Monday, February 14, 2005

காதல் கவிதைகள்:7 மாலதி மைத்ரி

காதல் கடிதம்

ஆண்டவன் துணை
அன்புள்ள பானுவுக்கு மாமா எழுதிக் கொள்வது
பணம் அனுப்பியது கிடைத்ததா
ஊதாரித்தனமாக செலவு செய்யாதே
கணக்கு எழுதிவை
தின்னு அழிக்காதே
வெள்ளை பூண்டு வெங்காயம்
மசாலா கறிசேத்துக்காதே
எல்லாம் உன் நன்மைக்குத்தான்
சினிமா கடைத் தெருன்னு சுத்தாதே
கீழ்வீட்டு அக்கா துணையுடன் வெளியே போவனும்
படியை விட்டு இறங்கும்போது
முந்தானையை இழுத்து போத்திக்கனும்
உடம்பைக் கொற நீ கேட்ட வளையலை
அடுத்த மாதம் கொடுத்து அனுப்புகிறேன்
என் மகள் மகாலஷ்மி அமெரிக்கா போவதற்கு
ஏற்பாடும் பணமும் தயார் செஞ்சிக்கிட்டு
கூடவே கொஞ்சம்கூலி விசா பொறுக்கினு வரேன்
அவள் ஊருக்குப் போயிட்டால்
இங்கேயே செட்டில் ஆகிடலாம்
எனக்கும் 55 ஆவப்போகிறது
இது வரைக்கும் உன் அக்காவுக்கு
துரோகம் செஞ்சது கெடையாது
ஒரு கொறையும் உனக்கு வைக்க மாட்டேன்
வீட்டுவேலைக்கு விசாகேட்டு
என் வாசல் மெதிச்ச ராத்திரி
நான் தூங்கவேயில்லை
யோசிச்சிதான் முடிவு பண்ணினேன்
ஐயோ பச்ச குழந்தை
அங்கபோய் எத்தனை கைமாறுதோ
நம்ம கையோடயே இருந்துட்டு
போகட்டுமேன்னு பிச்சைபோட்டுருக்கேன்
வரமா நெனச்சு காப்பாத்திக்கோ
எல்லாம் உன் நன்மைக்குத்தான் சொல்றேன்
ஒரு ஆறுமாசம் பொறுத்துக்கோ
பல்லாயிரம் மைலுக்கு அப்பால இருக்கன்னு
ஏதாவது துரோகம் பண்ண நெனச்ச
தேவடியா நாயே
ஆள்வச்சி தீத்துக் கட்டிடுவேன் ஜாக்கிரதை
பதில் எழுதவும்
அன்புடன்
மாமா

3 comments:

Narain Rajagopalan said...
This comment has been removed by a blog administrator.
Narain Rajagopalan said...

போன் பதிவில் சில எழுத்துபிழைகள் தென்பட்டதால், அழிக்கவேண்டியதாய் போயிற்று.

நான் நினைத்த கவிதையை நீங்கள் போட்டுவிட்டதால் [;-)], நானும் ஒருமுறை ஒரு கவிதையை அதே தொகுப்பிலிருந்து பதிகிறேன்.

பலவிதமான ஆண்டுகளுக்குப் பிறகு
உன் நினைவுகள் கரைந்து கொண்டிருக்கும்
மாலைப்பொழுதில் பிரதான சாலைத் திருப்பத்தின்
எதிர் கொள்ளல்

நம் பார்வைகள் தடுமாறி திசைகுலைய
நிலை மறந்து ஓடி
கடக்கும் பாதையில் உனது உடம்பின் வாடை
பின்தொடர நூலகம் அடைகிறேன்
புத்தக அடுக்கில் விரல்கள் நடுங்கி
பத்றும் க்ண்களால்
சரிந்து சிதறும் நூல்கள்
ஒடிவந்து நீ பொறுக்கி அடுக்க
கையில் கிடைத்ததை அள்ளி எடுத்து
ஒரமாக இருக்கும் இருக்கையில்
அமர்கிறேன் படிக்கும் பாவனையோடு
உன்னைத் தவிர்க்கும் நோக்கில்
சிறிது காலம் தாழ்த்தி நீயும் ஒரு
புத்தகத்துடன் வந்து என் எதிரே அமர
யார் முதலில் பேசத்தொடங்குவது
எத்தனிப்பில் கழியும் காலம்
ஆனாலும் நீ பேசினாலும் உன்னிடம்
நான் பேசிவிடமாட்டேன்

மூடிய நூலகத்தின் வாயிலில் நிற்கும்
விழிகளை முதுகில் சுமந்தபடி
என் இருப்பிடம் மீள்கிறேன்
இருள் அப்பி மூடிய அறைக்குள்
கதறும் மெளனம்
நீயும் இப்பொழுது.....

நூலகம் எரிந்து கொண்டிருக்கிறது
கோடானுகோடி அலறல்கள்
அடைபட்ட உள்ளிருந்து
- மாலதி மைத்ரி (சங்கராபரணி)

கறுப்பி said...

மிக அருமையாக நகர்ந்து செல்கின்றது
படித்து முடித்த போது கோபத்திலும் பார்க்க நகைச்சுவையாகவே எனக்கு இருந்தது இந்த மாமாக்களை நினைக்க