Sunday, June 19, 2005

புதிய கவிதைகள்-11

Image hosted by Photobucket.com

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
ஒரு மழை நாளில்

குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
சற்றே மிதமான தண்டணைகளை
வழங்குகிறார்கள்

கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

ஒரு கண்டன ஊர்வலம்
சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

செய்யப்படாத வேலைகள் பற்றி
தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

வகுப்பறைகளில் குழந்தைகள்
ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

நண்பர்கள்
நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
ஒரு மழை நாளில்
நான் என் காதலைச் சொன்னபோது
நீ அதை
மறுக்கவும் இல்லை
ஏற்கவும் இல்லை

மனுஷ்ய புத்திரன்
uyirmmai@gmail.com

9 comments:

Anonymous said...

எனக்கு கவிதை பிடித்திருக்கிறது.
அதில் உள்ள வரிகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன மழைக்கு மழைநம்மை மந்திர சொல்லால் மாற்றி விடுவதை மனுஷ்ய புத்திரன் வெகு சிறப்பாக சொல்லி விட்டீர்கள்.

உமா

இ.இசாக் said...

தொடர்ந்து எழுதுங்கள்

நண்பன் said...

சூர்ய வெம்மையிலும்
ஈரம் கசியும் மழைகாலத்தில்
நேசம் படர்ந்தும் கிளர்ந்தும்
நெகிழ்த்தும் தருணத்தில்
ஆமோதித்தல் நிராகரித்தலென்ற
எல்லைகளில் ஏதாவதொன்றைத்
தாங்கிக் கொள்ளத் தயார்படுத்திக்கொண்டு தான்
காதலைச் சொன்னேன்.

நான் அறியவில்லை -
ஏற்பதும் மறுப்பதும் மட்டுமே வாழ்வல்ல -
அலட்சியப்படுத்துதலிலும்
காதல் ஒளிந்திருக்குமென்று
உனக்கு யார் சொல்லித்தந்தது?!

குழலி / Kuzhali said...

வணக்கம் மனுஷ்யபுத்திரன், கோடையின் வெம்மையில் பார்க்கும் அனைவரின் மீதும் ஒரு சிறிய எரிச்சலாவது வரும், பேருந்தினுள் அருகில் இருப்பவரை விரோதத்துடன் பார்ப்போம் ஆனால் மழைக்காலத்தில் இந்த எரிச்சல் விரோதம் ஏதுமிருக்காது

கவிதைக்கு நன்றி

Anonymous said...

It looks like an ordinary day at Calgary Canada.

I am longing to see smilar days in Tamilnadu

Anonymous said...

Can you please post the kavithai titled - "ஒரு பெருத்த அவமனதிற்கு பிறகு ..." ?

மிக்க நன்றி !
Ganesh :)

M.Rishan Shareef said...

கவிதை அருமை..!

Bee'morgan said...

சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகும் கணவர்கள் - மிக நுணுக்கமான சொல்லாடல்.. அருமை..

கார்த்திகா said...

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டஒரு மழை நாளில்தான் எல்லாம் இயல்பாக நடக்கிறது, இல்லையா?