Sunday, March 19, 2006

பிம்பம்

என்னை நீ
புரிந்துகொள்வதில்
புதிர்களோ
குழப்பங்களோ
இல்லை

எனது நிழல்களுக்கு
நீ அஞ்சவேண்டியதுமில்லை

நீ திறக்க முடியாத
எனது பெட்டிகளில் சாவித் துவாரங்களில்
துருப்பிடித்த ஆணிகளைச் சொருகத் தேவையே இல்லை

நான் கைமறதியாய் விட்டுச் செல்லும் தடயங்களில்
என்னைபற்றி உனக்கு
எதுவுமே கிடைக்கப் போவதில்லை

சும்மா
ஒரு சுவாரசியத்திற்காக
கண்ணாடியில் என் பிம்பங்களை
கொஞ்சம் சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறேன்
அவ்வளவே

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

3 comments:

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கவிதைகள் கொஞ்சம் புரிவதற்கு சிரமமாக இருக்கிறது நண்பரே..

கவிதைகள் பற்றிய தங்களின் தனிப்பட்ட விளக்கம் என்ன..?

Karthikeyan said...

நீங்கள் எழுதிய 'மழை' கவிதை மிக நன்றாயிருக்கிறது... மழை வரும்போது, மனநிலைமாற்றங்கள் என்னென்ன என கேட்கும்போது சுவாரஸியமான விஷயங்களாக உள்ளன...

'பிம்பம்' கவிதையை படிக்கும்போது, காதலிக்கு விளக்கும் காதலன் (அல்லது காதலனுக்கு விளக்கும் காதலி?) போல்தான் தோன்றுகிறது.

தன்னைப்பற்றி அறிய ஆவலுடன் இருப்பது தேவையற்றது, 'நான் இவ்வளவே... என் பொய்முகங்களை நம்பாதே.' என்று சொல்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறேன்...

கொஞ்சம் விளக்கம் தயவுசெய்து....

அன்புடன்
கார்த்திகேயன்

Anonymous said...

தோழரே,
உங்கள் கவிதை மொழி மிக
அற்புதம்.தொடர்க.

elamraji@gmail.com