Wednesday, April 05, 2006

ஹை டெக் அமைச்சரின் உடல் மொழியும் வாய் மொழியும்.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவின் மிகப் பெரிய பிரசார பீரங்கி வை.கோ என்பதில் சந்தேகமில்லை. வை.கோ வின் டி.வி ஆசை தீரத் தீர ஜெயாடிவியில் காட்டிக் கொண்டிருக்கும் வை.கோவின் தனி நபர் நடிப்பை உலகெங்கும் உள்ள தமிழ் கூறும் நல்லுலகம் கண்டு களித்துக்கொண்டிருக்கிறது. வை.கோவின் பேச்சுக்கு கிடைக்கும் இந்த வரவேற்பு ஜெயலலிதாவை வெகுசீக்கிரம் பதட்டமைடையச் செய்யப் போவது உறுதி. ஜெயலலிதா அவருடைய நிழலில் ஒரு புல் பூண்டைக் கூட வளர விட மாட்டார். வை.கோவின் நாக்கை எப்போது கட்ட வேண்டும் என்று ( அறுக்க வேண்டும் என்று எழுதினால் மிகவும் வன்முறையாகப் போய்விடும்) அவருக்குத் தெரியும். இந்தப் பதிவில் நான் குறிப்பிட வந்தது இதையல்ல. சன் டிவி மற்றும் தினகரன் நாளிதழின் மீது வை.கோ தொடுத்துவரும் தாக்குதல் மற்றும் அதற்கு மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நேற்றைய பொதுக் கூட்டமொன்றில் அளித்த பதிலடிதான் சுவாரசியமான விஷயம். தினகரனையும் சன் டிவியையும் விமர்சித்ததற்காக வை.கோமீது மன்னிப்புக் கேட்காவிட்டால் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பினார்.இதற்கு பதிலாக வை.கோ.

'நீ மட்டும் உண்மையான ஆண்மகனான இருந்தால் என்மீது வழக்குத் தொடு. இதோ, சூரியன் அஸ்தமித்து விட்டது. நீ கொடுத்த 24 மணி நேரக் கெடுவும் முடிந்து விட்டது. என் மீது வழக்கைத் தொடு. இந்த வைகோ மரணத்தை முத்தமிட்டாலும் முத்தமிடுவானே தவிர உன்னிடம் மன்னிப்புக் கேட்க மாட்டான். நீதிமன்றத்தில் வழக்குரைஞர் இல்லாமல் நானே என் வழக்கை ஆடுவேன். உன்னை சாட்சிக் கூண்டில் ஏற்றி கேள்விகள் கேட்பேன். அப்போது பல ரகசியங்கள் அம்பலமாகும்."


என்று சொன்னதற்கு பதிலடியாக தயாநிதி மாறனின் பேச்சு இது.

'நீ சரியான் ஆண்மகனாக இருந்தால் ..மீசை வைத்த ஆம்பளையாக இருந்தால் உன் பக்கத்தில் மேடையில் அமரப்போகும் ஜெயலலிதாவைப் பார்த்துக் கேள். ..என்னை 19 மாதம் சிறையில் அடைத்தது ஏன்? மன்னிப்புக் கேள்.!'' என்று ஜெயலிதாவைப் பார்த்துக் கேட்கத் தயாரா?

தரங்கெட்டுப் பேசிவிட்டு அது கிராமத்துப் பாஷை என்கிறாயே, நான் சென்னை பாஷையில் கேட்கிறேன். ஒண்டிக்கு ஒண்டி வர்றியா? (அப்படீன்னா?) என்னோடு மோதத் தயாரா? முடியுமா உன்னால்? உன் வண்டவாளங்கள்தான் ஒவ்வொரு நாளும் செல் போன்கள் மூலம் தண்டவாளம் ஏறி உலகம் சிரிக்கிறதே...?

உன்னைப் போல் அல்ல உன்னைவிட கடுமையாகப் பேச எனக்கும் தெரியும். நீ என்ன பெரிய வழக்கறிஞனா பேச்சாளானா? உன் வழக்கில் வாதாடி ஜெயிக்கவே உன்னால் முடியவில்லை. நீ என்னை ஜெயிக்கப்போகிறாயாக்கும்.

எங்கள் இலக்கு ஜெயலலிதாதான் எனவே வைகோவே போ...உன்னை மன்னித்து விடுகிறேன்..

இப்படிப் போகிறது. தொலைக் காட்சியில் தயாநிதி மாறனின் இந்தப் பேச்சை பார்த்தபோது அவர் வைகோவின் உடல் மொழியை அப்படியே பின்பற்ற மிகவும் பிரயாசைப்படுகிறார். அவரைப்போலவே கால்களை எக்கி எக்கி உணர்ச்சிகளை வெளிப்படுத்த முயல்கிறார். அநாகரிகமாகப் பேசுவதில் அவரது விருப்பமும் பிரயாசையும் நன்றாகத் தெரிகிறது. ஆனால் இந்தியாவின் மெத்தப் படித்த, ஹை டெக் அமைச்சர் ஆயிற்றே. தமிழே கஷ்டப்பட்டுப் பேசும் தயாநிதி மாறன் கொச்சைக்கு எங்கே போவது? ஆனாலும் செந்தமிழே நாப்பழக்கம் என்கிறபோது இந்தத் தமிழை பழகிக் கொள்வது ஒன்றும் கஷ்டமல்ல. மேலும் ஆபாசமாக பேசக் கற்றுக் கொள்வது தயாநிதி மாறனின் மேட்டுக் குடி பாவனைகளை களைந்து 'மக்களிடம்' மிகவும் நெருங்கிச் செல்லப்பயன்படலாம். சிவாஜி கணேசன் ஒரு அமெச்சூர் நடிகனைப்பார்த்து புன்னகைப்பதுபோல வை.கோ தயாநிதி மாறனைப் பார்த்து புன்னகைக்கக் கூடும். ஆனால் இந்தப் பேச்சு கலைஞருக்கு நிச்சயம் பதட்டத்தை கொடுத்திருக்கும். மேடையிலேயே ' பெரியார் அண்ணா பாசறையில் பயிற்சி பெற்றவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று பேரனை செல்லமாகக் கடிந்துகொண்டார்.(அதே மேடையில் வீற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா. பாண்டியன் ' இந்த அளவு மத்திய தடம் புரண்டு பேசுகிறார் என்றார் எந்த அளவுக்கு அவர் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பார்' என விளக்கமளித்து தயாநிதி மாறனை ஒரு மன நோயாளி ரேஞ்சூக்கு கொண்டு சென்றுவிட்டார். தயாநிதி மாறனுக்கு மனப் பிறழ்வை தூண்டியதற்காக நஷ்ட ஈடு கேட்டு வை.கோவிற்கு நோட்டீஸ் அனுப்ப சட்டத்தில் இடம் இருக்கிறதா தெரியவில்லை.) ஏனெனில் ஸ்டாலினிடம் இதுபோன்ற ஒரு அதிரடியை தன் வாழ்நாளில் ஒரு முறைகூட பார்க்கும் சந்தர்ப்பம் கலைஞருக்கு வாய்க்கப் போவதில்லை. இது போன்ற பேச்சுக்கள் தொண்டர்களிடம் எத்தகைய வரவேற்பை தயாநிதி மாறனுக்கு வருங்காலத்தில் பெற்றுத்தரும் என்பது கலைஞருக்குத் தெரியும்.

திராவிட இயக்கத்தின் உண்மையான அடுத்த கட்ட வாரிசு உதயமாகிவிட்டார் என்பதற்கு அடையாளமாக தயாநிதி மாறனின் இந்தப் பேச்சை தமிழர்கள் கொண்டாட வேண்டும்.

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

6 comments:

சம்மட்டி said...

தயாநிதி மாறன் திமுகாவிற்கு தயார்நிதி மாறன் ஆகிவிட்டார் என்று சொல்கிறீர்கள்

Anonymous said...

ஆமாம். தயாநிதி மாறனின் பேச்சுக்கள் மிகவும் லோ லெவலில் இருந்தது. அவரின் உடல் ஆட்டம் (பாடி லாங்க்வேஜ்) சரியில்லை. தயாநிதி மாறன் சிதம்பரம் வழியில் மேட்டுக்குடி லெவலிலேயே இருக்க முயற்சிக்கலாம். வெற்றி கொண்டான் லெவலில் இறங்கினால் அவரால் வெற்றி பெற முடியுமா - சந்தேகம் தான்!

வரவனையான் said...

கொஞ்சம் சீரியஸான கருத்தை எழுதிட்டு அதை நகைச்சுவை பகுதில இணைத்துததுதான் உங்களின் குறும்பு வெளிப்படு இடம்

சந்திப்பு said...

மனுஷ்ய புத்திரன் நானும் அந்தக் காட்சியை (கண்றாவியை) டி.வி. பார்த்தேன். ஏற்கெனவே திராவிட இயக்கங்கள் பொதுக்கூட்ட மேடைகளை ஆபாச மேடையாக மாற்றி விட்டனர். அதுவும் போதாது என்று நமது மத்திய அமைச்சர்! தயாநிதியின் பேச்சு மிக கீழ்த்தரமானதாக இருந்தது. இதில் எந்தவிதமான அரசியல் முதிர்ச்சையும் பார்க்க முடியவில்லை. தற்போதைக்கு கைத்தட்டல் வாங்கலாம்... அதே சமயம் இவர்களது பேச்சைப்பார்த்து மக்கள் நகைப்புடன் கைத்தட்டத் துவங்கும் போது வைகோ - தயாநிதி இவர்கள் காணாமல் போவார்கள். தரமான அரசியல் சூழல் தமிழகத்தில் என்று உருவாகுமோ?

ராம்கி said...

//திராவிட இயக்கத்தின் உண்மையான அடுத்த கட்ட வாரிசு உதயமாகிவிட்டார்

தேவுடா.. தேவுடா! :-)

Kuppusamy Chellamuthu said...

ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலமாகத் தான் உங்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறேன். உயிர்மை இதழைச் சில சமயங்களில் தான் வாசித்திருக்கிறேன். ஆகையால் ஒரு படைப்பாளியாகவும், தனி மனிதனாகவும் உங்களைப் பற்றிக் கருத்துக்கூறும் அருகதை எனக்கு இல்லாமல் போகலாம். (சென்னையில் இந்த வருடம் நடந்த புத்தகக் கண்காட்சியில் 'உயிர்மை'க் கூடாரத்தின் முன் நீர் அமைந்திருந்ததைக் கண்டும் என்னை அறிமுகம் செய்து பேசிக்கொள்ளாமல் நடையைக் கட்டியதற்கு அது தான் காரணம்.)

ஆயினும், வெகுஜனப் பத்திரிக்கைகளின் அளவிற்கு இலக்கியப் பத்திரிக்கைகளின் வர்த்தக வெற்றி ஒரு போதும் இருந்ததில்லை என்றாலும் (அநேகமாக இருக்கப்போவதும் இல்லை என்றாலும் கூட) உங்களைப் போன்றவர்களின் அர்ப்பணிப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.

a disclaimer.... கீழ்க்காணும் வரிகள் உங்களைக் குறிப்பதாகாது.
அனைவருக்கும் புரிகிற வகையில் எளிய பதங்களைக் கையாண்டு எழுதுவது, தன்னைத் தரம் தாழ்த்திக் கொள்வதாகப் பல (இலக்கியவாதி) எழுத்தாளர்கள் கருதுவதாகப் புரிகிறேன். இது உயரிய பண்பா இல்லையா என விவாதிக்கவோ, கருத்துக்கூறவோ, விமர்சிக்கவோ நான் முயலவில்லை. சும்மா மனசுல பட்டதச் சொல்லணும் போல இருந்துச்சு. அதான்.
பிறகு வெகுஜன உலகில் வெற்றி பெற்ற வைரமுத்துவையும், சுஜாதாவையும் கண்டு இவர்கள் பொருமுவது ஏன்? அய்யோ.. எனக்கு நாக்குல சனி (நாத்திகன் நாக்கிலுமா சனி வீற்றிருக்கிறார்?). நான் சொன்னத ஈரத்துணியால அழிச்சுருங்க.
end of disclaimer

இந்த்க் குறிப்பிட்ட கட்டுரையைப் பொறுத்தவரை, 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பாரதிராஜா நெய்வேலியில் பேசியது போல, கால் நூற்றாண்டாகவே நமக்கு இடுக்கண் தான் என்றெல்லாம் உண்மையை நினத்துப் பார்க்க வேண்டியதில்லை. வாரக் கடைசியில் தவறாமல் திருட்டு வி.சி.டி யில் படம் பார்க்கும் என் சக ஊழியர் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக அதைச் செய்வதில்லையென்றார். Pre-election events entertain him more than what those movies would have done.

குப்புசாமி செல்லமுத்து