Saturday, March 19, 2005

ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்

ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் அறிவிக்கபட்டிருப்பதாக கவிஞர் சுகுமாரன் சற்றுமுன் தொலைபேசியில் அழைத்து தெரிவித்தார். தமிழுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவமான உணர்ச்சி இன்றி பெருமித்தத்துடன் அவற்றை வரவேற்கும் சந்தர்ப்பங்கள் அபூர்வம். ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் அறிவிக்கப்பட்டிருப்பது அத்தகைய ஒரு சந்தர்ப்பம். தமிழ்க் கதையை தமிழ் வாழ்வின் இருண்ட நிலப்பரப்புகளை நோக்கிச் செலுத்திய ஒரு பெரிய இயக்கம் ஜெயகாந்தன். பிச்சைக்காரர்களும் வேசிகளும் பொறுக்கிகளும் குரூரமாக நசுக்கப்பட்டவர்களும் பிறழ்வுகொண்டவர்களும் ஜெயகாந்தனின் வழியே தமிழ் எழுத்துப் பரப்பிற்கு வந்து சேர்ந்தார்கள். நகர்ப்புற, அக்ரஹார எதார்த்ததிலிருந்து தமிழ் வாழ்க்கையின் பிரமாண்டத்தை நோக்கிய முதல் திறப்பு அவர்.

பாரதிக்குப்பின் தமிழ் எழுத்தாளன் குறித்த ஒரு கம்பீரமான படிமத்தை ஜெயகாந்தன் வழங்கினார். அவரைப்பற்றிய கடும் விமர்சனங்களை இன்று ஒருவர் எழுப்பலாம். ஆனால் அவர் ஒரு தலைமுறையின் பெரும் சக்தி. என் இளமைக்கால ஆளுமையை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றிய அவரை இந்த சமயத்தில் வாழ்த்துவதில் மிகுந்த மன நெகிழ்ச்சி கொள்கிறேன்.

மனுஷ்ய புத்திரன்

8 comments:

இளங்கோ-டிசே said...

ஜெயகாந்தனிற்கு வாழ்த்துக்கள். (அகிலனுக்கு பிறகு இவரிற்கா தமிழில் இந்த விருது கிடைக்கின்றது?)
//அவரைப்பற்றிய கடும் விமர்சனங்களை இன்று ஒருவர் எழுப்பலாம். ஆனால் அவர் ஒரு தலைமுறையின் பெரும் சக்தி. //
உண்மை. மறுக்கமுடியாது.

Mookku Sundar said...

செய்திக்கு நன்றி.

திரு.ஜெயகாந்தனுக்கு கிடைத்த்தால், அந்தப் பரிசுக்கு பெருமை.நெஞ்சம் நிறைந்து இருக்கிறது.

PKS said...

FYI...

http://www.dinamani.com/newsheadlines.asp?page=3

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20050319042304&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0

Narain Rajagopalan said...

மனுஷ், கருத்துவேறுபாடுகளிருப்பினும் இது மிகப்பெரிய பெருமை. தமிழிலக்கிய வெளியை விரிவாக்கிய பெருமை ஜெ.வை சாரும். கதாமாந்தர்கள் ஒழுக்கசீலர்களாய் காட்சியளித்த புனைவுலகில், வெட்டியானையும், திருடர்களையும், மனநிலை பிறழ்ந்தவர்களையும் கதாபாத்திரங்களாக காட்டி, அவர்களின் மூலமாக மனித மனங்களின் விசாலத்திற்கு வழி வகுத்தவர். வாழ்த்துக்கள் ஜெயகாந்தனுக்கு.

சன்னாசி said...

ஜெயகாந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மு. சுந்தரமூர்த்தி said...

மனுஷ்யபுத்திரன்:
ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. அரசியல் தளத்தில் அவருடைய நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் எதிர்த் திசையில் இருக்கும் என்போன்றவர்களும் அவருடைய இலக்கியம், திரைப்படப் பங்களிப்புகளை நேர்மறையாகவே அணுகுவார்கள். தமிழ் எழுத்துலகம் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடவேண்டிய தருணம் இது.

ஒவ்வொரு ஆண்டும் சாஹித்ய அகாடெமிப் பரிசுகளைச் சார்ந்து தமிழில் நிலவும் இலக்கிய அரசியலை தவறாமல் விமர்சிக்கும் தமிழிலக்கியவாதிகள் ஞானபீட விருது போன்று அகில இந்திய அளவில் தமிழிலக்கியம் புறக்கணிக்கப்படுவதின் அரசியலை ஏனோ பேசாமல் இருந்திருக்கிறார்கள். அகிலனுக்கும், ஜெயகாந்தனுக்கும் இடையில் இவ்விருதைப் பெற்றவர்களின் பங்களிப்பை தமிழிலக்கியச் சாதனையாளர்களோடு ஒப்பிட்டு ஒரு விவாதம் நடத்தவேண்டும். அதற்கு 'உயிர்மை' மேடை அமைத்துத் தரலாம்.

Karunah said...

சென்ற ஆண்டில் ஞானபீடப்பரிசு பற்றிய கதையாடல் வந்தபோது ஒரு இணையப்பத்திரிகையின் ஆசிரியர்
ஞானபீடப்பரிசுக்கு யார் மிகப் பொருத்தமான தமிழ் எழுத்தாளராக இருப்பார் என நீங்கள் கருதுகிறீர்கள்?
என தமிழ் எழுத்தாளர்கள் (தாய்நில/ கடல்கடந்த) அனைவரிடமும் நட்பு ரீதியிலான ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினார்.

ஜெயகாந்தனின் அரசியலுடன் எனக்கு உடன்பாடு இல்லையாயினும் அவருடை எழுத்தாளுமை, எழுத்துப்பரப்பு, வயசு , அனுபவம் என்பவற்றை வைத்து நான் ஜெயகாந்தனை முதலாவதாகவும்,
சுந்தரராமசாமியை இரண்டாவதாகவும், இந்திரா பார்த்தசாரதியை மூன்றாவதாகவும் பரிந்துரைத்தேன்.
இப்போது ஜெயகாந்தனுக்கு ஞானபீடப்பரிசு கிடைத்துள்ளமையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். 'ஞானபீடப்பரிசு தகுதியற்ற ஒருவருக்குப் போய்விட்டது' என்ற கூச்சல்கள் அவ்வளவு எழாதென்றே நம்பலாம்.
நீலபத்மனாபன், கி.ராஜநாராயணன், கலைஞர், அசோகமித்திரன், சுஜாதா, ஜெயமோகன் ஆதியோரும் கருத்துக்கணிப்பில் அதிக வாக்குகள் பெற்றவர்கள் என்பது மேற்படி ஆசிரியருடனான தனிப்பட்ட உரையாடலில்
கிடைத்த கொசுறுச்செய்தியாகும்.

பொ.கருணாகரமூர்த்தி., பேர்லின் 20.03.2005

வல்லிசிம்ஹன் said...

எழுத்தாளர் ஜயகாந்தனின் எழுத்துக்களில் வளர்ந்தவர்கள் நாங்கள்.எங்களையே பாரட்டியது போல மகிழ்கிறேன்.
அந்த விழிப்புணர்வோடு இனியும் யாரவது எழுதுவார்களா தெரியாது.
நன்றி மனுஷ்ய புத்திரன்
நல்ல செய்தி. திரு.ஜயகாந்தனுக்கு எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.