Monday, September 29, 2008
நடிகர் விஜய்யின் அப்பாவிடம் கேட்ட மறக்க முடியாத கேள்வி
தமிழ் மகன்
நான் சினிமா நிருபராகப் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்கள் சுவையானவை.
தினமணியில் திரு. சம்பந்தம் ஆசிரியராக இருந்த நேரம். நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் (அப்போது எஸ்.ஏ. சந்திரசேகர்) ஆசிரியரைப் பார்க்க வந்திருந்தார்.
விஜய்யின் மூன்று படங்கள் ஒரே நேரத்தில் வெள்ளி விழா கொண்டாடிய நேரம். `பூவே உனக்காக', `ப்ரியமுடன்', `ஒன்ஸ்மோர்' என்று படங்களின் வெற்றிப் பட்டியல் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தச் சரியான சந்தர்ப்பத்தில் மகனுக்குத் திருமணம் வைத்திருந்தார். திருமணத்துக்கு ஆசிரியரை வரவேற்கத்தான் அவர் வந்திருந்தார்.
``பையனுக்கு கல்யாணம் வைத்திருக்கிறேன்.அவசியம் நீங்கள் வந்திருந்து வாழ்த்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். ``இவர் எங்கள் சினிமா எடிட்டர். இவர் வருவார். எனக்கு நேரம் இருக்குமானு தெரியலை'' என்று என்னைக் கைகாட்டினார்.
பிறகு பொதுவாக சினிமா பற்றி பேசினார்கள். எடிட்டர் ஒரு முறை சிவாஜிகணேசனைச் சந்தித்திக்க நேர்ந்ததைப் பற்றிப் பேசினார். கிளம்பும்போது சிவாஜி ``தீர்த்தம் சாப்பிட்டுட்டுப் போறீங்களா'' என்றாராம்.
அவரும் சிவாஜிகணேசன் பற்றி ஏதோ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
கிளம்பும்போது எடிட்டர் மறக்காமல் ஒரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வியை எஸ்.ஏ.சந்திரசேகரன் ஜென்மத்துக்கும் மறந்திருக்க மாட்டார், அவருடைய ஞாபக சக்தி வலுவானதாக இருந்தால்.
தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/
வலது சாரி அரசியலின் மூன்று முகங்கள்
மாயா
இந்திய வலது சாரி அரசியலைப் பற்றிய கட்டுரையில் அத்வானி, மோடிக்கு அடுத்து அப்துல் கலாமின் பெயர் ஏன் இடம் பிடித்தது என்று பலருக்கு ஆச்சரியமும் குழப்பமும் ஏற்படலாம். கேட்க பொருத்தமில்லாதது அந்த பெயர் வரிசைதான் இன்று வலது சாரி அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு வைத்திருக்கும் வியூகம். 2009 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. ஐந்து ஆண்டுகளாக தில்லியில் நாற்காலியை தேய்த்துக்கொண்டிருந்த காங்கிரஸ் ஏற்கனவே பா.ஜ.கவின் வெற்றிக்கு ஆழமான அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ஆனால் பா.ஜ.க அதோடு திருப்தியடையவில்லை. தங்களது வனவாசத்தை முடித்து மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பா.ஜ.க ஒரு சாத்வீகமான முகம், ஒரு இந்துத்துவா முகம், ஒரு பயங்கரவாத எதிர்ப்பு முகம் என்ற மூன்றைக் கொண்டு களமிறங்குகிறது.
தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/
மனம் பிறந்த சட்டங்கள்
ஆர். அபிலாஷ்
இந்திய கற்பழிப்பு சட்டம் கற்பழிப்பாளர்களுக்கு பலவகைகளில் ஆதரவானது. உதாரணமாய் இதைப் படியுங்கள்.
பிரிவு 155(4) இந்திய சாட்சிய சட்டம்: "ஒரு ஆண் கற்பழிப்பு அல்லது வற்புறுத்தப்பட்ட பாலுறவுக்காய் நீதிவிசாரணை செய்யப்படும்போது, குற்றத்துக்கு பலியானவர் பொதுவாய் ஒழுக்கமீறியவராய் காட்டப்படலாம்"
அதாவது பாலியல் ஒழுக்கம் மீறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை செல்லுபடியாகாது என்று இச்சட்டம் சொல்லுகிறது. இங்கு ஒழுக்கம் என்ற வார்த்தையை கவனிக்கவும்.
தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/
ஒரு பால் உறவு: ஏனிந்த பதட்டம்?
வாஸந்தி
நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில் பல சூடான விவாதங்கள் அங்கு அரசியல் பரிணாமம் பெற்றன. அதில் முக்கியமான ஒன்று ஓரினத் திருமணங்கள். காலிஃபோர்னியாவில் அப்படிப்பட்ட திருமணங்கள் நடத்த மேயர் அனுமதி அளித்தவுடன் நூற்றுக்கணக்கான ஓரின ஜோடிகள் அங்கு பதிவு செய்துகொள்ள விரைந்தார்கள். வாஷிங்டனில் இருந்த ரிபப்ளிகன் அரசு அரண்டு போயிற்று. கிறித்துவ மதகுருமார்கள் கண்டனம் தெரிவித்தார்கள். ஓரின உறவே தவறு என்கையில் ஓரின திருமணத்தை எப்படி அனுமதிப்பது? 'மீண்டும் ஜனித்த கிறித்துவர்" என்று சொல்லப்படும் அதிபர் புஷ் இத்தகைய திருமணங்கள் இயற்கைக்கு விரோதமானவை என்றார். திருமண பந்தம் பதிவு செய்யப்பட்டாலே அமெரிக்காவில் அன்றாட வாழ்விற்கு சௌகர்யம். சில சலுகைகள் உண்டு. அதனாலேயே ஓரின் உறவு வைத்து குடும்பம் செய்பவர்கள் அதை முறைப்படி சட்டப்பதிவு செய்து கொள்ள ஆர்வப்பட்டார்கள். அங்கு ஓரின உறவுகளின் இருப்பு ஓரளவுக்குப் பழகிப்போன விஷயமாக ஏற்கப்பட்டிருந்தாலும் சகஜமான விஷயம் இல்லை. பழமைவாதிகள் அதை அங்கீகரிக்க இன்றும் மறுத்து வருவது வியப்பில்லை. முற்போக்கு வாதிகளாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்ளும் ஜனநாயக வாதிகளும் அதை முழுமையாக ஏற்கவில்லை.
தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/
முகேஷ் அம்பானி-அனில் அம்பானி: அபூர்வ சகோதரர்கள்
மனோஜ்
போட்டுக் கொடுப்பதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நேரடியாக போட்டுக் கொடுப்பது. மற்றொன்று, போகிறபோக்கில் நாசூக்காக போட்டுக் கொடுப்பது. முகேஷ் அம்பானி இரண்டாம் வகை. அவர் போட்டுக் கொடுத்தது தன் தம்பியைத்தான். எங்கே, எதற்கு என்று போவதற்கு முன் உலகின் பணக்கார சகோதரர்களின் குடும்பக் கதைக்குள் கொஞ்சம் சென்று வரலாம். இந்தியாவின் மிகப்பெரும் பிசினஸ் சாம்ராஜ்யத்தை நிறுவிய திருபாய் அம்பானியின் செல்ல புதல்வர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி. அப்பாவிடம் அமைதியாக அடங்கி, ஒடுங்கி மும்பையில் வளர்ந்தவர்கள்
தொடர்ந்து வாசிக்க..................
http://www.uyirmmai.com/
இன்னும் பல சிறப்பு ஆக்கங்களுடன்
இந்த வார உயிரோசை இதழ் உங்களுக்காக.........................
http://www.uyirmmai.com/
Wednesday, September 24, 2008
ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?
- சஞ்சித்
.
முழுமையாக படிக்க
வாருங்கள் உயிரோசை இந்த வார இதழுக்கு...
http://www.uyirmmai.com/
Tuesday, September 23, 2008
சங்க இலக்கியமும் திராவிட அரசியலும்
சங்க இலக்கியமும் திராவிட அரசியலும்...
தமிழவன்
பாரதியாருடைய காலத்தில் சங்க இலக்கியம் ஓரளவு பரவி எல்லோர் கவனத்தையும் கவர்ந்தாலும் பெரும்பான்மை பிராமணர்களைப் போல பாரதியும் சங்க இலக்கியத்தால் பாதிப்படையவில்லை. அவருடைய காலத் தமிழ் முழுசும் சங்க இலக்கியத்தால் பாதிப்பு அடையவில்லை. பாரதி தாசன் எப்படித் தன் இலக்கியத்தை முழுமையாய் சங்க இலக்கியத்துக்குள் கொண்டுவந்தாரோ அந்த அளவு பாரதியைச் சங்க இலக்கியப் படிப்பு பாதிக்காத சூழல் அன்று இருந்திருக்கிறது. ஆனால் பாரதி காலம் வரை தமிழில் இல்லாத அனைத்திந்தியா, ஒரு சிந்தனைச் சட்டகமாய்த் தமிழிலக்கியத்தில் பாரதி காலத்தில் வருகிறது. இதற்கு இலக்கியக்காரணம் இல்லை; அரசியல் காரணம் இருக்கிறது. சுதந்திரப் போர் தமிழில் அதுவரை இல்லாத ஒரு விஷயத்தை - அனைத்திந்தியாவை - கொண்டுவந்து சேர்க்கிறது. காங்கிரஸ் கட்சி 1967-ல் தமிழகத்தில் வேரறுக்கப்பட்டதற்கும் அன்றிலிருந்து தமிழ்ப்பண்பாட்டை அது பாதிக்காத ஒரு வடநாட்டுக் கட்சியாகவே தொடந்து மிளிர்வதற்கும் ஆழமான பண்பாட்டுக் காரணம் இருக்கிறது. எல்லோரும் அரசியல் காரணம் என்று கருதினாலும் அது அரசியல் காரணமல்ல; பண்பாட்டுக் காரணம்- அதாவது சங்க இலக்கியம் தன்னைத் தமிழ் மண்ணில் நிலைநிறுத்திய செயல்தான் 1967-இலிருந்து காங்கிரஸ் பண்பாட்டைத் தமிழகத்தில் முடிவுக்குக் கொண்டு வந்தது. 1905 வாக்கில் பாரதிமூலம் தொடங்கப்பட்ட ஒரு - அனைத்திந்திய - அடையாளத்தை, சங்க இலக்கியம் கடந்த சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழகத்தில் மாற்றியுள்ளது. இதற்கு மாற்றான அனைத்திந்திய பிரதேசங்களின் பண்பாட்டைக் கொண்டு வரும் அனைத்தியக் கடமையைச் செய்யாததே திராவிடக்கட்சிகளின் அனைத்திந்தியத் தோல்வி. முரசொலி மாறனை அவருடைய மாநில சுயாட்சி என்ற சிறப்புப்புத்தகம் சார்ந்து நினைவுநாள் கொண்டாடாமல் வேறு முறையில் கொண்டாடியபோதே திராவிடச் சிந்தனை இந்திய அரசியலில் உயர்ந்தோர் எதிர்பார்த்த பயனைத் தராமல் தோல்வியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது தெரிந்தது. ஓரளவு வி.பி. சிங் மூலமும், மாயாவதி மூலமும் திராவிடச்சிந்தனைகள் அனைந்திந்தியாவுக்கும் போன ஆரம்பக்கட்டம் முடிந்துவிட்டது போலுள்ளது
முழுமையாக படிக்க
வாருங்கள் உயிரோசை இந்த வார இதழுக்கு...
http://www.uyirmmai.com/
Sunday, September 14, 2008
தில்லி குண்டு வெடிப்புகள் ; நெருங்கி வரும் அபாயம்
டைம்ஸ் ஆஃப் இந்தியா இன்று helpless? என்ற தலைப்பில் தில்லி குண்டுவெடிப்புகள் பற்றிய செய்தியினை வெளியிட்டிருக்கிறது. இந்த தலைப்பின் பின் இருக்கும் அச்சமும் நம்பிக்கையின்மையும் நாடு முழுக்க பரவிவரும் பீதியின் அடையாளங்களே. இது தொடர்கதையாகிவிட்டது. மீண்டும் அப்பாவிகளும் எளிய மக்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். நடைபாதையில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கொல்லபட்ட பின்பு எஞ்சிய ஒருவர் கேட்கிறார் நாங்கள் என்ன தவறு செய்தோம்?' என்று.
முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்திருக்கிறார். ஏதோ இது சட்ட ஒழுங்கு பிரச்சினை என்பதுபோல. இந்த அபத்தமான பல்லவி ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலின்போதும் பாடப்படுகிறது. இந்த பயங்கரவாத வலைப் பின்னலை கண்டுபிடிக்க முடியாத மொத்த அரசு அமைப்பின் தோல்வியை கொடூரமான சட்டங்களை இயற்றுவதன் வாயிலாக தடுத்து நிறுத்தமுடியாது. இந்தக் குற்றங்களை இழைப்பவர்களின் தொடர்புகளும் அதற்கு பின் இருக்கும் மனோபாவமும் எல்லா சட்டரீதியான அச்சுறுத்தல்களையும் கடந்தவை.....
இக்கட்டுரையை தொடர்ந்து வாசிக்க வாருங்கள் உயிர்மை இணைய தளத்தின் மனுஷ்ய புத்திரன் பக்கங்களுக்கு...
தில்லி குண்டு வெடிப்புகள் ; நெருங்கி வரும் அபாயம்
Tuesday, September 09, 2008
உயிரோசை இந்த வார இதழில்...
http://www.uyirmmai.com/
உயிரோசை 8.9.2008 இதழில்..............
கட்டுரை
பெரியவர்களின் உலகத்தில் ஒரு அப்பாவிச் சிறுவன்
அரங்கத்தின் விளக்குகளெல்லாம் அணையவும் நம் முன்னால் இருக்கும் வெள்ளித் திரையில் நம்முடைய முழு எதிர்பார்ப்புகளும் குவியவும் செய்கிற அந்த நிமிடத்துக்கு இணையாக வேறொன்றும் கிடையாது என்று சொல்கிறார் பிரபல திரைப்பட விமரிசகியான பவுலின் கீல். நிஜம்தான். அதுபோல வேறொரு நிமிஷம் இல்லைதான். சினிமா போல வேறொரு அனுபவமும் இல்லை.
-சி.வி. பாலகிருஷ்ணன்
பீகாரை வாட்டும் ஊழிப் பெரு வெள்ளம்
பருவக் கால ஓட்டத்தால் பாதிப்புகளை ஏற்படுத்துவதால் பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் கோஸி நதி இந்த வருடம் ஏற்படுத்திய அழிவை, துயரம் என்று சாதாரணமாக வகைப்படுத்த முடியாது. இமய மலையிலிருந்து வட இந்தியாவின் சமவெளிக்குக் கிழக்கு பீகார் வழியாகச் செல்லும் தனது வழக்கமான பாதையிலிருந்து விலகி சற்றும் சம்பந்தமில்லாத மேற்கு பீகாரில் புகுந்து, வீடுகள், வயல்கள் வழியாக தனக்குப் புதிய பாதை அமைத்துக்கொண்டு கடலைத் தேடி ஓடுகிறது கோஸி. அதன் பாதையிலிருந்து பெரும்பாலான மனித நாகரிகத்தின் தடங்கள் துடைத்தகற்றப்பட்டுவிட்டன.
-மாயா
சல்மான் ருஷ்டியின் கொமேனியன் ஸ்பரிசம்
பிரித்தனில் புகலிடம் தேடிய சல்மான் ருஷ்டியின் பாதுகாப்புக்காக பிரித்தானிய அரசு நியமித்த பாதுகாப்புப் படையின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் இவான்ஸ். அந்த அனுபவங்களைத்தான் புத்தகமாக எழுதியிருக்கிறார். புத்தகம் இன்னும் வெளியாகவில்லை. அதில் தன்னைப் பற்றி எழுதியிருப்பவை அவதூறுகள்; தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கமேற்படுத்தும் நோக்கத்தில் இட்டுக்கட்டியவை. தன்னுடைய ஆளுமையை அவமதிக்கும் வகையில் கற்பனையான தகவல்களால் திணிக்கப் பட்டவை. இது ருஷ்டியின் வாதம்.
-சுகுமாரன்
அணு ஒப்பந்தம் : அம்பலமான தேசிய பொய்
இந்தியா 'மகத்தான' வெற்றி பெற்றிருக்கிறது. அணு எரிபொருள் வாங்க 34 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கிவிட்டது. 45 நாடுகள் கூட்டமைப்பு பெரிய மனது வைத்து அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. இனி அணு உலைகளில் எரிபொருளைப் போட்டு மின்சார உற்பத்தியை பெருக்கி நாட்டை ஜொலிக்கச் செய்யலாம். அப்புறம் மெதுவாக வல்லரசாகி விடலாம்.
சமீபத்தில் இத்தனை திடுக்கிடும் திருப்பங்களுடன் எந்த உலக நிகழ்வும் நடந்ததில்லை.
-மனோஜ்
நீதிபதிகளா? மதகுருக்களா?
சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு விவாகரத்துக் கோரிக்கையை நிராகரித்த வழக்கு அதற்குச் சரியான உதாரணம். பதினாறு ஆண்டுகளாக நரேந்திர குமார் வர்மா என்ற நபர் தன் மனைவியிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருபவர். மணவாழ்வு முறிந்து ஒரு தம்பதி பத்தாண்டுகளுக்கு மேல் பிரிந்து வாழ்ந்திருந்தால் விவாகரத்துப் பெறுவதில் என்ன சிக்கல் இருக்கமுடியும் என்றுதானே நாம் நினைப்போம்? அதுதான் இங்கு இல்லை. இந்திய விவாகரத்துச் சட்டத்தின்படி, தம்பதிகளின் பரஸ்பர ஒப்புதல் இல்லாமல் போனால் விவாகரத்து கிடைப்பது, எத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தாலும், மிகச் சிக்கலான விஷயம். வர்மாவின் மனைவி விவாகரத்துக்கு ஒப்பாததால் நிலுவையில் இருக்கும் சட்டத்தின்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிற்று என்றாலும் கால இடைவெளியைக் கருத்தில் கொண்டு நீதிபதிகள் முடிவுக்கு வராதது பகுத்தறிவுக்கு விரோதமானதாக எனக்குப்படுகிறது.
-வாஸந்தி
பள்ளிக்கூடம் என்னும் அதிகார மையம்
சின்னப் பிள்ளைகள் குறும்பு செய்யும்போது, 'பூச்சாண்டி' கிட்டே பிடிச்சுக் கொடுத்துடுவேன் என மிரட்டுற குரலை கிராமங்களில் அடிக்கடி கேட்கலாம். யார் அந்தப் பூச்சாண்டி? ஆள் எப்படி இருக்கும்? என்று யோசிப்பதைவிட அரூபமாக மனத்தில் தோன்றும் பயம்தான் குழந்தையைப் பாடாய்ப் படுத்தும். அப்படி இன்னொரு பெயர்தான் 'பள்ளிக்கூடம்'.
-ந. முருகேசபாண்டியன்
பாய் விரிக்க...
இன்றைக்குப் பாயின் பயன்பாடு நகர்ப்புற வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக் கொண்டே வருகிறது. பாய் நெசவு என்ற தொழிலும் இன்று இயந்திரமாகிவிட்டதால் வீட்டில் தறிப்போட்டு பாய்களை நெய்து வந்த ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் இன்று வேலை இன்றி தெருவில் நிற்கிறார்கள். தென்மாவட்டங்களில் வாழும் இஸ்லாமியர்களே பெரும்பாலும் பாய் நெசவுத்தொழிலைச் செய்து வந்தார்கள்.
-கழனியூரன்
இலவசங்கள் தரும் இழிவுகள்
-அ.ராமசாமி
காலணி கலாச்சாரம்
-ஜெயந்தி சங்கர்
சிறுகதை
“கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்”
-கே.பாலமுருகன்
கவிதை
பாதை தொலைந்த பின்னும் நீளுமொரு பயணம்
-கோகுலன்
பசித்தலையும் சுயம்
-எம். ரிஷான் ஷெரீப்
செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்
-செல்வராஜ் ஜெகதீசன்
வால்கள் வரையும் இதயம்
-த.அரவிந்தன்
மெளனத்தின் மொழி
-றஞ்சினி
ஹைக் கூ வரிசை : இதயத்தின் பருவங்கள்-1
-ஆலன் ஸ்பென்ஸ்
அறிவிப்புகள்
உலகத் தமிழ் ஒப்புரவாளர் பேரவை
--
பாரதிக்குப் பின் : பெண்ணும் கவிதையும்
-இருநாள் கருத்தரங்கம்
விம்பம் குறுந்திரைப்பட விழாவும் சிறந்த படத்திற்கான விருதும்
--
யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன நிகழ்வு
--
பழமொழிகளும் சொலவடைகளும்
பழமொழிகளும் சொலவடைகளும்
அச்சாணி இல்லாத தேர்; முச்சாணும் ஓடாது.
அஞ்சாவது (பிறக்கும்) பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.
-கழனியூரான்
நிகழ்வுகள்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் நூல் அறிமுக விழா
--
கடித இலக்கியம்
சுப்ரபாரதி மணியனுக்கு அன்புடன் கந்தர்வன்
இந்தத் தொகுப்பைப் படித்து முடித்ததும் சுஜாதாவின் இதற்கான முன்னுரையைப் படித்தேன். உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை இந்தத் தொகுதியின் பின் பகுதியிலும் கனவு இதழிலும் படித்தேன். செகாவுக்கு எதிர்மறையாக எப்படி அசோகமித்திரனும் அவர் போன்று எழுதுபவர்களும் படைக்கிறார்கள் என்று மழுப்பலாக எழுதிய க.நா.சு. வின் விமர்சனம் ஒன்றை தினமணியில் படித்தேன். அப்புறம் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
-கந்தர்வன்
சிற்றிதழ் பார்வை
புத்தகம் பேசுது
--
புது நூல்கள்
ஆபிதீனின் உயிர்த்தலம் : அங்கதத்தின் பிரம்மாண்டம்
-தாஜ்
உங்கள் கருத்துக்கள்
உங்கள் கருத்துக்கள்
-எழுதவேண்டிய முகவரி:uyirosai@uyirmmai.com
Saturday, August 09, 2008
ஒரு பால் உறவுக்கு சட்ட அங்கீகாரம்
இந்தக் கட்டுரையின் முழு வடிவம் உயிர்மை.காம் மனுஷ்யபுத்திரன் பக்கங்களில்...http://www.uyirmmai.com/
Wednesday, August 06, 2008
சைக்கோ கொலைகாரன் யார்?
இந்தக் கட்டுரையை தொடந்து வாசிக்க உயிர்மை.காம் மனுஷ்யபுத்திரன் பக்கங்களுக்கு வாருங்கள்.....http://www.uyirmmai.com/
Monday, August 04, 2008
கடற்கரையில் சில காகங்கள்
கட்டுரையை முழுமையாக படிக்க உயிர்மை வலைத் தளத்தில் மனுஷ்ய புத்திரன் பக்கங்களுக்கு... http://www.uyirmmai.com/
Thursday, July 31, 2008
ரஜினி கற்றுக்கொண்ட பாடம் என்ன?
பார்க்க: www.uyirmmai.com
Friday, March 07, 2008
www.uyirmmai.com
www.uyirmmai.com
தமிழில் ஒரு முழுமையான இணைய இதழ்
முழு விபரங்கள் விரைவில்............
Sunday, November 05, 2006
சதாமுக்கு மரண தண்டணை
சதாம் நிரபராதி அல்ல. ஆனால் அமெரிக்கா அவருக்கு தண்டணை வழங்க முடியாது. சதாமின் குற்றங்களுக்காக அவரை தூக்கிலிடுவது சரி என்றால் சதாமிற்கு அருகில் ஜார்ஜ் புஷ் சர்வதேச அளவில் புரிந்திருக்கும் போர்க் குற்றங்களுக்காக நூறு முறை தூக்கிலிடப்பட வேண்டும்.
இந்த தீர்ப்பை தொலைக் காட்சியில் இன்று மாலை பார்த்துக் கொண்டிருந்தபோது இரண்டு விஷயங்கள் வினோதமாக இருந்தன. முதலாவதாக தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் முகத்தில் காணப்பட்ட பதட்டமும் ஆத்திரமும். மேலும் அவரிடம் வெளிப்பட்ட சாத்தானின் உருத் தோற்றம். இது ஒரு நாடகக் காட்சியைப்போல இருந்தது. இரண்டாவதாக, பி.பி.சி ஈராக்கில் இத் தீர்ப்பை ஆதரித்து மக்கள் கொண்டாட்டங்களை நிகழ்த்துவதாக ஒரு படத் தொகுப்பினை காட்டியது. அதே படத் தொகுப்பை காட்டி தீர்ப்பிற்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபடுவதாக சன் டி.வி செய்தியில் காட்டப்பட்டது.
சதாம் அவ்வளவு எளிதில் தூக்கிலிடப்பட மாட்டார் என்றே இப் பதிவை எழுதும்போது தோன்றுகிறது. இந்தப் பிரச்சினையில் இந்தியா கோழைத்த்னமான மவுனம் சாதிக்க கூடாது என்றும் தோன்றுகிறது.
மனுஷ்ய புத்திரன்
Thursday, May 04, 2006
மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்
மலேசியாவில்: அகிலன் லெட்சுமணன் 00 60 122581393
சிங்கப்பூரில்: பாலு மணிமாறன்:00 65 90753234
கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் உத்தேச திட்டம்.
மலேசியா:
7.5.2006 - கோலாலம்பூரில் அகிலன் லெட்சுமணனின் மீட்பு கவிதைத் தொகுப்பு வெளியீடு
7.5.2006 - (6.00 மாலை) பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல்.
8.5.2006 - கெடா மாநிலத்தில் கலந்துரையாடல்.
9.5.2006- பினாங்கு தீவில் கலந்துரையாடல்.
10.5.2006 - மலாக்கா மாநிலத்தில் கலந்துரையாடல்
சிங்கப்பூர்:
1. 12 மே 2006 - கவிச்சோலை - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக நிகழ்ச்சி - இரவு 7.00 மணி முதல் - 10.00 மணி வரை
2. 13 மே 2006 - அன்னையர் தின விழா - சிறப்பு விருந்தினர் - மாலை 3 மணி முதல் 6மணி வரை
3. 14 மே 2006 - கவிதைப் பயிற்சிப்பட்டறை - தேசிய நூலக வாரியமும், ஜோஸ்கோ டிராவன்ஸ¥ம், பாலு மீடியாவும் இணைந்து நடத்தும் நிகழ்வு . ( காலை 9.00 முதல் - மதியம் 1.00 மணி வரை )
அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Wednesday, April 05, 2006
ஹை டெக் அமைச்சரின் உடல் மொழியும் வாய் மொழியும்.
இதற்கு பதிலாக வை.கோ.
'நீ மட்டும் உண்மையான ஆண்மகனான இருந்தால் என்மீது வழக்குத் தொடு. இதோ, சூரியன் அஸ்தமித்து விட்டது. நீ கொடுத்த 24 மணி நேரக் கெடுவும் முடிந்து விட்டது. என் மீது வழக்கைத் தொடு. இந்த வைகோ மரணத்தை முத்தமிட்டாலும் முத்தமிடுவானே தவிர உன்னிடம் மன்னிப்புக் கேட்க மாட்டான். நீதிமன்றத்தில் வழக்குரைஞர் இல்லாமல் நானே என் வழக்கை ஆடுவேன். உன்னை சாட்சிக் கூண்டில் ஏற்றி கேள்விகள் கேட்பேன். அப்போது பல ரகசியங்கள் அம்பலமாகும்."
என்று சொன்னதற்கு பதிலடியாக தயாநிதி மாறனின் பேச்சு இது.
'நீ சரியான் ஆண்மகனாக இருந்தால் ..மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் உன் பக்கத்தில் மேடையில் அமரப்போகும் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேள். ..என்னை 19 மாதம் சிறையில் அடைத்தது ஏன்? மன்னிப்புக் கேள்.!'' என்று ஜெயலிதாவைப் பார்த்துக் கேட்கத் தயாரா?
தரங்கெட்டுப் பேசிவிட்டு அது கிராமத்துப் பாஷை என்கிறாயே, நான் சென்னை பாஷையில் கேட்கிறேன். ஒண்டிக்கு ஒண்டி வர்றியா? (அப்படீன்னா?) என்னோடு மோதத் தயாரா? முடியுமா உன்னால்? உன் வண்டவாளங்கள்தான் ஒவ்வொரு நாளும் செல் போன்கள் மூலம் தண்டவாளம் ஏறி உலகம் சிரிக்கிறதே...?
உன்னைப் போல் அல்ல உன்னைவிட கடுமையாகப் பேச எனக்கும் தெரியும். நீ என்ன பெரிய வழக்கறிஞனா பேச்சாளானா? உன் வழக்கில் வாதாடி ஜெயிக்கவே உன்னால் முடியவில்லை. நீ என்னை ஜெயிக்கப்போகிறாயாக்கும்.
எங்கள் இலக்கு ஜெயலலிதாதான் எனவே வைகோவே போ...உன்னை மன்னித்து விடுகிறேன்..
இப்படிப் போகிறது. தொலைக் காட்சியில் தயாநிதி மாறனின் இந்தப் பேச்சை பார்த்தபோது அவர் வைகோவின் உடல் மொழியை அப்படியே பின்பற்ற மிகவும் பிரயாசைப்படுகிறார். அவரைப்போலவே கால்களை எக்கி எக்கி உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயல்கிறார். அநாகரிகமாகப் பேசுவதில் அவரது விருப்பமும் பிரயாசையும் நன்றாகத் தெரிகிறது. ஆனால் இந்தியாவின் மெத்தப் படித்த, ஹை டெக் அமைச்சர் ஆயிற்றே. தமிழே கஷ்டப்பட்டுப் பேசும் தயாநிதி மாறன் கொச்சைக்கு எங்கே போவது? ஆனாலும் செந்தமிழே நாப்பழக்கம் என்கிறபோது இந்தத் தமிழை பழகிக் கொள்வது ஒன்றும் கஷ்டமல்ல. மேலும் ஆபாசமாக பேசக் கற்றுக் கொள்வது தயாநிதி மாறனின் மேட்டுக் குடி பாவனைகளை களைந்து 'மக்களிடம்' மிகவும் நெருங்கிச் செல்லப்பயன்படலாம். சிவாஜி கணேசன் ஒரு அமெச்சூர் நடிகனைப்பார்த்து புன்னகைப்பதுபோல வை.கோ தயாநிதி மாறனைப் பார்த்து புன்னகைக்கக் கூடும். ஆனால் இந்தப் பேச்சு கலைஞருக்கு நிச்சயம் பதட்டத்தை கொடுத்திருக்கும். மேடையிலேயே ' பெரியார் அண்ணா பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று பேரனை செல்லமாகக் கடிந்துகொண்டார்.(அதே மேடையில் வீற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா. பாண்டியன் ' இந்த அளவு மத்திய தடம் புரண்டு பேசுகிறார் என்றார் எந்த அளவுக்கு அவர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பார்' என விளக்கமளித்து தயாநிதி மாறனை ஒரு மன நோயாளி ரேஞ்சூக்கு கொண்டு சென்றுவிட்டார். தயாநிதி மாறனுக்கு மனப் பிறழ்வை தூண்டியதற்காக நஷ்ட ஈடு கேட்டு வை.கோவிற்கு நோட்டீஸ் அனுப்ப சட்டத்தில் இடம் இருக்கிறதா தெரியவில்லை.) ஏனெனில் ஸ்டாலினிடம் இதுபோன்ற ஒரு அதிரடியை தன் வாழ்நாளில் ஒரு முறைகூட பார்க்கும் சந்தர்ப்பம் கலைஞருக்கு வாய்க்கப் போவதில்லை. இது போன்ற பேச்சுக்கள் தொண்டர்களிடம் எத்தகைய வரவேற்பை தயாநிதி மாறனுக்கு வருங்காலத்தில் பெற்றுத்தரும் என்பது கலைஞருக்குத் தெரியும்.
திராவிட இயக்கத்தின் உண்மையான அடுத்த கட்ட வாரிசு உதயமாகிவிட்டார் என்பதற்கு அடையாளமாக தயாநிதி மாறனின் இந்தப் பேச்சை தமிழர்கள் கொண்டாட வேண்டும்.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Sunday, March 26, 2006
யாருடைய முத்தங்களும்
யாருக்கும் நினைவிருப்பதில்லை
கசப்பின் சின்னஞ் சிறுகீறல்
உங்ளங்கை ரேகையாகப் படிந்து
நம் விதியை எழுதுகிறது
எல்லாப் பரிசுப்பொருட்களும்
எப்படியோ பழசாகிவிடுகின்றன
புறக்கணிப்பின் முற்களோ
யாரும் நீருற்றாமலேயே வளர்ந்துகொண்டிருக்கின்றன
எவ்வளவு நேரம் தட்டிக்கொண்டிருந்தோம்
பிரியத்தின் ஒற்றை சாளரம் திறக்க
இருள் வருவதுபோல
சுவர்களைக் கடந்து உள்ளே வந்துவிடுகிறது
கசப்பின் நிழல்கள்
நீ என்னிடம் வரும்போது
ஒரு பறைவையின் சிறகுகளோடு வருகிறாய்
போகும்போது
புகைபோக்கியின் வழியாக
ஆவியாகிச் செல்கிறாய்.
மனுஷ்ய புத்திரன்
Saturday, March 25, 2006
ஒரே ஒரு மீன்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்
தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருகின்றன
ஒரு மீன்
துள்ளுகிறது.
சும்மா
துள்ளுகிறது.
யாரும் பதட்டமடையத்
தேவையில்லை.
எனக்கு உறுதியாகத் தெரியும்
ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது.
மனுஷ்ய புத்திரன்
Sunday, March 19, 2006
பிம்பம்
புரிந்துகொள்வதில்
புதிர்களோ
குழப்பங்களோ
இல்லை
எனது நிழல்களுக்கு
நீ அஞ்சவேண்டியதுமில்லை
நீ திறக்க முடியாத
எனது பெட்டிகளில் சாவித் துவாரங்களில்
துருப்பிடித்த ஆணிகளைச் சொருகத் தேவையே இல்லை
நான் கைமறதியாய் விட்டுச் செல்லும் தடயங்களில்
என்னைபற்றி உனக்கு
எதுவுமே கிடைக்கப் போவதில்லை
சும்மா
ஒரு சுவாரசியத்திற்காக
கண்ணாடியில் என் பிம்பங்களை
கொஞ்சம் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறேன்
அவ்வளவே
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Saturday, November 26, 2005
சுந்தர ராமசாமி நினைவரங்கு : சொல்லின் கால் தடங்கள்
நாள்:27.11.2005 காலை 10 மணி முதல் ஒரு மணிவரை
இடம்:தேவநேய பாவாணர் மாவட்ட மைய நூலகம்
அண்ணா சாலை, (ஆனந்த் திரையரங்கம் அருகில்)
சென்னை
நூல் வெளியீடு
ஜெயமோகனின்
சுந்தரராமசாமி:நினைவின் நதியில்
வெளியிடுபவர்:ஜெயகாந்தன்
பெற்றுக் கொள்பவர்:பாலு மகேந்திரா
சிறப்புரைகள்:
கல்பற்றா நாராயணன்
ந.முத்துசாமி
எம்.யுவன்
கே.எம்.ஆதிமூலம்
நாஞ்சில் நாடன்
பிரபஞ்சன்
ஜெயமோகன்
சி.மகேந்திரன்
ஒருங்கிணைப்பு: மனுஷ்ய புத்திரன்.
உயிர்மை உங்களை அன்புடன் அழைக்கிறது.
தொடர்புகளுக்கு:
email:uyirmmai@gmail.com
phone:044-24993448
mobile:9444366704
Monday, October 31, 2005
சன் டிவி பற்றிய குறிப்பும் சில எதிர்வினைகளும்
சத்யம் என்ற பெயரில் இடப்பட்ட எதிர்வினையில் நான் என்னைவிட வசதியான ஊடகத்தை பார்த்து வயிற்றெரிச்சலில் இப்படி எழுதிருக்கிறேன் என்கிறது. இன்னொரு பெயரில்லாத எதிர்வினை பெண்களுக்கு ஆபாச sms அனுப்புவதைவிட்டு சன் டிவிக்காக கண்ணீர் விடலாம் என்கிறது. தமிழ் வலைபதிவுகளிஎழுதுபவர்களின் தார்மீகமின்மைகள் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இதுபோன்ற அவதூறுகளின் நோக்கம்:
1. ஒரு விவாதத்தை முறித்து திசை திருப்புவது.
2.அவமானப்படுத்தி குரூர திருப்தி அடைவது.
3. அசலாக ஒரு வாக்கியத்தையோ அபிப்ராயத்தையோ உருவாக்க முடியாமல் பிறரது அபிப்ராயங்களின் நிழலில் சுய மைதுனம் செய்வது.
4. இருட்டிலிருந்து கல்லெறிந்து அபிப்ராயங்களை உருவாக்குபவர்களை துரத்துவது.
இதுபோன்ற ஆபாசங்களை வலைப்பதிவிலிருந்து நீக்கிவிடுவது சுலபம். ஆனால் அதை நான் செய்ய மாட்டேன். ஒரு சமூகத்தில் ஆபாசமும் வக்கிரமும் பதிவு செய்யப்படவேண்டும். அப்போதுதான் நம்மால் அதை எதிர்கொள்ள முடியும். நோயின் அறிகுறிகள் சுதந்திரமாக வெளிவரவேண்டும். சமூகவியலிலும் உளவியலிலும் ஆர்வம்கொண்ட எழுத்தாளன் என்ற வகையில் இதுபோன்ற பதிவுகள் எனக்கு உற்சாகம் அளிக்கின்றன. இவற்றை எழுதும் நபர்கள் இன்னும் கூட தங்களது மனோவிகாரத்தையும் கீழ்மையையும் விரிவாக பதிவு செய்வது அவசியம். வலைப்பதிவுகளின் உபயோகமும் கருத்து சுதந்திரத்தின் பயன்பாடும் தமிழ் வலைப்பதிவுகளில் முற்றிலும் புதிய தளத்தை எட்டியிருப்பதை மகிழ்ச்சியுடன் அங்கீகரிக்கிறேன்.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Thursday, October 27, 2005
சென்னை மழையில் சன் டிவியின் உளவியல் வன்முறை
இது போன்ற நெருக்கடியான சந்தர்பங்களில் மக்களுக்கு நம்பிக்கையும் வழிகாட்டுதலும் தேவை. ஆனால் செய்திகள் மிகைப்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை பீதி ஊட்டும் வகையில் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன. வதந்திகள் பெருகுகின்றன.
சுனாமியின்போதும் இதுதான் நடந்தது. ஊடகங்களின் வன்முறை நமக்குப் புதிதல்ல. ஆனால் எப்போதும் அவை மக்களுக்கு மேல் பிணந்தின்னிக் கழுகாக பறந்துகொண்டிருக்க வேண்டுமா என்ன?
நாளை காலை புயல் கரையை கடக்கும் என்கிறார்கள். நாம் சன் டிவியை எப்படி கடப்பது என்றுதான் தெரியவில்லை.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com
Sunday, October 16, 2005
சுராவின் மறைவும் இருப்பும்
சுராவின் மறைவு ஒரு மரணத்தைபற்றிய எல்லா சம்பிராதயமான சொற்களையும் கலைத்துவிடகூடியதாக இருக்கிறது. ஒரு எழுத்தாளராகவும் ஆசானாகவும் நண்பராகவும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சுந்தர ராமசாமியிடம் கொண்டிருந்த ஆழமான உறவின் மீது இந்த மரணம் ஒரு கொடுங்கனவைப்போல படர்ந்துகொண்டிருக்கிறது. அவை வெறும் நினைவுகளோ ஒரு ஆளுமையைப் பற்றிய பதிவுகளோ அல்ல. சுந்தரராமசாமியின் வழியாக உருவாகிவந்த ஒரு தலைமுறைப் படைபாளிகளில் ஒருவன் என்ற முறையில் இந்த மரணத்தை எப்படி நிராகரிப்பது, ஒப்புக் கொள்ள மறுப்பது என்பதுதான் என்னுடைய பிரச்சினை.
இளம்பிராயத்தில் ஜே.ஜே சிலகுறிப்புகளைப் படித்து மனப் பிறழ்வுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன். ஜே.ஜே உருவாக்கிய நிம்மதியின்மைகளும் கேள்விகளும் அன்றாட வாழ்வில் என்னுடைய சகஜமான இருப்பை நிலை குலைய வைத்தன. அந்த நிம்மதியின்மையோடு சுராவை போய்பார்த்தேன். இளைஞர்களிடம் அவர் பாராட்டிய தோழமை உணர்வு மகத்தானது. சொல்வதைக் காட்டிலும் அவர் கேட்பவராக இருந்தார். அறிவுறுத்துவதைக் காட்டிலும் புரிந்துகொள்ள விரும்புபவராக இருந்தார். எப்போதும் இது அவருடன் ஒரு இணக்கத்தையும் நம்மைப் பற்றிய பதட்டத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது.
அவர் தொடங்கி இடைநிறுத்திய காலச்சுவடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்டபோது அதன் ஆசிரியர் குழுவில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இது சுமார் பத்தாண்டுகாலம் சுராவுடன் தீவிரமான பரிமாற்றங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தது. இந்தச் சந்தர்ப்பம் எனது மொழியை சிந்தனையை மனோபாவத்தை கடுமையாக பாதித்தது. நான் அவருடைய ஆளுமையால் தீவிரமாக ஆக்கரமிக்கப்படுபவனாகவும் எனக்குள் அதை சிலசமயம் எதிர்த்துப் போராடுபவனாகவும் இருந்திருக்கிறேன்.
சுமார் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சுரா ஒரு இயக்கமாக இருந்தார். தமிழ் வாழ்வில் சிறுமைகள் குறித்த கண்டங்களும் கேள்விகளும் அவரது எழுத்துக்களின் அடிப்படை நீரோட்டமாக இருந்திருக்கிறது. இந்தக் கேள்விகளை அவர் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை. பல எழுத்தாளர்கள் தங்கள் வாழ்வில் செய்துகொள்ள நேர்ந்த சமரசங்கள் எதையும் சுரா செய்துகொள்ள நேரவில்லை.
தமிழில் மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்ட எழுத்தளாராக சுந்தர ராமசாமியைத்தான் குறிப்பிட முடியும். இலக்கியம் சார்ந்த காரணங்களைவிட இலக்கியம் அல்லாத காரணங்களுக்காவே அவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டிருக்கிரார். எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு அரசியல் இருக்கிறது. ஆனால் சுரா தனது அரசியலையும் நம்பிக்கைகளையும் தெளிவாக முன்வைத்தார். அதனாலே அவரை விமர்சிப்பவர்களுக்கான ஆயுதங்களை அவரே எப்போதும் வழங்கினார். ஆனால் அவருடைய எல்லா சிந்தனைகளும் செயல்பாடுகளும் ஒரு வெட்ட வெளியில் மூட்டப்பட்ட நெருப்பைப் போல சில சமயம் புகைந்துகொண்டும் சில சமயம் எரிந்துகொண்டும் இருந்தன.
சுரா தமிழில் மூன்று தலைமுறை படைப்பாளிகளை பாதித்திருக்கிறார். அவர் இலக்கியத்தில் உருவாகிய சில மதிப்பிடுகளும் சமூகத்தைப் பற்றிய விமர்சனங்களும் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவரது கேள்விகள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும். இந்த கேள்விகள் சில சமயங்களில் சுராவைப் பற்றிய கேள்விகளாகவும் பல சமயங்களில் நம்மைப் பற்றிய கேளிவிகளாகவும் இருப்பது தவிர்க்க இயலாது.
சுரா ஒரு யுகத்தின் அடையாளம். அந்த யுகம் மறைந்துகொண்டிருக்கிறது. அது தன்னுடன் சுராவையும் எடுத்துசெல்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவரது மரணம் சந்திப்பதற்கு கடினமானதாகவும் ஒரு உறைபனியைப்போல சருமத்தை துளைப்பதாகவும் இருக்கிறது.
சுராவின் மரணம் சட்டென ஒரு இடைவெளியை உருவாக்கிவிட்டது. அதைக் கடப்பது அவ்வளவு எளிதாக இல்லை.
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com