Sunday, November 05, 2006

சதாமுக்கு மரண தண்டணை

21 ஆம் நூற்றாண்டில் வரலாற்று ரீதியாக முதன்முதலாக பதிவு செய்யப்படும், மிகப்பெரிய தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. உலகளாவிய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய தீர்ப்பு இது. அவரது இரு சகாக்களுக்கும் இந்த தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டவிரோத நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட கேலிக்கூத்தான தீர்ப்பு என்று கூறிய சதாமின் வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். சதாம் இன்னும் ஒரு மாதத்தில் தூக்கிலிடப்படுவார், பத்து நாளைக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி தீர்ப்பை வாசிப்பதை பொருட்படுத்தாமல் சதாம் ' அல்லாஹு அக்பர்' என்று தொடர்ந்து நீதி மன்றத்தில் முழங்கிக்கொண்டிருந்தார். இந்த முழக்கம் இடம் பெற்ற உணர்வுபூர்வமான தருணம் உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்களின் இதயத்தை தொடக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால் அது சர்வதேச அளவில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள் மிகக் கடுமையானவையாக இருக்கக் கூடும். அமெரிக்காவும் ஐரோப்பாவும் அதற்கான விலையை நெடுங்காலத்திற்கு கொடுக்க நேரிடலாம். மத்திய கிழக்கில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த சதாம் கொல்லப்படுவது பயன்படும் என அமெரிக்கா நினைப்பது வீண் கனவு.

சதாம் நிரபராதி அல்ல. ஆனால் அமெரிக்கா அவருக்கு தண்டணை வழங்க முடியாது. சதாமின் குற்றங்களுக்காக அவரை தூக்கிலிடுவது சரி என்றால் சதாமிற்கு அருகில் ஜார்ஜ் புஷ் சர்வதேச அளவில் புரிந்திருக்கும் போர்க் குற்றங்களுக்காக நூறு முறை தூக்கிலிடப்பட வேண்டும்.

இந்த தீர்ப்பை தொலைக் காட்சியில் இன்று மாலை பார்த்துக் கொண்டிருந்தபோது இரண்டு விஷயங்கள் வினோதமாக இருந்தன. முதலாவதாக தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் முகத்தில் காணப்பட்ட பதட்டமும் ஆத்திரமும். மேலும் அவரிடம் வெளிப்பட்ட சாத்தானின் உருத் தோற்றம். இது ஒரு நாடகக் காட்சியைப்போல இருந்தது. இரண்டாவதாக, பி.பி.சி ஈராக்கில் இத் தீர்ப்பை ஆதரித்து மக்கள் கொண்டாட்டங்களை நிகழ்த்துவதாக ஒரு படத் தொகுப்பினை காட்டியது. அதே படத் தொகுப்பை காட்டி தீர்ப்பிற்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபடுவதாக சன் டி.வி செய்தியில் காட்டப்பட்டது.

சதாம் அவ்வளவு எளிதில் தூக்கிலிடப்பட மாட்டார் என்றே இப் பதிவை எழுதும்போது தோன்றுகிறது. இந்தப் பிரச்சினையில் இந்தியா கோழைத்த்னமான மவுனம் சாதிக்க கூடாது என்றும் தோன்றுகிறது.

மனுஷ்ய புத்திரன்

8 comments:

கதிர் said...

இப்போதுதான் இந்த செய்தியை அறிந்தேன் பிபிசி தளத்தில்.

நடக்கப்போகும் நிகழ்ச்சிகளுக்காக இப்போதே மனது வேதனைப்படுகிறது.

ஒரு குற்றவாளியே தனது சகாவுக்கு தீர்ப்பு வழங்குவதாக இதை எடுத்துக்கொள்ளவேண்டும்.

வெங்கட்ராமன் said...

/**********************************

சதாமின் குற்றங்களுக்காக அவரை தூக்கிலிடுவது சரி என்றால் சதாமிற்கு அருகில் ஜார்ஜ் புஷ் சர்வதேச அளவில் புரிந்திருக்கும் போர்க் குற்றங்களுக்காக நூறு முறை தூக்கிலிடப்பட வேண்டும்.

**********************************/

நூற்றுக்கு நூறு சரியான வாதம்

Anonymous said...

எதற்காக ஐயா இந்தியா இதில் கருத்து எல்லாம் சொல்லவேண்டும்...?

இந்தியா போருக்கு படையும் அனுப்பவில்லை. மேலும், சதாமிடம் கையூட்டு வாங்கிய நாயெல்லாம் நம் கேபினட் மந்திரியாக இருந்தவன். இந்த லட்சணத்தில் நாம் அமேரிக்கா சதாமை தூக்கிலிடக்கூடாது என்று சொல்ல என்ன தகுதியிருக்கிறது...? நம் வீரத்தை இதில் காட்ட வேண்டிய அவசியம் தான் என்ன ?

அது கெடக்குது...சதாமை இப்ப அமேரிக்க தூக்கில் போடவில்லையென்றால், என்ன கிம் ஜுங் II அல்லது ஹூ ஜின் டோ வந்து தூக்கில் போடவேண்டுமா...?

Anonymous said...

நீண்ட நாளைக்குப் பிறகு பதிவெழுதியிருக்கிறீர்கள்.

சதாமைப்பொறுத்த வரை இது எதிர்பாராத தீர்ப்பல்லவே. எல்லோருக்குமே தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பது தெரிந்ததுதான். மேலும் பொதுவான போர்க்குற்றங்களுக்காக என்றில்லாமல் குறிப்பிட்ட கொலைக் குற்றச் சாட்டுகளின் பேரில் இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. அந்த வகையில் இதை மறுக்க முடியாது.

ஆனால் தீர்ப்பு வழங்கவும் விசாரணை நடத்தவும் அமெரிக்கா யார்? அந்த உரிமையை யார் அவர்களுக்குக் கொடுத்தது என்ற கேள்வி தொடர்ந்து வருகிறது. பிரச்சினைகளின் அடிப்படையே அங்குதான் இருக்கிறது. ஒரே உறையில் இரண்டு கத்திகள்...

வேறென்ன சொல்வது.
உலகம் இதே தவறை காலங்காலமாக சந்தித்துதான் வருகிறது. இந்த நூற்றாண்டுக்கு அமெரிக்கா...!

---------
http://valai.blogspirit.com/archive/2006/11/05/சதாமுக்கு-மரணதண்டனை.html&cmt=3

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
இரண்டாவதாக, பி.பி.சி ஈராக்கில் இத் தீர்ப்பை ஆதரித்து மக்கள் கொண்டாட்டங்களை நிகழ்த்துவதாக ஒரு படத் தொகுப்பினை காட்டியது. அதே படத் தொகுப்பை காட்டி தீர்ப்பிற்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபடுவதாக சன் டி.வி செய்தியில் காட்டப்பட்டது
///

இரண்டுமே உண்மைதான் ஷியா முஸ்லீம்கள் கொண்டாடுகிறார்கள். சன்னி முஸ்லீம்கள் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள்.

அமெரிக்காவில் செனட் தேர்தல் வரும் சமயம் வந்த இந்த முடிவு அரசியல் ரீதியாக எதாவது உதவும் என்று புஷ் எதிர்பார்த்தாரா என்று தெரியவில்லை. இது தேர்தலுக்காக நடந்ததா என்றும் தெரியவில்லை.

ஈராக் எதோ அமெரிக்காவில் இருக்கும் ஒரு மாகாணம் என்பதைப் போல நடத்தி இந்தத் தீர்ப்பை வெளியிட்டிருக்க்கிறார்கள். மொத்ததில் இது உலகம் இன்று இருக்கும் சூழ்நிலையில் இது ஒரு மிகப் பெரிய தவறாகத் தோன்றுகிறது.

சில சமயம் புஷ் - ஹிட்லர், அமெரிக்க மக்கள் - நாஜிக்கள், யூதர்கள் - முஸ்லீம்கள் என்ற அளவுக்கு வந்து விட்டதோ என்று ஐயுறத் தோன்றுகிறது.

Narain Rajagopalan said...

மனுஷ்,

இந்தியா மவுனம் சாதிக்கவில்லை. காங்கிரஸ்,கம்யுனிஸ்டுகள்,முஸ்லீம் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. செவ்வாய் கிழமை நடக்க போகும் தேர்தலை முன்னொட்டியே இந்த அவசரமான நிலைப்பாடு எடுக்கப்பட்டது. நீங்கள் சொன்ன நிறைய விஷயங்களோடு ஒத்துப் போகிறேன். ஆனாலும், கொளண்டமாலா சிறைகளின் சித்ரவதைகளூக்கு பிறகும் வேறெப்படியும் தீர்ப்பு இருககாது என்றே தெரிந்து இருந்தது. சதாமின் தண்டனை ஒரு மிகப்பெரிய உலகளாவிய உச்சக்கட்ட வெறுப்பினை அமெரிக்காவின் மீது உருவாக்கும். இது போக, இதன் பின் விளைவுகள் கண்டிப்பாக பயங்கரமாக இருக்கும் என்று சொல்லத்தோன்றுகிறது. IHB-இல் வந்த ஒரு விவாதம் உங்கள் பார்வைக்கு - http://www.iht.com/articles/ap/2006/11/06/europe/EU_GEN_Saddam_Verdict_World_View.php

Radha N said...

இந்த தீர்ப்பு முன்னரே தயாரிக்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றபின்னரே வெளியிடப்பட்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. தீர்ப்பு என்ற தீர்மானத்தினை வாசிக்கும் பொழுது, நீங்கள் சொல்வது போல் தான், நானும் உணர்கிறேன், இதில் அமெரிக்காவின் நயவஞ்சகத்தனம் முற்றிலும் கலந்திருக்கிறது. அமெரிக்கா என்னதான் சமாதானம் கூறப்போனாலும், அதன் கயமைத்தனம் எல்லோருக்கும் தெரியும்.

அமெரிக்காவின் இந்தச் செயல், நம்மூர் ரவுடிகளின் கட்டப்பஞ்சாயத்துக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை.

குற்றவாளி தண்டிக்கபடலாம், ஆனால் தண்டனை வழங்கும் முறையும் விசாரணை முறையும், நெறிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும்.

ரசாயண ஆயுதங்கள் இருப்பதாகக்கூறி தான் போர்தொடுத்தது அமெரிக்கா. அத்தகைய ஆயுதங்கள் இல்லையென்றால், உலகநாடுளிடம் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும்

Ananth said...

மனுஷ்ய புத்திரரே,

கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது, இங்கே நீங்கள் பதிவெழுதி.

புதிய பதிவுகளுக்காக நண்பர்கள் பலர் ஆவலுடன் காத்திருக்கிறோம்.