Sunday, February 13, 2005

காதல் கவிதைகள்:6 ஞானக்கூத்தன்

பவழமல்லி

கதை கேட்கப் போய் விடுவாள் அம்மா. மாடிக்
கொட்டகைக்குப் போய்விடுவார் அப்பா. சன்னத்
தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத் தம்பி
தூங்கிவிடும். சிறுபொழுது தாத்தாவுக்கு
விசிறியதும் அவரோடு வீடு தூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந் தோய்ந்த இரவில் மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழ மல்லி

கதை முடிந்து தாய் திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழு நிலவில் அந்த நேரத்
தனிமையில் என் நினைப்புத் தோன்றுமோடி?

5 comments:

Vaa.Manikandan said...

மனுஷ்ய புத்திரனின் வலைப்பதிவில் இடம்பெறும் சிறந்த கவிதைகளுள் இடம்பெறும் தகுதி என் கவிதைக்கு இருப்பதாக நான் கருதவில்லை.வளர்ந்துவரும் கவிஞனான எனக்கு இது ஒரு நல்ல பட்டறையாக அமையும் என்பதனால் எனக்கு பிடித்த எனது காதல் கவிதைகளை அனுப்பியுள்ளேன்.

விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ளேன்.

குறிப்பாக பெயரிலி போன்றோரின் காட்டமான விமர்சனத்தை.

1.
உதிர்ந்துவிடும் கண்ணீரை
உள் இழுத்துவிடுகிறாய்.

ஒருவரும் உணர்ந்திடா
சிறு பொழுதில்.

ஒரு இதயம்
கசங்கிக்கொண்டிருக்கிறது
மரத்தில் சொட்டும் நீராக.

மெதுவாக.

2.
மரத்தில் இருந்து உதிரும்
பழுத்தயிலையொன்று
நினைவில் வருகிறது.

'ஒண்ணுமில்லையே'
என்ற பிரம்மாண்ட
சொல்லில்
உண்ர்த்தப்படும்
உன் எளிய
ப்ரியத்தில்.

ROSAVASANTH said...

see the comments in your earlier(same) post.

Vaa.Manikandan said...

இனிய ரோசாவசந்த்,
நிச்சயமாக எந்த தவறான எண்ணத்துடனும் அந்த வாசகத்தை குறிப்பிடவில்லை என்பதனை
தெளிவுபடுத்தவே விரும்புகிறேன்.பெயரிலி இன் விமர்சனம் வீரியம் மிக்கதாக இருந்தது.
என் ஆதர்ச கவிஞரை நேரிடையாக தாக்கியதால் அவ்வாறு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இது நிச்சயம் அவரின் மனதை புண்படுத்தியிருக்காது என்றும் நம்புகிறேன்.
மேலும் படைப்பாளி யை புகழ்ச்சியை விட இகழ்ச்சி தரப்படுத்தும் என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான்.
பெயரிலி இன் விமர்சனம் நடுநிலையோடு என் படைப்பினை உரமேற்றும் என்ற எண்ணத்தில் அத்தகைய வாசகத்தை சேர்த்தேன்.

மற்றபடி எனக்கு எந்த வித வெறுப்பும் பெயரிலி மீது இல்லை.மதிப்பினை தவிர.

ROSAVASANTH said...

நன்றி, தவறாய் புரிந்துகொண்டதற்கு மன்னிக்கவும்!

PKS said...

ஞானக்கூத்தனின் இந்தக் கவிதையும் எனக்குப் பிடித்தமானது. இணையத்திலும் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்தமான கவிஞர்களில் முக்கியமானவர் ஞானக்கூத்தன்.

சாதாரணமான வரிகளுடனும் விவரணைகளுடனும் போய்க் கொண்டேயிருந்து, திடீரென்று ஒரு மந்திரவாதியின் அற்புதம்போல, கவிதையை இறுதியிலோ சிலவரிகளிலோ சமைத்துக் காட்டுவார் ஞானக்கூத்தன். அப்படிப்பட்ட கவிதைகளை அவர் நிறைய எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது. யாப்புக்குட்பட்டு எழுதுவதால் அவரின் பல சிறந்த கவிதைகளின் பல வரிகள் சாதாரணமாக இருப்பதுபோல் தோன்றி, இறுதியிலோ நிதானமாகவோதான் கவிதையான வரிகள் வெளிவரும். (இதே கருத்தையோ இது போன்ற கருத்தையோ ஞானக்கூத்தன் குறித்து சுஜாதாவும் சொல்லியிருக்கிறார் என்று ஞாபகம்.)

பவழமல்லி என்ற இந்தக் கவிதையை எடுத்துக் கொண்டால் - கடைசிக்கு முந்தைய பத்தியில் ஆரம்பிக்கிற கவிதை, தெருப்படியில் முழுநிலவில் அந்த நேரத் / தனிமையில் என் நினைப்புத் தோன்றுமோடி? என்கிற வரிகளில் முழுமையும் நிறைவும் பெறுகிறது. சாதாரணமாய்த் தோன்றுவது என்றாலும், ஒரு நாஸ்டால்ஜியா மாதிரி, படிப்பவர் மனத்தில் உடனடியான ஏக்கத்தையும், அந்தரங்க ஒட்டுதலையும் தோற்றுவிப்பதால் இக்கவிதை மனதுடன் ஒட்டிப் போகிறது.

மனுஷ்ய புத்திரன் இடும் கவிதைகள் பற்றிய என் ரசனையாக கருத்துப் பகுதியை ஆக்ரமித்துவிடக் கூடாது என்ற ஜாக்கிரதையுணர்வுடன், இன்னும் சில கவிதைகள் பற்றிய என் கருத்தைப் பதியவில்லை. ஆனாலும், ஞானக்கூத்தன் என்றதும் சும்மா இருக்க முடியவில்லை.

அன்புடன், பி.கே. சிவகுமார்