Sunday, March 26, 2006

யாருடைய முத்தங்களும்

யாருடைய முத்தங்களும்
யாருக்கும் நினைவிருப்பதில்லை
கசப்பின் சின்னஞ் சிறுகீறல்
உங்ளங்கை ரேகையாகப் படிந்து
நம் விதியை எழுதுகிறது

எல்லாப் பரிசுப்பொருட்களும்
எப்படியோ பழசாகிவிடுகின்றன
புறக்கணிப்பின் முற்களோ
யாரும் நீருற்றாமலேயே வளர்ந்துகொண்டிருக்கின்றன

எவ்வளவு நேரம் தட்டிக்கொண்டிருந்தோம்
பிரியத்தின் ஒற்றை சாளரம் திறக்க
இருள் வருவதுபோல
சுவர்களைக் கடந்து உள்ளே வந்துவிடுகிறது
கசப்பின் நிழல்கள்

நீ என்னிடம் வரும்போது
ஒரு பறைவையின் சிறகுகளோடு வருகிறாய்

போகும்போது
புகைபோக்கியின் வழியாக
ஆவியாகிச் செல்கிறாய்.

மனுஷ்ய புத்திரன்

Saturday, March 25, 2006

ஒரே ஒரு மீன்

மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்
தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருகின்றன

ஒரு மீன்
துள்ளுகிறது.

சும்மா
துள்ளுகிறது.

யாரும் பதட்டமடையத்
தேவையில்லை.

எனக்கு உறுதியாகத் தெரியும்

ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது.

மனுஷ்ய புத்திரன்

Sunday, March 19, 2006

பிம்பம்

என்னை நீ
புரிந்துகொள்வதில்
புதிர்களோ
குழப்பங்களோ
இல்லை

எனது நிழல்களுக்கு
நீ அஞ்சவேண்டியதுமில்லை

நீ திறக்க முடியாத
எனது பெட்டிகளில் சாவித் துவாரங்களில்
துருப்பிடித்த ஆணிகளைச் சொருகத் தேவையே இல்லை

நான் கைமறதியாய் விட்டுச் செல்லும் தடயங்களில்
என்னைபற்றி உனக்கு
எதுவுமே கிடைக்கப் போவதில்லை

சும்மா
ஒரு சுவாரசியத்திற்காக
கண்ணாடியில் என் பிம்பங்களை
கொஞ்சம் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறேன்
அவ்வளவே

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com