Tuesday, April 12, 2005

புதிய கவிதைகள்-10

Image hosted by Photobucket.com


மழை வரும்போது
வந்து சேரும் இந்தத் துக்கம்

ஒரு துக்கத்தைப் போலவே
இல்லை அது

துக்கத்தில் தழுவிக்
கிடக்கும் பெண்

ஒரு பெண் போலவே
இல்லை நீ

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Friday, April 08, 2005

புதிய கவிதைகள்-9

Image hosted by Photobucket.com


''அப்பா நீங்கள்
வீட்டிற்குப் போங்கள்
நான் எப்போதாவது வருவேன்"

மகளின்
உலர்ந்த கண்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்

கைப்பையை திறந்து திறந்து மூடும்
கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்

தனக்குள் முணுமுணுக்கும் உதடுகளின்
தனிமையை பார்த்துக் கொண்டிருந்தான்

கண்ணீரேயில்லாத
பிரிவுகளை பார்த்துக்கொண்டிருந்தான்

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Thursday, April 07, 2005

புதிய கவிதைகள்-8

Image hosted by Photobucket.com

இறுக மூடிய கைகளை
அவ்வளவு பலவந்தமாக பிரித்துப் பார்த்தீர்கள்

எதற்காகவோ பூட்டி வைத்திருந்த அறையை
கள்ளச் சாவியிட்டு திறந்தீர்கள்

வழியில் கண்டெடுத்த ஏவல் பொம்மையை
வீடுவரை கொண்டு வந்தீர்கள்

ரத்த சாட்சிகளின் மெளனத்தை
வற்புறுத்திக் கலைத்தீர்கள்

ஒரு துரோகத்தின் கதையை
அதன் முடிவுக்கு பயப்படாமல் கேட்கத் தொடங்கினீர்கள்

உங்களுக்கு பைத்தியம் பிடித்த
ஒரு பெளர்ணமியில்
எல்லா உண்மைகளையும் தெரிந்துகொண்டீர்கள்

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Wednesday, April 06, 2005

புதிய கவிதைகள்-7

Image hosted by Photobucket.com

பிசாசுகளின் கவிஞன்
பிசாசுகளைப் போலவே நேசிக்கிறான்

அவன் பற்றுகிற உடல்
அவனது உடலாகிறது

எப்போதும் பயத்திற்குள்
அசைகிறது அவன் வேட்கையின் சாயைகள்

அவனது மர்மத்தின் முடிச்சுகளால்
இறுகிக்கொண்டிருக்கிறது உன் குரல்வளை

எவ்வளவு தூரம் கூடவே வந்தாலும்
யாரும் கவனிப்பதில்லை அவனது உடனிருப்பை

அதிகரித்துக்கொண்டிருக்கும்
உன் படுக்கையறையின் வெப்பம்
எந்த மூச்சிலிருந்து கிளைக்கிறதென
நீ அறிய மாட்டாய்

பிசாசுகளின் கவிஞன்
பிசாசுகளைப் போலவே
எல்லா இடத்திலிருந்தும் வெளியேற்றப்படுகிறான்

பிசாசுகளின் கவிஞனுக்கு
பிசாசுகளைவிடவும்
அதிகம் பசிக்கிறது.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

புதிய கவிதைகள்-6

Image hosted by Photobucket.com


எல்லோரும்
யாருடனாவது இருந்துகொண்டிருக்கிறார்கள்

தொடுகிற ஒவ்வொரு கையிலிருந்தும்
ஒட்டுகிறது யாரோ ஒருவரின் வியர்வை

எந்தப் பாதையிலும் பின்தொடராமலில்லை
ஏதோ ஒரு காலடிச் சத்தம்

எல்லா இணைப்புகளும்
உபயோகத்தில் இருக்கும்
இந்தத் தொலைபேசியில்
நான் உன்னை வந்தடையும்போது
ஒரு பருவம் கழிந்திருக்கும்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Tuesday, April 05, 2005

புதிய கவிதைகள்-5

Image hosted by Photobucket.com


ஒரு மலரைப் பறிப்பது
போல்பறித்தாலும் சரி

ஒரு மிருகத்தை வெல்வதுபோல்
வென்றாலும் சரி

ஒன்றுபோலவே இருக்கிறது
ஒரு அன்பைத் தொடர்வது

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

புதிய கவிதைகள்-4

Image hosted by Photobucket.com


நடக்கலாம்
கால் வலிக்கும்போது கொஞ்சம் உட்காரலாம்
பேசலாம்
வெறுமை சூழும்போது மெளனமாக இருக்கலாம்
கைகளை பற்றிக் கொள்ளலாம்
பயம்வரும்போது கைகளை விலக்கிக் கொள்ளலாம்
ஒரு ஒரு முறை முத்தமிடலாம்
முத்தத்தைப் பற்றி பேச்சு வந்துவிடாமல்
வேறு ஏதாவது பேசலாம்

அவரவர்
வீடு நோக்கிப் போகலாம்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Monday, April 04, 2005

புதிய கவிதைகள்-3

Image hosted by Photobucket.com

உன் கண்கள்
இங்கே எதையுமே
பார்ப்பதில்லை

ஒழுங்குகளை
ரகசியங்களை
பலவீனங்களை
எப்போதும் கசிந்துகொண்டிருக்கும்
காயங்களை

ஒன்றையும்
அவை உற்றுப் பார்ப்பதில்லை.

உன் கண்கள்
கண்களை மட்டுமேசந்திக்கின்றன.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

புதிய கவிதைகள்-2

நீ வரப்போவதில்லை
என்ற போதும்
இன்னொரு கோப்பையில்
கொஞ்சம் மதுவை ஊற்றுகிறேன்

எல்லாத் திரைச் சீலைகளையும்
இழுத்துவிட்ட பிறகும்
எப்படியோ கொஞ்சம்
உள்ளே வந்துவிடுகிறது
ஒருபோதும் எதிர்கொள்ள விரும்பாத
அந்தியின் நிழல்கள்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Sunday, April 03, 2005

புதிய கவிதைகள்-1

நம்முடைய இரவுகள்
தேம்புகின்றன

நம்முடைய பகல்கள்
ஆவியாகிவிடுகின்றன

நம்முடைய இந்தக் காதல்
கடலுக்கடியில்
ஒரு புராதனக் கோயிலாக
மிதந்து கொண்டிருக்கிறது.

மனுஷ்ய புத்திரன்