சங்கராச்சாரியார் விவகாரத்தில் ஜெயலலிதா அரசு காட்டி வரும் தீவிரம் இது ஒரு குற்ற வழக்கு மட்டுமல்ல என்ற சந்தேகத்தை ஒவ்வொரு நாளும் தீவிரமடையச் செய்து வருகிறது. அண்மையில் ஆடிட்டர் குருமூர்த்திமீது சங்கராச்சாரியார் விவகாரம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்படி தெரிவிக்கவேண்டிய தகவல்களை மறைத்தல், உயர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் கூற மறுத்தல், போலி ஆதாரங்களை அளித்தல் என பல்வேறு பிரிவுகளில் குற்றம் சாட்டப்ப்படுள்ளது.. சோ, த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோர் குருமூர்த்தியின் கட்டுரைகளை பிரசுரித்ததற்காக காவல்துறையினரால் விசரிக்கப்பட்டிருக்கின்றனர். ஜெயலலிதா அரசு பத்திகைகள் மேல் நடத்திவரும் தாக்குதல்களின் இன்னொரு அத்தியாயமே இந்த வழக்கும் விசாரணைகளும். அரசின் அதிகாரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகள் பற்றிய கேள்விகளை இது மீண்டும் ஒரு முறை விவாதத்திற்குக் கொண்டுவருகிறது.
சோ போன்றவர்கள் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஒடுக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது அதில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான பிரிவுகளை எந்தத் தயக்கமும் இன்றி ஆதரித்து நின்றார்கள். அவை தங்களிடம் வராது என்ற ஒரே நம்பிக்கைதான் அதற்குக் காரணம். குருமூர்த்தியின் கருத்துக்கள் இந்துத்வா அமைப்புகள் இப்பிரச்சினையில் வெளியிட்டுவரும் அறிக்கைகளின் இன்னொரு பிரதி மட்டுமே. இந்த வழக்கிற்கு எதிரான கண்மூடித்தனமான எதிர்நிலையை அவரது கட்டுரைகள் வெளிப்படுத்தின. அவை ஒரு பத்திரிகையாளனின் ஆய்வு நிலை சார்ந்த சுயேச்சையான அபிப்ராயங்கள் அல்ல. அது குற்றம் சாட்டபட்ட தரப்பின் நிலைப்பாடு. ஆனால் ஒரு பிரச்சினையில் ஜெயலலிதாவிற்கு உவக்காத கருத்துக்களை சொன்னால் நக்கீரன் கோபால் சந்தித்த அதே விதியைத்தான் சோவும் குருமூர்த்தியும் சந்திக்கவேண்டியிருக்கும் என்பற்கு சாட்சியே இந்த வழக்கு.
பத்திரிகைளில் எழுதப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் தொடர்பாக போலீசிற்கு விளக்கமளிக்கவேண்டும் என்பதை ஒரு விதியாகக் கொண்டால் தமிழக காவல்துறை தனது முழுநேரப் பணியாக அதையே செய்யவேண்டியிருக்கும் .காவல் துறைக்கு பதிலளிக்க மறுப்பதும் அதனிடமிருந்து தகவல்களை மறைப்பதும் ஒரு பத்திரிகையாளனின் ஆதார நெறிகள். இவற்றிற்கு எதிரான சட்டப் பிரிவுகள் நீடித்திருப்பது மிகவும் ஆபத்தானது. அனுமானங்கள், சந்தேகங்கள், மறைமுகத் தகவல்கள் அடிப்படையில் ஒரு பத்திரிகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும் செய்திகளும் 'உண்மைகள்' அல்ல. ஒரு பிரச்சினையின் மையத்தை நெருங்குவதற்கான பல்வேறு நிலைகளிலான பாதைகள் அவை. அவை ஏற்கப்படவோ மறுக்கபடவோ செய்யலாம். ஆனால் அவற்றை அழிக்க முயற்சிப்பது இந்த அரசிற்கு கருத்துக்கள் தொடர்பாக இருக்கும் பதட்டத்தையே காட்டுகிறது.
இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினைகளில் எடுக்கப்படும் நிலைப்பாடுகள் பல சமயங்களில் பெரிதும் சுயசார்புகளை மையமாகக்கொண்டிருக்கின்றன. இவை ஒருபிரச்சினையின் ஆதாரமான கேள்விகளை பலவீனமடையச் செய்துவிடுகின்றன. பாதிக்கப்படும் நபர்களின் பின்புலங்கள் முரண்பாடுகளைக் காட்டிலும் முக்கியமானவை ஒரு சமூகத்தில் அரசு எந்திரத்தின் அதிகாரத்திற்கும் சிவில் உரிமைளுக்கும் இடையிலான பிரச்சினைகள். இந்த உரிமைகளை நாம் ஒருமுறை பாதுகாக்கத் தவறினால் அவற்றை மீண்டும் அடைவது கடினம். இங்கு பத்திரிகையாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பல சயங்களில் இரட்டை நிலைப்பாடுகளே இருக்கின்றன. ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகளில் குறைந்த பட்ச அளவில்கூட பொதுக் கருத்துக்கள் எட்டப்படுவதில்லை.
சுதந்திரம் பிளவுபடாதது.
மனுஷ்ய புத்திரன்
உயிர்மை மார்ச் 2005 தலையங்கம்
uyirmmai@gmail.com