Monday, February 14, 2005

காதல் கவிதைகள்:8 மனுஷ்ய புத்திரன்

காதலர் தினத்தை ஒட்டி நான் திட்டமிட்டபடி விரிவான அளவில் கவிதைகளை உள்ளிடமுடியாதபடி பல்வேறு வேலைகள் வந்து குறுக்கிட்டுவிட்டன. ஆனாலும் சில கவிதைகளையேனும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி. பி.கே. சிவக்குமார் போன்ற நண்பர்கள் சில கவிதைகள் தொடர்பாக எழுதியுள்ள ஆழமான குறிப்புகள் மிகவும் மகிழ்ச்சி தருகின்றன. கவிதைகளையோ பிற இலக்கியப் பிரதிகளையோ முன்னிட்டு இத்தகைய பேச்சுக்களை உயிர்மை வலைப்பதிவில் உருவாக்க பேராவல் எழுகிறது. திரு நாராயணன் இப்பதிவை தொடர்ந்து தன்னுடைய வலைப்பதிவில் மேலும் சில கவிதைகளை இட்டிருந்தார்.

மொத்தத்தில் இது மிகவும் மகிழ்ச்சி தரும் அனுபவம்.
எனது இரு கவிதைகளைச் சொல்லி இந்தக் காதலர் தினப் பேச்சுக்களை நிறைவு செய்யலாம். காதல்களைத் தொடர்ந்தபடி...


இழந்த காதல்

நின்று சலித்த என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்


அந்த இடம்

போகும்போது
உன்னுடன் கொண்டு
வந்த எல்லாவற்றையும்
எடுத்துக் கொள்கிறாய்

ஆனால்
அந்த இடம் மட்டும்
அப்படியே எஞ்சிவிடுகிறது

நீயும் கொண்டு வராத
ஏற்கனவே இருந்துமிராத
அந்த இடம்

2 comments:

Thangamani said...

அந்த இடம்- நன்றாக இருக்கிறது. அந்தக் காலியிடங்கள் காலகாலத்துக்கும் அப்படியே இருக்கின்றன. அவை நிரப்புதலை ஏங்கித்தவிப்பதில்லை; ஆனால் ஒரு கடற்சங்கினைப்போல எப்போதும் அவை தரும் ஆழ்ந்த பேரோசையை கவனித்து செவிமடுக்கும் தனிமையில் உணரலாம்!

நன்றி!

Narain Rajagopalan said...

நன்றி மனுஷ்யபுத்திரன். காதலர் தினத்தை கொண்டாடுவதை விட, நல்ல தமிழ் கவிதைகளை பதிய வேண்டும், படிக்க வேண்டும் என்பதுதான் மிகமுக்கியமாகப் பட்டது.

நீங்கள் இட்டிருந்த கவிதைகள் காலாகாலத்துக்கும், காதலையும், அவஸ்த்தையும் சொல்லக்கூடியவை. அடுதது என்ன 'தினம்' வருகிறது என்கிற ஆவலுடன்