ஜெயேந்திரர் கொலை செய்தாரா இல்லையா என்பதைக் காட்டிலும் பெரிய பிரச்சினையாகிவிட்டது அது தொடர்பாக சுந்தர ராமசாமி வெளியிட்ட ஒரு அறிக்கை. அந்த அறிக்கையில் இப்பிரச்சினையில் தமிழ் எழுத்தாளர்கள் குரல்கொடுக்க வேண்டும் எனக் கேட்டு தமிழ் பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிக்கையை பெரும்பாலான பத்திரிகைகள் கண்டுகொள்ளவில்லை. தினமணி மட்டும் அதன் சிலவரிகளை உருவி ஒரு மூலையில் பிரசுரித்திருந்தது. இதைக் கண்டித்து சுரா அவர்கள் தீராநதியில் தனது அறிக்கைக்கும் இதன் வழியாக தமிழ் எழுத்தாளர்களுக்கும் வெகுசன ஊடகங்கள் இழைக்கும் அநீதி குறித்தும் இப்பிரச்சினையில் தனது நிலைப்பாட்டை மேலும் விரிவாக விளக்கியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். நீதிகேட்கும் அக்கட்டுரையும் சிலபகுதிகள் குறைக்கப்பட்டு தீராநதி இதழில் வெளிவர, சுரா இது தொடர்பான மிக விரிவான ஒரு ஆவணத்தை காலச்சுவடு இதழில் பிரசுரித்திருக்கிறார். தனது தினமணி அறிக்கை, தீரா நதி கட்டுரை, அதில் எடிட் செய்யப்பட்ட பகுதிகள் (பெரிய எழுத்தில்), மேலும் கொஞ்சம் தனது நிலைப்பாடுகள், நியாயங்கள், தமிழ் சூழலின் அவலங்கள் என விரியும் அந்த ஆவணம் சங்கர ராமன் கொலைவழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் அளவுக்கு விரிவான ஆதாரங்களைக் கொண்டிருக்கிறது. தமிழ் வாசகன் இந்த ஆவணத்தைப் படித்து தெரிந்துகொள்வது என்ன என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். இதை ஒட்டி மேலும் சில விஷயங்களை நாம் யோசித்துப் பார்க்கலாம்.
நவீன தமிழ் எழுத்தாளர்களின் 'சமூக அக்கறை' குறித்த கேள்விகள் தமிழில் இடது சாரிகளால் தொடர்ந்து எழுப்பட்டு வந்திருக்கின்றன. பல சமயங்களில் அவை சமூக அக்கறையை கோஷங்களாக சுருக்கிப் பார்க்கும் கொச்சையான கேள்விகளாகவே இருந்திருக்கின்றன. பிரச்சினை என்னவென்றால் தமிழ் சமூகத்தை பற்றி நவீன எழுத்தாளர்களுக்கு அவ்வளவாக எதுவும் தெரியாது என்பதுபோலவே இடதுசாரிகளுக்கும் எதுவும் தெரியாது என்பதையே இவ்விரு தரப்பாரும் எழுதி வந்திருக்கும் பெரும்பாலான இலக்கிய பிரதிகள் உறுதி செய்கின்றன.
ஆனால் அதே சமயம் சமூகத்தின் முக்கியமான நெருக்கடிகள் குறித்து தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏதாவது அபிப்ராயம் இருந்திருக்கிறதா என்ற கேள்வியை முற்றிலும் நியாயமற்றது என்று நாம் ஒதுக்கிவிடமுடியாது. கருத்துச் சொல்வது ஒன்றும் கட்டாயமோ நிர்பந்தமோ அல்ல. ஆனால் சமூகத்தின் மனசாட்சி தூங்கும்போது அவற்றை கலைப்பதில் கலைஞர்கள் முக்கிய பங்காற்றி வந்திருக்கிறார்கள். இதற்காக படுகொலைகளுக்கும் நாடு கடத்தல்களுக்கும் இன்ன பிற கொடுங்கோன்மைகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள். ஒவ்வொரு மனித விரோத செயல்பாடும் கலைஞனின் பாதையில் குறுக்கிடுவது கலையின் தவிர்க்க முடியாத விதி. ஆனால் நவீன தமிழ் எழுத்தாளர்களின் பாதையில் இதெல்லாம் எப்போதாவது இடறியிருக்கிறதா என்று யோசிக்கவேண்டும். அரசியல் செயல்பாடுகளோடு நேரடியாக தொடர்புடைய எழுத்தாளர்களைத் தவிர்த்து பிறரது மெளனங்கள் மிக ஆழமாக பதிவாகியிருக்கின்றன.
மொழிப் போராட்டம், வெண்மணிப் படுகொலை, நெருக்கடி நிலை, தர்மபுரியில் நக்சல்பாரி இளைஞர்கள் மீது எம்.ஜி.ஆர் ஆட்சி நடத்திய சட்டவிரோத கொலைகள், சாதிக் கலவரங்கள், தலித்துகள் மீதான படுகொலைகள், இந்தியா முழுக்க இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினர் மீது நடத்திவரும் தாக்குதல்கள், கடந்த சில ஆண்டுகளில் ஜெயலலிதா அரசு ஆடிய பல்வேறு கோரத் தாண்டவங்கள் என எத்தனையோ பிரச்சினைகளில் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் ஒரு வாக்கியம் கூட எழுதியதில்லை. எந்த அரங்கிலும் இதைப் பற்றி மூச்சுவிட்டதில்லை. இதை பற்றியெல்லாம் பேசாமல் இருப்பதற்கு ஒருவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் திடீரென பொங்கி எழும் சமூக ஆவேசம்தான் இங்கே பிரச்சினையாகிறது. இந்த ஆவேசத்திற்கு பின்னிருப்பது ஒரு சமூக பிரச்சினையா அல்லது சமூகத்தில் தன்னுடைய இடம் குறித்த பிரச்சினையா?
சங்கராச்சாரியார் விவகாரம் ஒரு குற்றம் தொடர்பான பிரச்சினை. இதற்கு பின்னிருக்கும் நோக்கங்கள் இன்னும் யாருக்கும் சரிவரத் தெரியாத நிலையில் தமிழ் எழுத்தாளர்கள் என்ன நிலைப்பாடுகளை எடுப்பது?அசட்டுத்தனமான நிலைப்பாடுகள் எடுப்பது ஜனநாயக உரிமை என்றாலும் எல்லா நிலையிலும் அந்த உரிமையை பயன்படுத்த வேண்டுமா?
தமிழ் எழுத்தாளர்களுக்கு வெகுசன அபிப்பராயங்களில் குறுக்கிடும் அதை பாதிக்கும் சமூக செல்வாக்கு எதுவும் கிடையாது. இதற்கு தமிழ் சமூகத்தின் சீரழிவை மட்டும் நாம் காரணம் காட்டிவிட முடியாது. தமிழ் எழுத்தாளர்கள் வெகுசன இயக்கங்கள் எதிலும் எக்காலத்திலும் தொடர்புகொண்டவர்கள் அல்ல. வெகுசன ஊடகங்களில் அவர்களது புகைப்படங்களோ நேர்காணல்களோ வெளிவருவதனால் அவர்கள் வெகுசன அபிப்ராயங்களை பாதிப்பவர்களாக மாறிவிட முடியாது. தமிழ் சமூகத்திற்கு அவர்களுடைய அபிப்ராயங்கள் தேவைப்படுவதில்லை. ஜெயேந்திரர் கைது வழக்கில் சுந்தர ராமசாமியோ அசோகமித்திரனோ என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி ஒரு வாசகருக்கு அக்கறை இருக்குமெனில் இப்பத்திரிகைகள் அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கவே செய்யும். இந்த முக்கியத்துவம் இடையறாத சமூக செயல்பாடுகளின் வழியே உருவாகும் சமூக அதிகாரம். சுந்தர ராமசாமியின் புகைப்பட கண்காட்சி அல்லது அவரது ஐம்பதாண்டு திருமண நிறைவு விழா பற்றி செய்திகள் வெளியிடும் தமிழ் வெகுசன ஊடகங்கள் ஒரு முக்கியமான பிரச்சினையில் அவரது கருத்தை ஏன் பொருட்படுத்த மறுக்கின்றன என்பதை நாம் ஆழமாக யோசிக்க வேண்டும்.
அறிக்கைகளை வெளியிடும் விதம் குறித்து பத்திரிகைகள்மேல் கருணாநிதியும் ஜெயலலிதாவும்கூட தொடர்ந்து குற்றம் சாட்டி வந்திருக்கின்றனர். பத்திரிகைகளுக்கு சில நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் நவீன சிறுபத்திரிகைகள் அளவுக்கு உள்நோக்கங்கள் இருக்குமா என்பது சந்தேகமே. வெகுசன பத்திரிகைகள் எதை முக்கியப்படுத்துகின்றன என்பதற்கு எந்த தர்க்க விதிகளும் இல்லை.
எல்லாவற்றையும்விட ஒரு பத்திரிகையில் ஒரு கருத்து வெளிவருவது அல்லது வெளிவராமல் போவது இரண்டிற்கும் ஏதாவது முக்கியத்துவம் இருக்கிறதா?
எழுத்தாளர்கள் அறிக்கைகள் வெளியிடுவதில் வேறு சில பிரச்சினைகள் இருக்கின்றன. சமீபகாலங்களில் சில பிரச்சினைகள் குறித்த எழுத்தாளர்களின் கூட்டறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. இந்த அறிக்கைகளில் கையெழுத்திடுமாறு தமிழ் எழுத்தாளர்களை கேட்கும்போது அவர் அறிக்கையின் உள்ளடக்கம் பற்றிக் கேட்கிறாரோ இல்லையோ முதலில் கையெழுத்திட்டுள்ள பிற எழுத்தாளர்கள் பற்றிக் கேட்பார். அவர் முற்றிலும் வெறுக்கிற ஒரு எழுத்தாளர் அதில் கையெழுத்திட்டிருந்தால் அப்பிரச்சினையிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வார். அதேபோல இந்த அறிக்கைகளுக்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு யாரையெல்லாம் கருத்துக் கேட்கவேண்டும் என்று ஒரு கணக்கு இருக்கிறது. கூட்டுச் செயல்பாடு பெரும்பாலும் ஒரு குழுச் செயல்பாடுதான். இவையே தமிழ் எழுத்தாளர்களின் சமூகக் குரலின் பின்னிருக்கும் உள்போராட்டங்கள்.
சமீபத்தில் எழுத்தாளர் ப. செயப்பிரகாசம் தொலைபேசியில் அழைத்து 'சுனாமியின்போது தமிழ் தொலைகாட்சிகள் கேளிக்கை நிகழ்ச்சிகளை நிறுத்தாமல் நடத்தியது பற்றி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிடப் போதாகவும் அதில் கையெழுத்திடுமாறும் கேட்டார்.
நல்ல வேளையாக சுனாமியை கண்டித்து தமிழக எழுத்தாளர்கள் இன்னும் அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.
மனுஷ்ய புத்திரன்
manushyaputhiran@yahoo.com