையில் இப்பிரச்சினையில் தமிழ் எழுத்தாளர்கள் குரல்கொடுக்க வேண்டும் எனக் கேட்டு தமிழ் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிக்கையை பெரும்பாலான பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை. தினமணி மட்டும் அதன் சிலவரிகளை உருவி ஒரு மூலையில் பிரசுரித்திருந்தது. இதைக் கண்டித்து சுரா அவர்கள் தீராநதியில் தனது அறிக்கைக்கும் இதன் வழியாக தமிழ் எழுத்தாளர்களுக்கும் வெகுசன ஊடகங்கள் இழைக்கும் அநீதி குறித்தும் இப்பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மேலும் விரிவாக விளக்கியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நீதிகேட்கும் அக்கட்டுரையும் சிலபகுதிகள் குறைக்கப்பட்டு தீராநதி இதழில் வெளிவர, சுரா இது தொடர்பான மிக விரிவான ஒரு ஆவணத்தை காலச்சுவடு இதழில் பிரசுரித்திருக்கிறார். தனது தினமணி அறிக்கை, தீரா நதி கட்டுரை, அதில் எடிட் செய்யப்பட்ட பகுதிகள் (பெரிய எழுத்தில்), மேலும் கொஞ்சம் தனது நிலைப்பாடுகள், நியாயங்கள், தமிழ் சூழலின் அவலங்கள் என விரியும் அந்த ஆவணம் சங்கர ராமன் கொலைவழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் அளவுக்கு விரிவான ஆதாரங்களைக் கொண்டிருக்கிறது. தமிழ் வாசகன் இந்த ஆவணத்தைப் படித்து தெரிந்துகொள்வது என்ன என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். இதை ஒட்டி மேலும் சில விஷயங்களை நாம் யோசித்துப் பார்க்கலாம்.

நவீன தமிழ் எழுத்தாளர்களின் 'சமூக அக்கறை' குறித்த கேள்விகள் தமிழில் இடது சாரிகளால் தொடர்ந்து எழுப்பட்டு வந்திருக்கின்றன. பல சமயங்களில் அவை சமூக அக்கறையை கோஷங்களாக சுருக்கிப் பார்க்கும் கொச்சையான கேள்விகளாகவே இருந்திருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் தமிழ் சமூகத்தை பற்றி நவீன எழுத்தாளர்களுக்கு அவ்வளவாக எதுவும் தெரியாது என்பதுபோலவே இடதுசாரிகளுக்கும் எதுவும் தெரியாது என்பதையே இவ்விரு தரப்பாரும் எழுதி வந்திருக்கும் பெரும்பாலான இலக்கிய பிரதிகள் உறுதி செய்கின்றன.

ஆனால் அதே சமயம் சமூகத்தின் முக்கியமான நெருக்கடிகள் குறித்து தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏதாவது அபிப்ராயம் இருந்திருக்கிறதா என்ற கேள்வியை முற்றிலும் நியாயமற்றது என்று நாம் ஒதுக்கிவிடமுடியாது. கருத்துச் சொல்வது ஒன்றும் கட்டாயமோ நிர்பந்தமோ அல்ல. ஆனால் சமூகத்தின் மனசாட்சி தூங்கும்போது அவற்றை கலைப்பதில் கலைஞர்கள் முக்கிய பங்காற்றி வந்திருக்கிறார்கள். இதற்காக படுகொலைகளுக்கும் நாடு கடத்தல்களுக்கும் இன்ன பிற கொடுங்கோன்மைகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். ஒவ்வொரு மனித விரோத செயல்பாடும் கலைஞனின் பாதையில் குறுக்கிடுவது கலையின் தவிர்க்க முடியாத விதி. ஆனால் நவீன தமிழ் எழுத்தாளர்களின் பாதையில் இதெல்லாம் எப்போதாவது இடறியிருக்கிறதா என்று யோசிக்கவேண்டும். அரசியல் செயல்பாடுகளோடு நேரடியாக தொடர்புடைய எழுத்தாளர்களைத் தவிர்த்து பிறரது மெளனங்கள் மிக ஆழமாக பதிவாகியிருக்கின்றன.

மொழிப் போராட்டம், வெண்மணிப் படுகொலை, நெருக்கடி நிலை, தர்மபுரியில் நக்சல்பாரி இளைஞர்கள் மீது எம்.ஜி.ஆர் ஆட்சி நடத்திய சட்டவிரோத கொலைகள், சாதிக் கலவரங்கள், தலித்துகள் மீதான படுகொலைகள், இந்தியா முழுக்க இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினர் மீது நடத்திவரும் தாக்குதல்கள், கடந்த சில ஆண்டுகளில் ஜெயலலிதா அரசு ஆடிய பல்வேறு கோரத் தாண்டவங்கள் என எத்தனையோ பிரச்சினைகளில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஒரு வாக்கியம் கூட எழுதியதில்லை. எந்த அரங்கிலும் இதைப் பற்றி மூச்சுவிட்டதில்லை. இதை பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதற்கு ஒருவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் திடீரென பொங்கி எழும் சமூக ஆவேசம்தான் இங்கே பிரச்சினையாகிறது. இந்த ஆவேசத்திற்கு பின்னிருப்பது ஒரு சமூக பிரச்சினையா அல்லது சமூகத்தில் தன்னுடைய இடம் குறித்த பிரச்சினையா?

சங்கராச்சாரியார் விவகாரம் ஒரு குற்றம் தொடர்பான பிரச்சினை. இதற்கு பின்னிருக்கும் நோக்கங்கள் இன்னும் யாருக்கும் சரிவரத் தெரியாத நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் என்ன நிலைப்பாடுகளை எடுப்பது?அசட்டுத்தனமான நிலைப்பாடுகள் எடுப்பது ஜனநாயக உரிமை என்றாலும் எல்லா நிலையிலும் அந்த உரிமையை பயன்படுத்த வேண்டுமா?
தமிழ் எழுத்தாளர்களுக்கு வெகுசன அபிப்பராயங்களில் குறுக்கிடும் அதை பாதிக்கும் சமூக செல்வாக்கு எதுவும் கிடையாது. இதற்கு தமிழ் சமூகத்தின் சீரழிவை மட்டும் நாம் காரணம் காட்டிவிட முடியாது. தமிழ் எழுத்தாளர்கள் வெகுசன இயக்கங்கள் எதிலும் எக்காலத்திலும் தொடர்புகொண்டவர்கள் அல்ல. வெகுசன ஊடகங்களில் அவர்களது புகைப்படங்களோ நேர்காணல்களோ வெளிவருவதனால் அவர்கள் வெகுசன அபிப்ராயங்களை பாதிப்பவர்களாக மாறிவிட முடியாது. தமிழ் சமூகத்திற்கு அவர்களுடைய அபிப்ராயங்கள் தேவைப்படுவதில்லை. ஜெயேந்திரர் கைது வழக்கில் சுந்தர ராமசாமியோ அசோகமித்திரனோ என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு வாசகருக்கு அக்கறை இருக்குமெனில் இப்பத்திரிகைகள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கவே செய்யும். இந்த முக்கியத்துவம் இடையறாத சமூக செயல்பாடுகளின் வழியே உருவாகும் சமூக அதிகாரம். சுந்தர ராமசாமியின் புகைப்பட கண்காட்சி அல்லது அவரது ஐம்பதாண்டு திருமண நிறைவு விழா பற்றி செய்திகள் வெளியிடும் தமிழ் வெகுசன ஊடகங்கள் ஒரு முக்கியமான பிரச்சினையில் அவரது கருத்தை ஏன் பொருட்படுத்த மறுக்கின்றன என்பதை நாம் ஆழமாக யோசிக்க வேண்டும்.

அறிக்கைகளை வெளியிடும் விதம் குறித்து பத்திரிகைகள்மேல் கருணாநிதியும் ஜெயலலிதாவும்கூட தொடர்ந்து குற்றம் சாட்டி வந்திருக்கின்றனர். பத்திரிகைகளுக்கு சில நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் நவீன சிறுபத்திரிகைகள் அளவுக்கு உள்நோக்கங்கள் இருக்குமா என்பது சந்தேகமே. வெகுசன பத்திரிகைகள் எதை முக்கியப்படுத்துகின்றன என்பதற்கு எந்த தர்க்க விதிகளும் இல்லை.

எல்லாவற்றையும்விட ஒரு பத்திரிகையில் ஒரு கருத்து வெளிவருவது அல்லது வெளிவராமல் போவது இரண்டிற்கும் ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா?
எழுத்தாளர்கள் அறிக்கைகள் வெளியிடுவதில் வேறு சில பிரச்சினைகள் இருக்கின்றன. சமீபகாலங்களில் சில பிரச்சினைகள் குறித்த எழுத்தாளர்களின் கூட்டறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. இந்த அறிக்கைகளில் கையெழுத்திடுமாறு தமிழ் எழுத்தாளர்களை கேட்கும்போது அவர் அறிக்கையின் உள்ளடக்கம் பற்றிக் கேட்கிறாரோ இல்லையோ முதலில் கையெழுத்திட்டுள்ள பிற எழுத்தாளர்கள் பற்றிக் கேட்பார். அவர் முற்றிலும் வெறுக்கிற ஒரு எழுத்தாளர் அதில் கையெழுத்திட்டிருந்தால் அப்பிரச்சினையிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வார். அதேபோல இந்த அறிக்கைகளுக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு யாரையெல்லாம் கருத்துக் கேட்கவேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. கூட்டுச் செயல்பாடு பெரும்பாலும் ஒரு குழுச் செயல்பாடுதான். இவையே தமிழ் எழுத்தாளர்களின் சமூகக் குரலின் பின்னிருக்கும் உள்போராட்டங்கள்.

சமீபத்தில் எழுத்தாளர் ப. செயப்பிரகாசம் தொலைபேசியில் அழைத்து 'சுனாமியின்போது தமிழ் தொலைகாட்சிகள் கேளிக்கை நிகழ்ச்சிகளை நிறுத்தாமல் நடத்தியது பற்றி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிடப் போதாகவும் அதில் கையெழுத்திடுமாறும் கேட்டார்.

நல்ல வேளையாக சுனாமியை கண்டித்து தமிழக எழுத்தாளர்கள் இன்னும் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

மனுஷ்ய புத்திரன்
manushyaputhiran@yahoo.com

Monday, February 07, 2005

அநாகரிகத்திற்கு எல்லை இருக்கிறதா?

சுனாமி என்ன ஊழி வந்து இந்த உலகத்தை மூழ்கடித்தாலும் அற்பங்களுக்கு எந்த ஞானமும் வராது என்பதற்கு தமிழக அரசியல்வாதிகளை விட உதாரணம் காட்டுவது கடினம். சுனாமி நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையிலான பெயர்தட்டிச் செல்லும் போட்டிகள் மத்திய மாநில அரசுகளின் உரிமைப் பிரச்சினையாகி சூடு பறக்கும் விவாதங்கள் பறந்துகொண்டிருக்கின்றன. சன் டிவி. திரட்டிய நிதியை வாங்குவதற்கு ஜெயலலிதா நேரம் ஒதுக்காததால் அது பிரதமரிடம் நேரடியாக அளிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கின்றன. சட்ட மன்றத்தில் சுனாமியில் இறந்து ஆடு மாடு கோழிகளுக்குநிவாரணத் தொகை விவரம் அமைச்சரால் அறிவிக்கப்படும்போது முதல்வர் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார். சடலங்களை அகற்றியது ராணுவமா உள்ளூர் துப்புரவுப் பணியாளர்களா என்பதும் பிரச்சினையாகி இருக்கிறது ( ராணுவம் மத்திய அரசைச் சேர்ந்தது. அதாவது தி.மு.க. உள்ளூர் துப்புரவுத்தொழிலாளர்கள் மாநில அரசைச் சேர்ந்தவர்கள். அதாவது அ.தி.மு.க.)

சட்ட மன்றத்தில் நேற்று நடந்தது அநாகரிகத்தின் உச்சக் கட்டம். கருணாநிதி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமலிருக்கவே அந்த சமயத்தில் மருத்துவமனையில் போய்படுத்துக் கொண்டார் என்ற அதிமுகவினரின் பேச்சினால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அதிமுக அமைச்சர் ஜெயகுமார்' கருணாநிதி கைது செய்யபட்டபோது பயந்து அலறியதை டிவியில்தான் பார்த்தோமே' என்று கிண்டலடிக்க பெரும் அமளி ஏற்பட்டது. அமைச்சரின் தரகுறைவான பேச்சை சபாநாயகர் காளிமுத்து வழக்கம்போல அவைக் குறிப்பிலிருந்து நீக்க மறுத்துவிட்டார்.

சுனாமிப் பேரழிவின் கொடுங்கனவிலிருந்து உலகம் இன்னும் விடுபடவில்லை. உயிரிழப்புகளும் பொருள் இழப்புகளும் கணக்கிட்டுத் தீரவில்லை. பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கை முற்றாக அழிந்துபோயிருக்கிறது. உதவிகள் சரிவரக் கிட்டாதவர்களின் கூக்குரல் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளது. மனப் பிறழ்வுக்கு ஆளான குழந்தைகள் கடல் வருகிறது... என்று கதறியவண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உலகெங்கிலுமிருந்து மக்கள் உதவிகள் அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள்.

ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட, அவர்கள் அளித்த அதிகாரத்தை உண்டுவாழும் அரசியல்வாதிகள் இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில்நிவாரணப்பணிகளை மேம்படுத்துவது, ஒருங்கிணைப்பது தொடர்பாக ஆக்கபூர்வமான விவாதங்களை உருவாக்குவதற்குப்பதில் தங்களதுகீழ்த்தரமான சண்டைகளை மீண்டும் ஒருமுறை அரங்கேற்றியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் மடிந்ததைக் காட்டிலும் அதை யார் போய்ப் பார்த்தார்கள், யார் பார்க்கவில்லை என்பதுதான் முக்கியப் பிரச்சினையாகி இருக்கிறது.

பிணந் தின்னிக் கழுகுகள் இறந்த சடலங்களைப் போய் பார்ப்பதற்கும் அரசியல்வாதிகள் போய்ப் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று உண்மையாகவே எனக்குப் புரியவில்லை. கழுகுகள் அப்போதே தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்ளும். அரசியல்வாதிகளின் பசி அடுத்த தேர்தல்வரை நீடிக்கும்.

அரசியல் நாகரிகம்கூடவேண்டாம், குறைந்தபட்ச மனிதாபிமானமும் மனசாட்சி உறுத்தலும் கூடவா இல்லாமல் போகும்?

மனுஷ்ய புத்திரன்
manushyaputhiran@yahoo.com

நன்றி

நண்பர்களே...

உயிர்மை வலைப்பதிவை வரவேற்று உடனடியாக வந்து சேர்ந்த பதிவுகள் மிகவும் உற்சாகம் தருகின்றன. கயல்விழி, மு.மயூரன், நாராயண், தங்கமணி, டிசே தமிழன், ஜெஸ்ரீ, ராதா கிருஷ்ணன், ஹெச்.பக்ருதீன், சுரேஷ் கண்ணண், நண்பர்கள் பி.கே.சிவகுமார், இரா.முருகன்....எல்லோருக்கும் என் பிரியங்கள். வலைபதிவுகளின் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பன் தேசிகனுக்கும் நன்றி.

பி.கே.சிவகுமார், உயிர்மை ஆரம்பித்த பிறகு நான் எழுதுவது குறைந்துபோனது பற்றி எழுதியிருந்தார் .உயிர்மை ஒரு விதத்தில் மிகவும் படைப்பூக்கமுள்ள ஒரு செயல்பாடாக இருந்தபோதும் எனது தனிப்பட்ட எழுத்துக்கள் குறைந்துபோனது அந்தரங்கமான கடும் இழப்புணர்வை ஏற்படுத்துகிறது.(தமிழுக்கு எந்த இழப்பும் இல்லை). ஆனால் இதற்கு பத்திரிகை நெருக்கடிகள் காரணம் என்று முற்றாகக் கருத இயலவில்லை. இதைவிடவும் நெருக்கடியான காலங்களில் நிறைய எழுதியிருக்கிறேன். எப்போது உறைபனி ஒரு படைப்பாளியைச் சூழ்கிறது என்பதற்கான காரணங்கள் மர்மமாகவே இருக்கிறது. இத்தகைய உலர்ந்த பருவங்களை எல்லா எழுத்தாளனும் அவ்வப்போது கடந்துகொண்டுதான் இருக்கிறான். எழுத்து எனக்கு தொழிலுமல்ல, தவமுமல்ல. அது ஒரு வாதை. ஒரு கனவின் திடுக்கிடல். தற்செயலாக வந்து சேரும் காதலின் ஸ்பரிசஸம்...சரி இப்படியே போனால் அதிகமாக இதைரொமாண்டிசிஸ் செய்தது போலாகிவிடும்.

ஊற்றின்மீது வந்து படியும் சாம்பலை ஊதி அகற்ற ஒரு பொழுது வரவேண்டியிருக்கிறது.

மனுஷ்ய புத்திரன்
manushyaputhiran@yahoo.com

ஓர் அறிமுகம்

ஓர் அறிமுகம்


நண்பர்களேஉயிர்மை வலைப்பதிவில் நான் சார்ந்து வாழும் உலகத்திலிருக்கும் எதைப்பற்றி வேண்டுமானாலும் உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.இலக்கியம், சமூகம், வாழ்க்கை சார்ந்த எப்பொருள் சார்ந்தும் நீங்கள் உரையாடலாம். உங்கள் மறுமொழிகளை உள்ளிடலாம். uyirmmai@yahoo.co.in என்ற முகவரிக்கு எழுதலாம்.


என்னைப் பற்றி:

மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் நவீன கவிதைகளும் இலக்கிய, சமூக விமர்சனங்கள் எழுதிவருகிறேன்.

எனது நூல்கள்:

கவிதைத் தொகுப்புகள்

மனுஷ்ய புத்திரனின் கவிதைகள்(1983)
என் படுக்கையறையில் யாரோஒளிந்திருக்கிறார்கள்(1993)
இடமும் இருப்பும்(1998)
நீராலானது(2001)
மணலின் கதை(2004)

கட்டுரைத் தொகுப்புகள்:

எப்போதும் வாழும் கோடை(2004)
காத்திருந்த வேளையில்(2004)

உயிர்மையைப் பற்றி:

உயிர்மை நவீன இலக்கியம் மற்றும் சிந்தனைகளுக்கான மாத இதழ். 2004 செப்டம்பரிலிருந்து வெளிவருகிறது.

உயிர்மை பதிப்பகம் இதுவரை சுமார் 45 நூல்களை பதிப்பித்திருக்கிறது. சுஜாதா, ஆதவன், ஜெயமோகன், எஸ் .ராமகிருஷ்ணன், எம்.யுவன், வாஸந்தி, காஞ்சனா தாமோதரன், தியடோர் பாஸ்கரன், சு.கி. ஜெயகரன் உள்ளிட்ட பலரது நூல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் உயிர்மையின் நூல்கள் பற்றிய விரிவான தகவல்கள் இவ்வலைப் பதிவில் இடம்பெறும்.

Saturday, February 05, 2005

உயிர்மை உங்களை அன்புடன் வரவேற்கிறது

உயிர்மை உங்களை அன்புடன் வரவேற்கிறது
உயிர்மை இலக்கிய இதழின் வலைப்பதிவு இது.