Sunday, November 05, 2006

சதாமுக்கு மரண தண்டணை

21 ஆம் நூற்றாண்டில் வரலாற்று ரீதியாக முதன்முதலாக பதிவு செய்யப்படும், மிகப்பெரிய தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. உலகளாவிய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய தீர்ப்பு இது. அவரது இரு சகாக்களுக்கும் இந்த தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டவிரோத நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட கேலிக்கூத்தான தீர்ப்பு என்று கூறிய சதாமின் வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். சதாம் இன்னும் ஒரு மாதத்தில் தூக்கிலிடப்படுவார், பத்து நாளைக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை வாசிப்பதை பொருட்படுத்தாமல் சதாம் ' அல்லாஹு அக்பர்' என்று தொடர்ந்து நீதி மன்றத்தில் முழங்கிக்கொண்டிருந்தார். இந்த முழக்கம் இடம் பெற்ற உணர்வுபூர்வமான தருணம் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களின் இதயத்தை தொடக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால் அது சர்வதேச அளவில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் மிகக் கடுமையானவையாக இருக்கக் கூடும். அமெரிக்காவும் ஐரோப்பாவும் அதற்கான விலையை நெடுங்காலத்திற்கு கொடுக்க நேரிடலாம். மத்திய கிழக்கில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த சதாம் கொல்லப்படுவது பயன்படும் என அமெரிக்கா நினைப்பது வீண் கனவு.

சதாம் நிரபராதி அல்ல. ஆனால் அமெரிக்கா அவருக்கு தண்டணை வழங்க முடியாது. சதாமின் குற்றங்களுக்காக அவரை தூக்கிலிடுவது சரி என்றால் சதாமிற்கு அருகில் ஜார்ஜ் புஷ் சர்வதேச அளவில் புரிந்திருக்கும் போர்க் குற்றங்களுக்காக நூறு முறை தூக்கிலிடப்பட வேண்டும்.

இந்த தீர்ப்பை தொலைக் காட்சியில் இன்று மாலை பார்த்துக் கொண்டிருந்தபோது இரண்டு விஷயங்கள் வினோதமாக இருந்தன. முதலாவதாக தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் முகத்தில் காணப்பட்ட பதட்டமும் ஆத்திரமும். மேலும் அவரிடம் வெளிப்பட்ட சாத்தானின் உருத் தோற்றம். இது ஒரு நாடகக் காட்சியைப்போல இருந்தது. இரண்டாவதாக, பி.பி.சி ஈராக்கில் இத் தீர்ப்பை ஆதரித்து மக்கள் கொண்டாட்டங்களை நிகழ்த்துவதாக ஒரு படத் தொகுப்பினை காட்டியது. அதே படத் தொகுப்பை காட்டி தீர்ப்பிற்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபடுவதாக சன் டி.வி செய்தியில் காட்டப்பட்டது.

சதாம் அவ்வளவு எளிதில் தூக்கிலிடப்பட மாட்டார் என்றே இப் பதிவை எழுதும்போது தோன்றுகிறது. இந்தப் பிரச்சினையில் இந்தியா கோழைத்த்னமான மவுனம் சாதிக்க கூடாது என்றும் தோன்றுகிறது.

மனுஷ்ய புத்திரன்

Thursday, May 04, 2006

மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்

2006, 6 முதல் 15 தேதிவரை மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு விபரம் அறியலாம்.

மலேசியாவில்: அகிலன் லெட்சுமணன் 00 60 122581393
சிங்கப்பூரில்: பாலு மணிமாறன்:00 65 90753234

கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் உத்தேச திட்டம்.

மலேசியா:

7.5.2006 - கோலாலம்பூரில் அகிலன் லெட்சுமணனின் மீட்பு கவிதைத் தொகுப்பு வெளியீடு

7.5.2006 - (6.00 மாலை) பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடல்.

8.5.2006 - கெடா மாநிலத்தில் கலந்துரையாடல்.

9.5.2006- பினாங்கு தீவில் கலந்துரையாடல்.

10.5.2006 - மலாக்கா மாநிலத்தில் கலந்துரையாடல்

சிங்கப்பூர்:

1. 12 மே 2006 - கவிச்சோலை - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக நிகழ்ச்சி - இரவு 7.00 மணி முதல் - 10.00 மணி வரை

2. 13 மே 2006 - அன்னையர் தின விழா - சிறப்பு விருந்தினர் - மாலை 3 மணி முதல் 6மணி வரை

3. 14 மே 2006 - கவிதைப் பயிற்சிப்பட்டறை - தேசிய நூலக வாரியமும், ஜோஸ்கோ டிராவன்ஸ¥ம், பாலு மீடியாவும் இணைந்து நடத்தும் நிகழ்வு . ( காலை 9.00 முதல் - மதியம் 1.00 மணி வரை )

அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Wednesday, April 05, 2006

ஹை டெக் அமைச்சரின் உடல் மொழியும் வாய் மொழியும்.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவின் மிகப் பெரிய பிரசார பீரங்கி வை.கோ என்பதில் சந்தேகமில்லை. வை.கோ வின் டி.வி ஆசை தீரத் தீர ஜெயாடிவியில் காட்டிக் கொண்டிருக்கும் வை.கோவின் தனி நபர் நடிப்பை உலகெங்கும் உள்ள தமிழ் கூறும் நல்லுலகம் கண்டு களித்துக்கொண்டிருக்கிறது. வை.கோவின் பேச்சுக்கு கிடைக்கும் இந்த வரவேற்பு ஜெயலலிதாவை வெகுசீக்கிரம் பதட்டமைடையச் செய்யப் போவது உறுதி. ஜெயலலிதா அவருடைய நிழலில் ஒரு புல் பூண்டைக் கூட வளர விட மாட்டார். வை.கோவின் நாக்கை எப்போது கட்ட வேண்டும் என்று ( அறுக்க வேண்டும் என்று எழுதினால் மிகவும் வன்முறையாகப் போய்விடும்) அவருக்குத் தெரியும். இந்தப் பதிவில் நான் குறிப்பிட வந்தது இதையல்ல. சன் டிவி மற்றும் தினகரன் நாளிதழின் மீது வை.கோ தொடுத்துவரும் தாக்குதல் மற்றும் அதற்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நேற்றைய பொதுக் கூட்டமொன்றில் அளித்த பதிலடிதான் சுவாரசியமான விஷயம். தினகரனையும் சன் டிவியையும் விமர்சித்ததற்காக வை.கோமீது மன்னிப்புக் கேட்காவிட்டால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பினார்.



இதற்கு பதிலாக வை.கோ.

'நீ மட்டும் உண்மையான ஆண்மகனான இருந்தால் என்மீது வழக்குத் தொடு. இதோ, சூரியன் அஸ்தமித்து விட்டது. நீ கொடுத்த 24 மணி நேரக் கெடுவும் முடிந்து விட்டது. என் மீது வழக்கைத் தொடு. இந்த வைகோ மரணத்தை முத்தமிட்டாலும் முத்தமிடுவானே தவிர உன்னிடம் மன்னிப்புக் கேட்க மாட்டான். நீதிமன்றத்தில் வழக்குரைஞர் இல்லாமல் நானே என் வழக்கை ஆடுவேன். உன்னை சாட்சிக் கூண்டில் ஏற்றி கேள்விகள் கேட்பேன். அப்போது பல ரகசியங்கள் அம்பலமாகும்."


என்று சொன்னதற்கு பதிலடியாக தயாநிதி மாறனின் பேச்சு இது.

'நீ சரியான் ஆண்மகனாக இருந்தால் ..மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் உன் பக்கத்தில் மேடையில் அமரப்போகும் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேள். ..என்னை 19 மாதம் சிறையில் அடைத்தது ஏன்? மன்னிப்புக் கேள்.!'' என்று ஜெயலிதாவைப் பார்த்துக் கேட்கத் தயாரா?

தரங்கெட்டுப் பேசிவிட்டு அது கிராமத்துப் பாஷை என்கிறாயே, நான் சென்னை பாஷையில் கேட்கிறேன். ஒண்டிக்கு ஒண்டி வர்றியா? (அப்படீன்னா?) என்னோடு மோதத் தயாரா? முடியுமா உன்னால்? உன் வண்டவாளங்கள்தான் ஒவ்வொரு நாளும் செல் போன்கள் மூலம் தண்டவாளம் ஏறி உலகம் சிரிக்கிறதே...?

உன்னைப் போல் அல்ல உன்னைவிட கடுமையாகப் பேச எனக்கும் தெரியும். நீ என்ன பெரிய வழக்கறிஞனா பேச்சாளானா? உன் வழக்கில் வாதாடி ஜெயிக்கவே உன்னால் முடியவில்லை. நீ என்னை ஜெயிக்கப்போகிறாயாக்கும்.

எங்கள் இலக்கு ஜெயலலிதாதான் எனவே வைகோவே போ...உன்னை மன்னித்து விடுகிறேன்..

இப்படிப் போகிறது. தொலைக் காட்சியில் தயாநிதி மாறனின் இந்தப் பேச்சை பார்த்தபோது அவர் வைகோவின் உடல் மொழியை அப்படியே பின்பற்ற மிகவும் பிரயாசைப்படுகிறார். அவரைப்போலவே கால்களை எக்கி எக்கி உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயல்கிறார். அநாகரிகமாகப் பேசுவதில் அவரது விருப்பமும் பிரயாசையும் நன்றாகத் தெரிகிறது. ஆனால் இந்தியாவின் மெத்தப் படித்த, ஹை டெக் அமைச்சர் ஆயிற்றே. தமிழே கஷ்டப்பட்டுப் பேசும் தயாநிதி மாறன் கொச்சைக்கு எங்கே போவது? ஆனாலும் செந்தமிழே நாப்பழக்கம் என்கிறபோது இந்தத் தமிழை பழகிக் கொள்வது ஒன்றும் கஷ்டமல்ல. மேலும் ஆபாசமாக பேசக் கற்றுக் கொள்வது தயாநிதி மாறனின் மேட்டுக் குடி பாவனைகளை களைந்து 'மக்களிடம்' மிகவும் நெருங்கிச் செல்லப்பயன்படலாம். சிவாஜி கணேசன் ஒரு அமெச்சூர் நடிகனைப்பார்த்து புன்னகைப்பதுபோல வை.கோ தயாநிதி மாறனைப் பார்த்து புன்னகைக்கக் கூடும். ஆனால் இந்தப் பேச்சு கலைஞருக்கு நிச்சயம் பதட்டத்தை கொடுத்திருக்கும். மேடையிலேயே ' பெரியார் அண்ணா பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று பேரனை செல்லமாகக் கடிந்துகொண்டார்.(அதே மேடையில் வீற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா. பாண்டியன் ' இந்த அளவு மத்திய தடம் புரண்டு பேசுகிறார் என்றார் எந்த அளவுக்கு அவர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பார்' என விளக்கமளித்து தயாநிதி மாறனை ஒரு மன நோயாளி ரேஞ்சூக்கு கொண்டு சென்றுவிட்டார். தயாநிதி மாறனுக்கு மனப் பிறழ்வை தூண்டியதற்காக நஷ்ட ஈடு கேட்டு வை.கோவிற்கு நோட்டீஸ் அனுப்ப சட்டத்தில் இடம் இருக்கிறதா தெரியவில்லை.) ஏனெனில் ஸ்டாலினிடம் இதுபோன்ற ஒரு அதிரடியை தன் வாழ்நாளில் ஒரு முறைகூட பார்க்கும் சந்தர்ப்பம் கலைஞருக்கு வாய்க்கப் போவதில்லை. இது போன்ற பேச்சுக்கள் தொண்டர்களிடம் எத்தகைய வரவேற்பை தயாநிதி மாறனுக்கு வருங்காலத்தில் பெற்றுத்தரும் என்பது கலைஞருக்குத் தெரியும்.

திராவிட இயக்கத்தின் உண்மையான அடுத்த கட்ட வாரிசு உதயமாகிவிட்டார் என்பதற்கு அடையாளமாக தயாநிதி மாறனின் இந்தப் பேச்சை தமிழர்கள் கொண்டாட வேண்டும்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

Sunday, March 26, 2006

யாருடைய முத்தங்களும்

யாருடைய முத்தங்களும்
யாருக்கும் நினைவிருப்பதில்லை
கசப்பின் சின்னஞ் சிறுகீறல்
உங்ளங்கை ரேகையாகப் படிந்து
நம் விதியை எழுதுகிறது

எல்லாப் பரிசுப்பொருட்களும்
எப்படியோ பழசாகிவிடுகின்றன
புறக்கணிப்பின் முற்களோ
யாரும் நீருற்றாமலேயே வளர்ந்துகொண்டிருக்கின்றன

எவ்வளவு நேரம் தட்டிக்கொண்டிருந்தோம்
பிரியத்தின் ஒற்றை சாளரம் திறக்க
இருள் வருவதுபோல
சுவர்களைக் கடந்து உள்ளே வந்துவிடுகிறது
கசப்பின் நிழல்கள்

நீ என்னிடம் வரும்போது
ஒரு பறைவையின் சிறகுகளோடு வருகிறாய்

போகும்போது
புகைபோக்கியின் வழியாக
ஆவியாகிச் செல்கிறாய்.

மனுஷ்ய புத்திரன்

Saturday, March 25, 2006

ஒரே ஒரு மீன்

மீன் தொட்டியில்
எல்லா நீரையும் வடித்த பிறகு
மீன்கள்
தம் பனித்த
உறைந்த கண்களால்
வெறுமனே
ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருகின்றன

ஒரு மீன்
துள்ளுகிறது.

சும்மா
துள்ளுகிறது.

யாரும் பதட்டமடையத்
தேவையில்லை.

எனக்கு உறுதியாகத் தெரியும்

ஒரே ஒரு மீன்தான்
துள்ளுகிறது.

மனுஷ்ய புத்திரன்

Sunday, March 19, 2006

பிம்பம்

என்னை நீ
புரிந்துகொள்வதில்
புதிர்களோ
குழப்பங்களோ
இல்லை

எனது நிழல்களுக்கு
நீ அஞ்சவேண்டியதுமில்லை

நீ திறக்க முடியாத
எனது பெட்டிகளில் சாவித் துவாரங்களில்
துருப்பிடித்த ஆணிகளைச் சொருகத் தேவையே இல்லை

நான் கைமறதியாய் விட்டுச் செல்லும் தடயங்களில்
என்னைபற்றி உனக்கு
எதுவுமே கிடைக்கப் போவதில்லை

சும்மா
ஒரு சுவாரசியத்திற்காக
கண்ணாடியில் என் பிம்பங்களை
கொஞ்சம் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறேன்
அவ்வளவே

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com