Saturday, February 26, 2005

சுதந்திரம் பிளவு படாதது.

சங்கராச்சாரியார் விவகாரத்தில் ஜெயலலிதா அரசு காட்டி வரும் தீவிரம் இது ஒரு குற்ற வழக்கு மட்டுமல்ல என்ற சந்தேகத்தை ஒவ்வொரு நாளும் தீவிரமடையச் செய்து வருகிறது. அண்மையில் ஆடிட்டர் குருமூர்த்திமீது சங்கராச்சாரியார் விவகாரம் தொடர்பாக எழுதிய கட்டுரைகளுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சட்டப்படி தெரிவிக்கவேண்டிய தகவல்களை மறைத்தல், உயர் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் கூற மறுத்தல், போலி ஆதாரங்களை அளித்தல் என பல்வேறு பிரிவுகளில் குற்றம் சாட்டப்ப்படுள்ளது.. சோ, த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் மனோஜ்குமார் சொந்தாலியா ஆகியோர் குருமூர்த்தியின் கட்டுரைகளை பிரசுரித்ததற்காக காவல்துறையினரால் விசரிக்கப்பட்டிருக்கின்றனர். ஜெயலலிதா அரசு பத்திகைகள் மேல் நடத்திவரும் தாக்குதல்களின் இன்னொரு அத்தியாயமே இந்த வழக்கும் விசாரணைகளும். அரசின் அதிகாரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகள் பற்றிய கேள்விகளை இது மீண்டும் ஒரு முறை விவாதத்திற்குக் கொண்டுவருகிறது.

சோ போன்றவர்கள் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஒடுக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது அதில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான பிரிவுகளை எந்தத் தயக்கமும் இன்றி ஆதரித்து நின்றார்கள். அவை தங்களிடம் வராது என்ற ஒரே நம்பிக்கைதான் அதற்குக் காரணம். குருமூர்த்தியின் கருத்துக்கள் இந்துத்வா அமைப்புகள் இப்பிரச்சினையில் வெளியிட்டுவரும் அறிக்கைகளின் இன்னொரு பிரதி மட்டுமே. இந்த வழக்கிற்கு எதிரான கண்மூடித்தனமான எதிர்நிலையை அவரது கட்டுரைகள் வெளிப்படுத்தின. அவை ஒரு பத்திரிகையாளனின் ஆய்வு நிலை சார்ந்த சுயேச்சையான அபிப்ராயங்கள் அல்ல. அது குற்றம் சாட்டபட்ட தரப்பின் நிலைப்பாடு. ஆனால் ஒரு பிரச்சினையில் ஜெயலலிதாவிற்கு உவக்காத கருத்துக்களை சொன்னால் நக்கீரன் கோபால் சந்தித்த அதே விதியைத்தான் சோவும் குருமூர்த்தியும் சந்திக்கவேண்டியிருக்கும் என்பற்கு சாட்சியே இந்த வழக்கு.

பத்திரிகைளில் எழுதப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் தொடர்பாக போலீசிற்கு விளக்கமளிக்கவேண்டும் என்பதை ஒரு விதியாகக் கொண்டால் தமிழக காவல்துறை தனது முழுநேரப் பணியாக அதையே செய்யவேண்டியிருக்கும் .காவல் துறைக்கு பதிலளிக்க மறுப்பதும் அதனிடமிருந்து தகவல்களை மறைப்பதும் ஒரு பத்திரிகையாளனின் ஆதார நெறிகள். இவற்றிற்கு எதிரான சட்டப் பிரிவுகள் நீடித்திருப்பது மிகவும் ஆபத்தானது. அனுமானங்கள், சந்தேகங்கள், மறைமுகத் தகவல்கள் அடிப்படையில் ஒரு பத்திரிகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும் செய்திகளும் 'உண்மைகள்' அல்ல. ஒரு பிரச்சினையின் மையத்தை நெருங்குவதற்கான பல்வேறு நிலைகளிலான பாதைகள் அவை. அவை ஏற்கப்படவோ மறுக்கபடவோ செய்யலாம். ஆனால் அவற்றை அழிக்க முயற்சிப்பது இந்த அரசிற்கு கருத்துக்கள் தொடர்பாக இருக்கும் பதட்டத்தையே காட்டுகிறது.

இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினைகளில் எடுக்கப்படும் நிலைப்பாடுகள் பல சமயங்களில் பெரிதும் சுயசார்புகளை மையமாகக்கொண்டிருக்கின்றன. இவை ஒருபிரச்சினையின் ஆதாரமான கேள்விகளை பலவீனமடையச் செய்துவிடுகின்றன. பாதிக்கப்படும் நபர்களின் பின்புலங்கள் முரண்பாடுகளைக் காட்டிலும் முக்கியமானவை ஒரு சமூகத்தில் அரசு எந்திரத்தின் அதிகாரத்திற்கும் சிவில் உரிமைளுக்கும் இடையிலான பிரச்சினைகள். இந்த உரிமைகளை நாம் ஒருமுறை பாதுகாக்கத் தவறினால் அவற்றை மீண்டும் அடைவது கடினம். இங்கு பத்திரிகையாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பல சயங்களில் இரட்டை நிலைப்பாடுகளே இருக்கின்றன. ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகளில் குறைந்த பட்ச அளவில்கூட பொதுக் கருத்துக்கள் எட்டப்படுவதில்லை.

சுதந்திரம் பிளவுபடாதது.

மனுஷ்ய புத்திரன்
உயிர்மை மார்ச் 2005 தலையங்கம்
uyirmmai@gmail.com

12 comments:

Anonymous said...

நல்ல பார்வை.
தயவுசெய்து தொடர்ச்சியாக எழுதவும்.
நன்றி.

aathirai said...

"அனுமானங்கள், சந்தேகங்கள், மறைமுகத் தகவல்கள் அடிப்படையில் ஒரு பத்திரிகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும் செய்திகளும் 'உண்மைகள்' அல்ல. ஒரு பிரச்சினையின் மையத்தை நெருங்குவதற்கான பல்வேறு நிலைகளிலான பாதைகள் அவை. "

elloorum anumaanangalayum, sandhegangalayum, puralikalayum
paththirkai suthanthirathirku pin nindrukondu ezhudhinal enna aagum?
idhu yetrukolla mudiyadhadhu. idhu kurithu pinnar virivaaka padhivu seygiren.

Thangamani said...

//அனுமானங்கள், சந்தேகங்கள், மறைமுகத் தகவல்கள் அடிப்படையில் ஒரு பத்திரிகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும் செய்திகளும் 'உண்மைகள்' அல்ல. ஒரு பிரச்சினையின் மையத்தை நெருங்குவதற்கான பல்வேறு நிலைகளிலான பாதைகள் அவை. அவை ஏற்கப்படவோ மறுக்கபடவோ செய்யலாம். ஆனால் அவற்றை அழிக்க முயற்சிப்பது இந்த அரசிற்கு கருத்துக்கள் தொடர்பாக இருக்கும் பதட்டத்தையே காட்டுகிறது.//

கருத்துக்கள் தொடர்பான பதட்டம் என்பதைவிட உண்மையைத் தொடர்பான பயமெனலாம். அது எந்த அமைப்புக்கும் இருப்பதுதான்.

Thangamani said...

நல்ல பதிவு. நன்றி!

ravi srinivas said...

i think there are other issues invloved, e.g. how tolerant are we of criticisms and others views even if we disagree 200% with them.and there are other forces also which are threats to freedom of expression and the intolerance to criticism is rampant among writers,artists too.how does one deal with this.

manushya puthiran said...

ஆதிரை..

நீங்கள் கேட்பது சரி. ஆனால் வெகுசன ஊடகங்களின் நெறி பிறழ்ந்த செயல்பாடுகளை கருத்தியல் தளத்தில் விமர்சனத்திற்கு உள்ளாக்குவதும் வெளிப்பாட்டு உரிமைகள்மீது அரசின் கண்காணிப்பையும் ஒடுக்குமுறையையும் எதிர்த்து நிற்பதும் முற்றாக வேறு பிரச்சினைகள். ஜெயலலிதா அரசு நக்கீரன் கோபாலை தண்டித்தபோது அதி எதிர்த்து கடுமையாக குரல் எழுப்பிய பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன்.அது எந்தவிதத்திலும் நக்கீரனின் இதழியல் செயல்பாடுகளை ஆதரிப்பது ஆகாது. குருமூர்த்தி விஷயத்திலும் இதே நிலைபாடுதான். . வீரப்பனை சுட்டுக் கொன்ற விவகாரம் தொடர்பாக சில பத்திரிகைகளும் மனித உரிமை அமைப்புகளும் கேள்விகள் எழுப்பியபோது அத்தகைய கேள்விகளை எழுப்பியவர்கள் வீரப்பனின் ஆதரிப்பவர்களாகச் சித்தரிக்கப்பட்டார்கள். தமிழக காவல்துறை போலி 'என்கவுண்டர்'களில் ரவுடிகளைச் சுட்டுக் கொல்லும்போது அது குறித்து கேள்வி எழுப்பினால் அது அந்த ரவுடிகளின் செயல்பாடுகளை ஆதரித்ததாகுமா? மரண தண்டணைக்கு எதிராகப் நாம் பேசும்போது அது தண்டிக்கபடுபவர்களின் குற்றங்களை எந்தவிதத்திலும் ஏற்பது என்று அர்த்தமில்லை. அரசு எந்திரம் தனது ஜனநாயக முகமூடிகளை கழற்றி வைத்துவிட்டு வெகுவேகமாக குரூரமடைந்துவருகிறது. பொய்களை எழுதும் ஒரு பத்திகையைவிட பல ஆயிரம் மடங்கு ஆபத்தானது ஒரு ஒடுக்குமுறை எந்திரம். இதற்கு எதிராக பொதுக் கருத்துக்களைத் திரட்டுவது மிகவும் அவசியம்.


ரவி ஸ்ரீனிவாஸ்..
முற்றாக ஏற்க முடியாத கருத்துக்கள் தொடர்பாக நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடு குறித்த கேட்டிருந்தீர்கள். நம்முடைய காலத்தில் பிரச்சினைகளை அணுகவேண்டியதன் கோணம் சிக்கலானதாகவும் பன்முகத் தன்மைகொண்டதாகவும் இருந்திருக்கிறது. கருத்துக்களோடு போராடவேண்டியிருக்கும் அதேசமயம் அடிப்படி உரிமைகளை அழிக்க முயலும் அரச பயங்கரவாதத்தோடும் போராட வேண்டியிருக்கிறது. நீங்கள் முற்றாக ஏற்காத ஒருவரோடு ஒரு பொது உரிமையை பாதுகாப்பதற்காக போராடும்போது அவரோடு எந்தப் புள்ளியில் இணைத்துக் கொள்கிறீர்கள் எந்தப் புள்ளியில் விலக்கிக் கொள்கிறீர்கள் என்பதை தெளிவாக வரையறுப்பது சற்று கடினமானதே. ஆனால் அதைச் செய்துதான் ஆகவேண்டும்.
எழுத்தாளர்களிடமும் கலைஞர்களிடமும் வெளிப்படும் சகிப்புத் தன்மை இன்மை மற்றும் வன்முறையை ஒருவர் எதிர்கொள்வது குறித்துக் கேட்டிருந்தீர்கள். அதிகாரம், ஒடுக்குமுறை தொடர்பாக தொடர்ந்து பேசிவந்திருக்கும் பல இடது சாரி இயக்கங்கள் இயக்கத்திற்குள் கருத்துமுரண்பாடுகளை எதிர்கொள்ளும்விதத்தை மிக அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவை முரண்பாடுகளை நசுக்கி அழிக்கும்விதம் மிகக் கடுமையானது. அதே போல தமிழ்ச் சிறுபத்திரிகளில் எழுத்தாளர்கள் தங்களது எதிரிகளை நிலைகுலையச் செய்வதற்காக மேற்கொள்ளும் உளவியல் ரீதியான தாக்குதல்கள்பற்றி மிகப் பெரிய ஆய்வையே மேற்கொள்ளலாம். தமது எதிரிகளின் உடற்குறைபாடுகள், மனப் பிறழ்வுகள், குடும்ப விவகாரஙகள், அந்தரங்க விவகாரங்கள் என எல்லாமே இங்கு இலக்கியமாகவும் இலக்கிய விமர்சனமாகவும் மாறிவிட்டது. அவ்வப்போது உடல்ரீதியான தாக்குதல்களும் நிகழ்ந்து வருகின்றன.
ஒரு சிறிய உதாரணத்தை மட்டும் இங்கு சொல்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறு பத்திரிகை பெண் கவிஞர்களுக்கு எதிரான மிகக் கேவலமான குறிப்புகளை பிரசுரித்தது. அதன் ஆசிரியர் இதழை எனக்கு அனுப்பியிருந்தார். நான் அந்தப் பத்திரிகையை கிழித்து அவருக்கே அனுப்பினேன். சில நாட்களுக்கு பிறகு ஒரு செய்தியை கேள்விப்பட்டேன். பெண் கவிஞர்கள் சிலர் சேர்ந்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரைக் கேட்டுக்கொண்டதன் பெயரில் அந்த அந்த அதிகாரி அந்த பத்திரிகையாசிரியரைக் கூப்பிட்டு கடுமையாக மிரட்டியதாக. செய்தியை என்னால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அந்தப் பத்திரிகையாசிரியருக்காக நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒருவருடைய செயல்பாடுகளை எதிர்ப்பது வேறு. ஒருவரது இருப்பையே அழிப்பது வேறு. இந்த வித்தியாசத்தில்தான் செயல்படவேண்டியிருக்கிறது
நம்முடைய அரசியல்போராளிகளுக்கும் சிந்தனாவாதிகளுக்கும் பல சமயங்களில் ஒரு பாசிஸ்டிற்கு நிகரான வன்முறை இருக்கிறது. அதைக் கொண்டு செலுத்துவதற்கான போதுமான அதிகாரம்தான் இல்லை.
இந்தப் பிரச்சினை குறித்து நாம் ஒரு தொடச்சியான விவாதத்தை நடத்துவது நல்லது.

மனுஷ்யபுத்திரன்

newsintamil said...

//அனுமானங்கள், சந்தேகங்கள், மறைமுகத் தகவல்கள் அடிப்படையில் ஒரு பத்திரிகையில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களும் செய்திகளும் 'உண்மைகள்' அல்ல. ஒரு பிரச்சினையின் மையத்தை நெருங்குவதற்கான பல்வேறு நிலைகளிலான பாதைகள் அவை.//

குருமூர்த்தியின் கருத்துக்கள் மேற்கண்ட வகையில் சேராது என்பதை

//குருமூர்த்தியின் கருத்துக்கள் இந்துத்வா அமைப்புகள் இப்பிரச்சினையில் வெளியிட்டுவரும் அறிக்கைகளின் இன்னொரு பிரதி மட்டுமே. இந்த வழக்கிற்கு எதிரான கண்மூடித்தனமான எதிர்நிலையை அவரது கட்டுரைகள் வெளிப்படுத்தின. அவை ஒரு பத்திரிகையாளனின் ஆய்வு நிலை சார்ந்த சுயேச்சையான அபிப்ராயங்கள் அல்ல//

என்ற வரிகளில் நீங்களே வெளிப்படுத்தியுள்ளதால்

பத்திரிகையாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்தை எந்த வலிமையோடு எதிர்க்க வேண்டுமோ அதே தீவிரத்துடன் இது போன்ற திரித்தல்களையும் எதிர்க்க வேண்டும். அவை பிரச்சாரங்களாக இருக்கும் நிலையில் அவற்றை வெளியிடும் பத்திரிகைகளின் மனோநிலையையும் கருத்தில் கொள்வது நல்லது.

//சோ போன்றவர்கள் தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஒடுக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டபோது அதில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான பிரிவுகளை எந்தத் தயக்கமும் இன்றி ஆதரித்து நின்றார்கள்//

இவர்களைப் போன்றவர்கள் பத்திரிகாதர்மங்களை விட அரசியல் சித்துவிளையாட்டுகளில் அதிக ஈடுபாடுள்ளவர்கள். இவர்கள் தண்டிக்கப் படுவதால் பத்திரிகை சுதந்திரம் முன்பைவிட எந்தவிதத்திலும் பாதிக்கப் படப்போவதுமில்லை. பத்திரிகையாளர்கள் என்று சொல்லப்படுகிற பெரும்பத்திரிகை முதலாளிகள் பத்திரிகை சுதந்திரத்துக்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. இப்போதும் அவர்கள் தங்கள் பாக்கெட்டுகளில் அரசாங்கம் இட்டு நிரப்பும் விளம்பரபிச்சைக்காக எதையும் சகிக்க முடிபவர்கள். ஆனால் தங்களின் மதமோ சாதியோ பிரச்சினைக்குள்ளாகும்போது மட்டும் அவர்களின் சுதந்திரக்குரல் மெல்ல குரைக்கும். புதிய மற்றும் சிறிய பத்திரிகையாளர்கள் மட்டும் தீவிரமுனைப்புடன் தலையங்கங்கள் எழுதி தங்கள் விமர்சனங்களை வெளிப்படுத்துவார்கள். இவர்களின் இருப்பு பத்திரிகையாளர்களின் இருப்பாக இனம் காணப்படுவது அபாயகரமானது.

manushya puthiran said...

அனுராக்...
உங்கள் கருத்துக்களை நானும் ஏற்கிறேன். ஆனால் பத்திரிகை சுதந்திரம் அல்லது பத்திரிகையாளர் யார் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அணுகுவதைக் காட்டிலும் கருத்து சுதந்திரம் அதன் மீதான அரசின் ஒடுக்குமுறை என்ற அடிப்படையில் பார்ப்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். வை.கோ ஒரு பொதுக்கூட்டத்தில் புலிகளுக்கு ஆதராவாக பேசிய கருத்துக்களுக்காக ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருக்கவேண்டி வந்தது.இந்தப் பிரச்சினையில் வைகோவை ஆதரிப்பதற்கும் புலிகள் சம்மந்தமான நிலைப்பாடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுதான்நினைக்கிறேன். பிற்போக்குக் கருத்துக்களோடு ஜனநாயக சக்திகள் நடத்தும் போராட்டம் வேறொரு பிரச்சினை. இது சோவிற்காகவோ குருமூர்த்திக்காகவோ கொடுக்கும் குரல் அல்ல. சில சந்தர்பங்களில் என் எதிரியின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் என் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.

மனுஷ்ய புத்திரன்

manushya puthiran said...
This comment has been removed by a blog administrator.
manushya puthiran said...
This comment has been removed by a blog administrator.
aathirai said...

karuththu kooruvatharkum, oru kuttra vazhakkil thavarana thagavalkal alithu kuzhappuvatharkum niraya viththiyasam ulladhu.
gurumurthy edho ulavu velai seidhu kandupidithadhu pola ezhudiullar.

avarutaya aadharathai policeku veliyidavillai endralum, podhu makkalukku veliyida vendum. ivar ezhudhiyathu unmayaa, kuppayaa endru theriyamal eppadi aadharippadhu.?

pathirikai sudhandhiram irukka vendiya nerathil pathirikaikalukku adhai kappatri kollum poruppum vendum.

indha vazhakkil ivar ezhudhiyadhu thavaru endru courtil nirubikapatal ivar mel pathiriakai nadavadikai edukuma?poruthirundhu parpom.

Vaa.Manikandan said...

கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு பிறந்தநாள்.

இன்று பிறந்தநாள் காணும் கவிஞர்,இன்னும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.

தங்களின் ஊற்றின் மீது படிந்து கிடக்கும் சாம்பலை ஊதித்தள்ளி இன்னும் பல படைப்புகளை வழங்குவீர்கள் என்னும் நம்பிக்கையுடனும்,வாழ்த்துக்களுடனும்.

வா.மணிகண்டன்