Tuesday, March 22, 2005

சவக் கிடங்கிற்குச் செல்லும் விடுதலை ரயில்

ஷோபாசக்தியின் 'ம்'

மனுஷ்ய புத்திரன்


வன்முறை தோய்ந்த சமகால அரசியல் சமூக வரலாற்றை எழுதுவதென்பது ஒரு கலைஞனுக்கு ஏற்படுத்தும் சவால்கள் கடுமையானவை. அரசியல் நிலைப்பாடுகளும் அறவியல் சார்ந்த ஆதாரமான கேள்விகளும் பல சமயங்களில் எதிர் நிலைகளாகிவிடுகின்றன. ஒருவரது அரசியல் நம்பிக்கைகள், நிலைபாடுகள் குறித்த கேள்விகள் தீவிரமடையும்போது உண்மைகளைவிட நிலைப்பாடுகளும் அறத்தைவிட கொள்கைகளும் முக்கியமடைந்துவிடுகின்றன. ஆனால் ஒரு கலைஞன் அரசியல் ரீதியாக நியாப்படுத்தப்படும் கொலைகளின் பின்னிருக்கும் ரத்தக் கவுச்சியையும் மறைக்கப்படும் வாதைகளின் கூக்குரலையும் கேட்கவேண்டியவனாகிவிடுகிறான். அவ்வாறு கேட்கும்போது அவனது நம்பிக்கைகள் முற்றாகக் கலைக்கப்பட்டு வாழுதலின் அர்த்தத்தையும் நீதியையும் சிதைவுகளின் ஊடே தேடிச் செல்கிறான். அவ்வாறு தேடிச் செல்லும் கதையே ஷோபா சக்தியின் 'ம்'

1980க்ளுக்குப் பிந்தைய ஈழத்தின் அரசியல் சரித்திரத்தை சொல்லும் இக்கதை உண்மையில் ஒரு தேசத்தின் வரலாற்றையோ, சித்திரவதைகளின் கதையையோ, அல்லது இதுவரை சொல்லப்படாத சம்பவங்களையோ சொல்லப்பட்டதைவிட அதிகமான குரூரங்களையோ சொல்லிவிடவில்லை. நேசகுமாரனுக்கு நடந்தவை அனைத்தும் பல்வேறு வழிகளில் நம்மால் கேட்கப்பட்டுவிட்டன. ஆனால் இதுவரை கேட்ககப்படாதது இந்த கதைக்குள் வாழும் ஒரு மனிதனின் தன்னழிவும் மன முறிவும்தான். இந்தத் தன்னழிவு வரலாற்றில் பதிவு செய்ய முடியாதது. வரலாற்றை உருவாக்கும் மாமனிதர்களின் கனவுகளில், தியாகங்களுக்கான அறைகூவல்களில்., மாபெரும் விடுதலை இலட்சியங்களில் இந்தத் தன்னழிவிற்கு இடம் கிடையாது. அவை பைத்தியக்கார்களின் குறிப்பேடுகளில் கிறுக்கபட்ட ரகசியக் குறிப்புகளாகிவிடுகின்றன. இந்த ரகசியக் குறிப்புகள் வாழ்க்கையின் மீதான எல்லாக் கற்பிதங்களையும் எள்ளி நகையாடுகின்றன. சிதறடிக்கப்பட்ட மனிதன் என்ற கற்பிதத்தின் சிதிலங்களிலிருந்துதான் ஷோபாசக்தின் இந்த நாவல் தொகுக்கப்படுகிறது. போராட்டம், விடுதலை, தியாகம், புனிதமரணங்கள் என அலங்கரிக்கப்பட்ட மகத்தான பலிபீடங்களை இக்கதை தகர்த்து விடுகிறது.

ஷோபாசக்தி வன்முறையின் எல்லாப் பக்கங்கங்களையும் திறந்து பார்க்கிறார். ஒடுக்குமுறைக்கும் விடுதலைக்குமிடையே வாழ்வின் ஒவ்வொரு மூலையையும் இந்த வன்முறை சூழ்ந்திருக்கிறது. 83 ஜூலைக் கலவரங்களின்போது வெலிகட சிறையில் நடந்த படுகொலை சம்பவங்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் மிக முக்கியமான திட்டமிட்ட மனித அழிப்புகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஈழப் போராட்டத்தின் பெருங்கனலை மூட்டிய இந்த அழித்தொழிப்பைப் பற்றிய மிகத் துல்லியமான விபரங்களைத் தரும் ஷோபா சக்தி ஆஷ்ட்விச் முகாம்களைப் பற்றிய குறிப்புகளோடு ஒத்துப்போகும் இலங்கைச் சிறைச்சாலைகள் பற்றிய குறிப்புகளை விரிவாகப் பதிவு செய்கிறார். இதற்கு கொஞ்சமும் குறையாத போராளிகளின் வதை முகாம்கள் பற்றிய விவரணைகள் இணைகோடாக நாவலில் நீள்கிறது. இலங்கை அரசின் வதை முகாம்கள்... போராளிகளின் வதை முகாம்கள்... இவையிரண்டும் விடுதலை என்ற ரயிலின் தண்டவாளங்களாக மாறிவிடுகிறது. விடுதலை ரயிலின் வதை முகாம்களிலான பெட்டிகளில் நேசகுமாரன் தொடர்ந்து மாறி மாறிப் பயணம் செய்கிறான். இந்தப் பயணத்தின் வழிநெடுக சிதைக்கப்படும் உடல்களைத் தவிர வேறு காட்சிகளே இல்லை. ஒரு பிரமாண்டமான சவக் கிடங்கை நோக்கி விடுதலை ரயில் சென்றுகொண்டே இருக்கிறது.

நேசகுமாரன் ஏன் முக்கியமான சந்தர்பங்களில் தனது தோழர்களைக் காட்டிகொடுத்தான்? ஏன் தனது இலட்சியங்களைவிட்டுத் தப்பி ஓடினான்? ஏன் தனது சொந்த மகளின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்தான் என்ற கேள்விகளுக்கான பதிலை ஒருவர் அரசியல் ரீதியாகவோ உளவியல்ரீதியாகவோ தேடிச் செல்லலாம். ஆனால் மனிதர்களைத் தூண்டுவது இலட்சியங்கள் மட்டுமல்ல, வாழ்வாசையும் ஆதாரமான இச்சைகளின் தர்க்கமற்ற இயல்புகளும்தான். இந்த இரண்டுக்குமான தீர்க்கமுடியாத முரண்கள்தான் நேசகுமாரனின் செயல்களை தீர்மானிக்கின்றன. குரூரமாக சிதைக்கப்படும் உடல்களிலிருந்தும் மனங்களிலிருந்தும் உருவாகும் புதிய மனிதனுக்கு, இந்த யுகத்தின் மனிதனுக்கு ஒரு குறியீடே நேசகுமாரன். இந்த மனிதன் வீழ்சியிலிருந்தும் அவநம்பிக்கையின் கசப்பிலிருந்தும் பிறப்பவன். சமூகத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டவன். தனக்கென நியாயங்கள் இல்லாதவன்.

ஆனால் நேசகுமாரனின் சிறைத் தோழனான பக்கிரி இலட்சியங்களைப் பாதுகாக்க தொடர்ந்து போராடுகிறான். அவன் எந்த இடத்திலும் நம்பிக்கை இழப்பதில்லை. சித்ரவதைகள் அவனை அச்சுறுத்துவதில்லை. அவனது ஆன்மாவை சிதைப்பதுமில்லை. அவன் கொல்லப்படும்வரை விடுதலையின் நெருப்பை அணையவிடாமல் பாதுகாத்துக்கொண்டே இருக்கிறான். பக்கிரியும் நேசகுமாரனும் உண்மையில் ஒரு கனவின் தவிர்க்க முடியாத இரண்டு பாதைகள்.

இந்த நாவலின் கட்டமைப்பு மிகவும் நுட்பமானது. இருபதந்தைந்து ஆண்டுகால ஈழத்து அரசியல் சமூக சரித்திரமும் அதை ஒட்டிய புலம்பெயர் வாழ்வியல்களமும் இந்த சிறிய நாவலில் அதன் எல்லா முரண்பாடுகளோடும் மிக உக்கிரமாக எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க தகவல்கள், குறிப்புகளால் சொல்லப்படும் இக்கதை அக் குறிப்புகள் அடுக்கப்படும், இடம் மாற்றப்படும்வித்தால் ஆழ்ந்த மனக்கசிவையும் அபத்த உணர்வையும் ஏற்படுத்துகிறது.

வாழ்வின் அபத்த முரண்கள் நாவல் முழுக்க குரூரமான அங்கதமாக உருக்கொள்கிறது. ஈழத்த்துப் படைப்புகளின் வெளிப்படும் உணர்ச்சிபூர்வமான சொல்லாடல்கள் எதுவும் ஷோபாசக்தியின் கதைகளில் இடம்பெறுவதில்லை. அன்னியனின் ஈரமற்ற மொழியில் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கிறார். செய்திக் குறிப்புகளை எழுதுபவனின் பாசாங்குடன் புனைவின் உக்கிரத்தை தீண்டுகிறது அவரது மொழி.

ஷோபாசக்தியின் கொரில்லா, தேசதுரோகி ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது வெளிவந்திருக்கும் 'ம்' அவரை ஈழத்து இலக்கியத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியத்திலுமே முதன்மையான அரசியல் புனைகதையாளனாக முன்னிருத்துகிறது. கருப்புப் பிரதிகள் இந்நாவலை வெகு நேர்த்தியாக பதிப்பித்திருக்கிறது.

'ம்' /நாவல்/ஆசிரியர்: ஷோபாசக்தி.வெளியீடு: கருப்புப் பிரதிகள்,45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை600 005பக்கம்:168, விலை:ரூ.80.

(இதன் சற்றே சுருக்கப்பட்ட வடிவம் இந்தியா டுடே மார்ச் 30, 2005 இதழில் வெளியாகியிருக்கிறது)

Saturday, March 19, 2005

ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்

ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் அறிவிக்கபட்டிருப்பதாக கவிஞர் சுகுமாரன் சற்றுமுன் தொலைபேசியில் அழைத்து தெரிவித்தார். தமிழுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவமான உணர்ச்சி இன்றி பெருமித்தத்துடன் அவற்றை வரவேற்கும் சந்தர்ப்பங்கள் அபூர்வம். ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டிருப்பது அத்தகைய ஒரு சந்தர்ப்பம். தமிழ்க் கதையை தமிழ் வாழ்வின் இருண்ட நிலப்பரப்புகளை நோக்கிச் செலுத்திய ஒரு பெரிய இயக்கம் ஜெயகாந்தன். பிச்சைக்காரர்களும் வேசிகளும் பொறுக்கிகளும் குரூரமாக நசுக்கப்பட்டவர்களும் பிறழ்வுகொண்டவர்களும் ஜெயகாந்தனின் வழியே தமிழ் எழுத்துப் பரப்பிற்கு வந்து சேர்ந்தார்கள். நகர்ப்புற, அக்ரஹார எதார்த்ததிலிருந்து தமிழ் வாழ்க்கையின் பிரமாண்டத்தை நோக்கிய முதல் திறப்பு அவர்.

பாரதிக்குப்பின் தமிழ் எழுத்தாளன் குறித்த ஒரு கம்பீரமான படிமத்தை ஜெயகாந்தன் வழங்கினார். அவரைப்பற்றிய கடும் விமர்சனங்களை இன்று ஒருவர் எழுப்பலாம். ஆனால் அவர் ஒரு தலைமுறையின் பெரும் சக்தி. என் இளமைக்கால ஆளுமையை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றிய அவரை இந்த சமயத்தில் வாழ்த்துவதில் மிகுந்த மன நெகிழ்ச்சி கொள்கிறேன்.

மனுஷ்ய புத்திரன்