Tuesday, March 22, 2005

சவக் கிடங்கிற்குச் செல்லும் விடுதலை ரயில்

ஷோபாசக்தியின் 'ம்'

மனுஷ்ய புத்திரன்


வன்முறை தோய்ந்த சமகால அரசியல் சமூக வரலாற்றை எழுதுவதென்பது ஒரு கலைஞனுக்கு ஏற்படுத்தும் சவால்கள் கடுமையானவை. அரசியல் நிலைப்பாடுகளும் அறவியல் சார்ந்த ஆதாரமான கேள்விகளும் பல சமயங்களில் எதிர் நிலைகளாகிவிடுகின்றன. ஒருவரது அரசியல் நம்பிக்கைகள், நிலைபாடுகள் குறித்த கேள்விகள் தீவிரமடையும்போது உண்மைகளைவிட நிலைப்பாடுகளும் அறத்தைவிட கொள்கைகளும் முக்கியமடைந்துவிடுகின்றன. ஆனால் ஒரு கலைஞன் அரசியல் ரீதியாக நியாப்படுத்தப்படும் கொலைகளின் பின்னிருக்கும் ரத்தக் கவுச்சியையும் மறைக்கப்படும் வாதைகளின் கூக்குரலையும் கேட்கவேண்டியவனாகிவிடுகிறான். அவ்வாறு கேட்கும்போது அவனது நம்பிக்கைகள் முற்றாகக் கலைக்கப்பட்டு வாழுதலின் அர்த்தத்தையும் நீதியையும் சிதைவுகளின் ஊடே தேடிச் செல்கிறான். அவ்வாறு தேடிச் செல்லும் கதையே ஷோபா சக்தியின் 'ம்'

1980க்ளுக்குப் பிந்தைய ஈழத்தின் அரசியல் சரித்திரத்தை சொல்லும் இக்கதை உண்மையில் ஒரு தேசத்தின் வரலாற்றையோ, சித்திரவதைகளின் கதையையோ, அல்லது இதுவரை சொல்லப்படாத சம்பவங்களையோ சொல்லப்பட்டதைவிட அதிகமான குரூரங்களையோ சொல்லிவிடவில்லை. நேசகுமாரனுக்கு நடந்தவை அனைத்தும் பல்வேறு வழிகளில் நம்மால் கேட்கப்பட்டுவிட்டன. ஆனால் இதுவரை கேட்ககப்படாதது இந்த கதைக்குள் வாழும் ஒரு மனிதனின் தன்னழிவும் மன முறிவும்தான். இந்தத் தன்னழிவு வரலாற்றில் பதிவு செய்ய முடியாதது. வரலாற்றை உருவாக்கும் மாமனிதர்களின் கனவுகளில், தியாகங்களுக்கான அறைகூவல்களில்., மாபெரும் விடுதலை இலட்சியங்களில் இந்தத் தன்னழிவிற்கு இடம் கிடையாது. அவை பைத்தியக்கார்களின் குறிப்பேடுகளில் கிறுக்கபட்ட ரகசியக் குறிப்புகளாகிவிடுகின்றன. இந்த ரகசியக் குறிப்புகள் வாழ்க்கையின் மீதான எல்லாக் கற்பிதங்களையும் எள்ளி நகையாடுகின்றன. சிதறடிக்கப்பட்ட மனிதன் என்ற கற்பிதத்தின் சிதிலங்களிலிருந்துதான் ஷோபாசக்தின் இந்த நாவல் தொகுக்கப்படுகிறது. போராட்டம், விடுதலை, தியாகம், புனிதமரணங்கள் என அலங்கரிக்கப்பட்ட மகத்தான பலிபீடங்களை இக்கதை தகர்த்து விடுகிறது.

ஷோபாசக்தி வன்முறையின் எல்லாப் பக்கங்கங்களையும் திறந்து பார்க்கிறார். ஒடுக்குமுறைக்கும் விடுதலைக்குமிடையே வாழ்வின் ஒவ்வொரு மூலையையும் இந்த வன்முறை சூழ்ந்திருக்கிறது. 83 ஜூலைக் கலவரங்களின்போது வெலிகட சிறையில் நடந்த படுகொலை சம்பவங்கள் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் மிக முக்கியமான திட்டமிட்ட மனித அழிப்புகளில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஈழப் போராட்டத்தின் பெருங்கனலை மூட்டிய இந்த அழித்தொழிப்பைப் பற்றிய மிகத் துல்லியமான விபரங்களைத் தரும் ஷோபா சக்தி ஆஷ்ட்விச் முகாம்களைப் பற்றிய குறிப்புகளோடு ஒத்துப்போகும் இலங்கைச் சிறைச்சாலைகள் பற்றிய குறிப்புகளை விரிவாகப் பதிவு செய்கிறார். இதற்கு கொஞ்சமும் குறையாத போராளிகளின் வதை முகாம்கள் பற்றிய விவரணைகள் இணைகோடாக நாவலில் நீள்கிறது. இலங்கை அரசின் வதை முகாம்கள்... போராளிகளின் வதை முகாம்கள்... இவையிரண்டும் விடுதலை என்ற ரயிலின் தண்டவாளங்களாக மாறிவிடுகிறது. விடுதலை ரயிலின் வதை முகாம்களிலான பெட்டிகளில் நேசகுமாரன் தொடர்ந்து மாறி மாறிப் பயணம் செய்கிறான். இந்தப் பயணத்தின் வழிநெடுக சிதைக்கப்படும் உடல்களைத் தவிர வேறு காட்சிகளே இல்லை. ஒரு பிரமாண்டமான சவக் கிடங்கை நோக்கி விடுதலை ரயில் சென்றுகொண்டே இருக்கிறது.

நேசகுமாரன் ஏன் முக்கியமான சந்தர்பங்களில் தனது தோழர்களைக் காட்டிகொடுத்தான்? ஏன் தனது இலட்சியங்களைவிட்டுத் தப்பி ஓடினான்? ஏன் தனது சொந்த மகளின் கர்ப்பத்திற்கு காரணமாக இருந்தான் என்ற கேள்விகளுக்கான பதிலை ஒருவர் அரசியல் ரீதியாகவோ உளவியல்ரீதியாகவோ தேடிச் செல்லலாம். ஆனால் மனிதர்களைத் தூண்டுவது இலட்சியங்கள் மட்டுமல்ல, வாழ்வாசையும் ஆதாரமான இச்சைகளின் தர்க்கமற்ற இயல்புகளும்தான். இந்த இரண்டுக்குமான தீர்க்கமுடியாத முரண்கள்தான் நேசகுமாரனின் செயல்களை தீர்மானிக்கின்றன. குரூரமாக சிதைக்கப்படும் உடல்களிலிருந்தும் மனங்களிலிருந்தும் உருவாகும் புதிய மனிதனுக்கு, இந்த யுகத்தின் மனிதனுக்கு ஒரு குறியீடே நேசகுமாரன். இந்த மனிதன் வீழ்சியிலிருந்தும் அவநம்பிக்கையின் கசப்பிலிருந்தும் பிறப்பவன். சமூகத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டவன். தனக்கென நியாயங்கள் இல்லாதவன்.

ஆனால் நேசகுமாரனின் சிறைத் தோழனான பக்கிரி இலட்சியங்களைப் பாதுகாக்க தொடர்ந்து போராடுகிறான். அவன் எந்த இடத்திலும் நம்பிக்கை இழப்பதில்லை. சித்ரவதைகள் அவனை அச்சுறுத்துவதில்லை. அவனது ஆன்மாவை சிதைப்பதுமில்லை. அவன் கொல்லப்படும்வரை விடுதலையின் நெருப்பை அணையவிடாமல் பாதுகாத்துக்கொண்டே இருக்கிறான். பக்கிரியும் நேசகுமாரனும் உண்மையில் ஒரு கனவின் தவிர்க்க முடியாத இரண்டு பாதைகள்.

இந்த நாவலின் கட்டமைப்பு மிகவும் நுட்பமானது. இருபதந்தைந்து ஆண்டுகால ஈழத்து அரசியல் சமூக சரித்திரமும் அதை ஒட்டிய புலம்பெயர் வாழ்வியல்களமும் இந்த சிறிய நாவலில் அதன் எல்லா முரண்பாடுகளோடும் மிக உக்கிரமாக எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க தகவல்கள், குறிப்புகளால் சொல்லப்படும் இக்கதை அக் குறிப்புகள் அடுக்கப்படும், இடம் மாற்றப்படும்வித்தால் ஆழ்ந்த மனக்கசிவையும் அபத்த உணர்வையும் ஏற்படுத்துகிறது.

வாழ்வின் அபத்த முரண்கள் நாவல் முழுக்க குரூரமான அங்கதமாக உருக்கொள்கிறது. ஈழத்த்துப் படைப்புகளின் வெளிப்படும் உணர்ச்சிபூர்வமான சொல்லாடல்கள் எதுவும் ஷோபாசக்தியின் கதைகளில் இடம்பெறுவதில்லை. அன்னியனின் ஈரமற்ற மொழியில் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கிறார். செய்திக் குறிப்புகளை எழுதுபவனின் பாசாங்குடன் புனைவின் உக்கிரத்தை தீண்டுகிறது அவரது மொழி.

ஷோபாசக்தியின் கொரில்லா, தேசதுரோகி ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது வெளிவந்திருக்கும் 'ம்' அவரை ஈழத்து இலக்கியத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நவீன தமிழ் இலக்கியத்திலுமே முதன்மையான அரசியல் புனைகதையாளனாக முன்னிருத்துகிறது. கருப்புப் பிரதிகள் இந்நாவலை வெகு நேர்த்தியாக பதிப்பித்திருக்கிறது.

'ம்' /நாவல்/ஆசிரியர்: ஷோபாசக்தி.வெளியீடு: கருப்புப் பிரதிகள்,45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை600 005பக்கம்:168, விலை:ரூ.80.

(இதன் சற்றே சுருக்கப்பட்ட வடிவம் இந்தியா டுடே மார்ச் 30, 2005 இதழில் வெளியாகியிருக்கிறது)

5 comments:

Narain Rajagopalan said...

இப்போது தான் அலுவல்களுக்கிடையே படித்துக் கொண்டிருக்கிறேன்.

//உணர்ச்சிபூர்வமான சொல்லாடல்கள் எதுவும் ஷோபாசக்தியின் கதைகளில் இடம்பெறுவதில்லை. அன்னியனின் ஈரமற்ற மொழியில் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கிறார்//

இதை மிக முக்கியமாகப் பார்க்கிறேன். மரத்துப் போன மனங்களில், வலிகளைப் பற்றிய நினைவுகள் மட்டுமே எஞ்சும். கண்ணீருக்கும், கூப்பாடுகளுக்கும் அங்கே இடமில்லை. போர்களைப் பற்றிய எல்லா புத்தகங்களுமே, வாழ்வின் அபத்தத்தன்மையை முன்னிறுத்தபவை. கொள்கைகள், நம்பிக்கைகள், இயக்கங்கள், கனவுகள் இவையனைத்துமே ஒரு சிலரின் சிந்தனாப்போகினை முதலீடாக்கி,அதன் பின்னை ஆட்டு மந்தைப் போல் பின்தொடருபவர்களின் கூக்குரலும், பேச்சுக்களும், எழுத்துமேயாகும். கொஞ்சம் எதிர்மறையாய் தெரிந்தாலும், மனித வாழ்வினைப்போல் தான் இயக்கங்களும், நம்பிக்கைகளும், நிறையாய் வாழ்வது, வாழ்வில் எதிரொலிப்பது சில கணங்களே, பின் நீர்த்துப்போய், தன் இறுதி காலத்தை எதிர்நோக்கி, தாஜ்மகாலை பார்த்திருந்த ஷாஜஹானின் நிலையோடு ஒத்ததுதான்.

நீங்கள் சொல்லியிருப்பது போல், நவீன ஈழ/தமிழ் இலக்கியத்தில் ஷோபா சக்தியின் இருப்பு இதனாலேயே மிக முக்கியமாக கவனிக்கப்படும்.

ROSAVASANTH said...

முக்கியமான பதிவு. நாவலை படித்து மூன்று மாதங்களாய் அது குறித்து ஒரு பதிவு எழுதிவிட வேண்டுமென்று பார்கிறேன். நாவலை மீண்டும் ஒரு முறை எழுதிப்பார்பதை தவிர வேறு வழியில் அதை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.

இளங்கோ-டிசே said...

மனுஷ்ய புத்திரன் நல்லதொரு அறிமுகத்தை 'ம்' ற்கு கொடுத்திருக்கின்றீர்கள். தேவிபாரதியும் காலச்சுவடில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தார் என்று நினைவு. இந்தியா ரூடேயில் வந்த பதிவை இங்கேயும் உள்ளிட்டதற்கு உங்களுக்கு நன்றி.

Anonymous said...

நல்ல பதிவு

Karunah said...

ஷோபா சக்தியின் இந்த நாவலை 3 பருவங்களாக நான் காண்கிறேன்.

நேசகுமாரன் குருத்துவ படிப்பைவிட்டுவிட்டு தன்இனத்தின்விடுதலை உணர்வால் உந்தப்பட்டு
இயக்கம் எறிகுண்டு துப்பாக்கியென்று உழன்றுதிரியும் அவனது விடலைப்பருவம்.

கைதாகி அரச, இயக்கப்பயங்கர வாதங்களுக்காளாகி சிறைகளிலும் வதைபடும் குரூரம் நிறைந்தகாலங்கள்.

ஐரோப்பிய மண்ணில் அகதியாகத் தரையிறங்கிய பின்னான வாழ்க்கை.

அதிகாரமும் அதர்மமும் அராஜகமும் நிறைந்த உலகில் பந்தாடப்பட்டு உடல் சிதைவும் ஊனமும் கண்டு நொந்தவனின்
கதையை ஷோபாசக்தி பனைத்தீவிலிருக்கக்கூடிய ஒரு சாதாரணனின் அலங்காரமற்ற மொழியில் கதைப்பதே அக்கதையை எம்நெஞ்சுக்குகிட்ட நெருக்கிவைக்கும் தலையான சாதனமாகும்.

கனகரட்ணம் சண்முகநாதன் என்ற அப்பாவி 16 வருஷங்கள் வழக்குகள் ஏதுமின்றிச் சிறைபட நேர்ந்ததையும் பற்கள் கொறடுகளால் பிடுங்கப்பட நேர்வவதையும் அறிந்து இரத்தக்கண்ணீர் வழிகையில், நேசகுமாரனின் சக கைதிகளில் வரதராஜப்பெருமாள் இந்திய அரசின் 'ரோ' இணக்கிகொடுத்த தொத்தல் மாகாண அரசில் முதலமைச்சராக இருந்தானென்பதுவும், டக்ளஸ் தேவானந்தா சந்திரிகா தலைமையிலான மக்கள் ஐக்கியமுன்னணி அரசில் இந்து சமய கலாச்சார அமைச்சராகவும் கோலோச்சினான், தற்போது கோலோச்சுகிறானென்பதுவும் முரண்நகையான நிஜங்களாகும்.

இன்னும் கடல்கடந்துவிடாது இலங்கையின் சிறைகளின் மூடப்பட்ட சுவர்களுள் துயருறும் 2000வரையிலான நேசகுமாரன்களைக் கண்முன்னே நிறுத்துகிறார் ஷோபா சக்தி.

நேசகுமாரன் கலகக்குணம் கொண்டவன். ஈழத்திலான அவன் வாழ்வு அவத்தையில்(phase) தனது இனத்தின் விடுதலைக்காகப் போராட விழைகிறான். ஆயினும் வகையான(typical) தமிழ்நாவல்கள் சித்தரிக்கும் ஆதர்ச புருஷன் அல்லன்.
தியாகங்களின் அளவுக்கு , இக்கட்டான நெருக்கடியான சமயங்களில் தன் தலை தப்பிக்கவேண்டியும் தப்புகளையும் துரோகங்களையும் கூடவே செய்கிறான், இறுதியில் தான்பெற்ற மகளுக்கே துரோகம் செய்கிறான். ஒரு இக்கட்டான நேரத்தில் அவனுக்குத் தன் கைவளையல்களையே கழற்றித்தந்த சிறிகாந்தமலர் பொலிஸில் சரணடைய நேரவும் , டேவிட் ஐயாவுக்கு 32 வருஷங்கள் சிறைத்தண்டனை கிடைப்பதற்கும், பக்கிரி இரண்டு கைகளும் முறிந்துபோகும்படி அடித்து நொருக்குப்படவும், கலைச்செல்வன் சந்திரகலா ஆகியோரின் கொலைகளுக்கும் காரணமாகிறான்.

நேசகுமாரன் தன் துள்ளிளமைக்காலத்தில் அனுபவிக்க நேர்ந்த குரூரமும் பயங்கரமும் நிறைந்த அவல வாழ்வினாலுந்தான் மனப்பிறழ்வுக்காளாகித் தன் குஞ்சையே பெண்டாள்கிறானென்று அர்த்தப்படுத்த வேண்டியதில்லை. அவனது அவலவாழ்வின் அஜெந்தாவின் 'அதுவும்' நடந்தேறிவிடுகிறது. அவனால் தன் காமத்தை வெல்ல முடியவில்லை, தோற்றுப்போகிறான்.

அவனுக்குத் தன்தேசத்தைவிட்டு வெளியேறி பிரான்ஸ்வரை தப்பியோடவும் , ஆங்கொரு சிறு நகர மண்டபத்தில் பிறேமினியைத் திருமணம் செய்துகொள்ளவும் நிறமியைப்பெற்றுக்கொண்டு அவள் ஆளாகும்காலம் வரையிலான வாழ்வு அவத்தைக்கு அவன் மனப்பிறழ்வோ சிதைவோ யாதொரு வியாகூலமும் பண்ணவில்லை.

என்னால் அல்பேட் காம்யூ வார்க்கும் 'அந்நியனோ'டு வலுவாகவே இந்த நேசகுமாரனை ஒப்பிட முடிகிறது.
யாரும் தூண்டிவிடாமலே எவருடையதோ எதிரியையோ தாக்குகிறேனென்று புறப்பட்டுப்போய் கடற்கரையொன்றில் வலிந்தழைக்கப்படும் ஒரு சமரில் புகுந்து ஒரு கொலையையே பண்ணிவிடுகிறான் 'அந்நியன்'. அந்தக்கொலையை பிரக்ஞைபூர்வமாக அவனால் தவிர்த்திருக்க முடியும், ஆனாலும் கொலை நடந்துவிடுகிறது. பின்னால் அவனுக்கு கிடைக்கவிருக்கும் மரணதண்டனையிட்டான மரணபயமே அவன் கொல்லப்படுவதைவிட உபாதை தருவதாயிருக்கிறது.

இங்கேயும் " நேசகுமராபெற்ற மகளையே பெண்டாளடா " என்று எதுதான் அவனைத் தூண்டுகிறது?
ஆனாலும் அந்த துர்க்கனவு பலிதமாகிவிடுகிறது. அவன் அசல் பிரக்ஞையோடு தன் கிரியாம்சையின் முழுப்பரிமாணத்தையும் அறிந்தே புரிகிறான்.ஒரு கணம் மானுஷவிழுமியங்களிலிருந்து வழுக்கி அதலபாதாளத்தில் விழுந்தேவிடுகிறான். பின்விழித்துப்பார்க்கையில் முன்னர் செய்த தப்புக்களெல்லாவற்றையும்விட இதற்காக அதிகமாகவே பச்சாதாபப்படுகிறான். பின்னர் அதன் உறுத்தல்களே அவனை நடைப்பிணமாக்குகிறது.

மாளாத மனச்சுமையுடன் மாயும் அவன்மீது யாரும் காறி உமிழவோ , கல்லைவிட்டெறியவோ தேவையில்லை.
அவன் மனச்சாட்சியே அவனுக்கு ஆயுள்பரியந்தம் கசையடிகளை வழங்கும். அல்லது அவன் மனப்பிறழ்வே அத்துர்க்கனவைக் கழுவிவிடுமென்றால் அதுகூட அவனுக்கு விடுதலையே.
பனிக்காட்டுமலையில் பிணத்தைக்காவித்திரியும் கிழவனுக்குப்படும் கசையடியோடு மனப்பிறழ்வு உண்டாவதைக் குறியீடாகச் சுட்டுவதன் மூலம் பல சாத்தியங்களையும் உணர்த்துகிறார் ஆசியர்.

ஷோபா சக்தியின் பேனாவில் ஊறுவது மை மாத்திரமல்ல கூடவே தைரியமும் துணிச்சலும்!

பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின்.