Saturday, February 12, 2005

சில விளக்கங்கள்

உயிர்மையின் இந்த வலைப்பதிவை தொடங்கியபோது உனக்கு ஏன் இந்த வேலை என்று நண்பர்கள் கேட்டார்கள். விவாதங்களில் பங்கேற்கும் சில அன்பர்கள் பிறர்மீது காட்டும் துவேஷமும் தனிப்பட்ட தாக்குதல்களும் நுண்ணர்வுகொண்ட யாரையும் சுலபமாக அச்சுறுத்திவிடக்கூடியவை. ஆனால் இதையெல்லாம் வேறொரு ரூபத்தில் தமிழ்ச் சிறுபத்திரிகை உலகில் வேறொருவடிவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சந்தித்திருக்கிறேன். தமிழ் வலைப்பதிவுகளின் முகம் இந்த வன்முறை அல்ல. பல வலைப்பதிவுகள் மிகவும் முக்கியமான பதிவுகளைக் கொண்டிருக்கிறது. பொறுப்புணர்ச்சியுடனும் ஆழமாகவும் எழுதப்பட்ட பலபக்கங்கள் காணக் கிடைக்கின்றன. வருங்காலத்தில் மாறுபட்ட சிந்தனைகளுக்கான மிக முக்கியமான வெளியாக இவ்வலைப்பதிவுகள் இருக்கபோகின்றன. இது தரும் சாத்தியங்கள் மிகவும் ஊக்கமூட்டக் கூடியவை.

இந்த ஊடகத்தை உபயோகிக்கும் வாய்ப்பு விரிவடையும்போது புதிய பங்கேற்பாளர்கள் இதன் முகத்தையும் குரலையும் மாற்றி அமைப்பார்கள். இப்போது இந்த ஊடகத்தில் மேலோங்கும் சில குறிப்பிட்ட வகைமாதிரியான மனோபாவங்கள் கலைந்துபோகும்.
தெருச் சண்டையில் எதிராளியை நிலை குலையச் செய்ய தங்கள் துணியை தூக்கிக் காட்டுகிறவர்களுக்கு நிகராக கீழ்த்தரமான தாக்குதல்களைத் தொடுப்பவர்கள் எல்லா ஊடகங்களிலும் இருப்பதுபோல இணையத்திலும் இருக்கிறார்கள். இணையம் அளிக்கும் உடனைடி வெளிப்பாட்டிற்கான சுதந்திரத்தையும் முகமற்ற தன்மையையும் வன்முறைக்கான கூடுதலான வாய்ப்பாக பாவிப்பவர்கள் தங்களுடைய நியாங்களைக்கூட முன்வைக்க முடியாத பரிதாப நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். ஒருவர் எதிராளியை அவமானப்படுத்துவதால் அவரைவிட மேலான நியாயத்தைகொண்டவராகிவிட மாட்டார். இழிசொற்களை உபயோகிப்பவர்கள் அவை போய்ச் சேருமிடத்தை அறிந்தால் இன்னொருமுறை அவற்றை உபயோகிக்க துணிய மாட்டார்கள்.

உயிர்மை பதிவில் எழுதபட்ட என்னைப்பற்றிய சில கற்பனையான வாக்கியங்களைப் தொடர்பாக சில குறிப்புகளைமட்டும் இங்கே தர விரும்புகிறேன். இது அக்கற்பனைகளை இங்கே உள்ளிட்ட நபர்களுக்கு அளிக்கும் விளக்கம் அல்ல. இணையத்தை இன்னும் பொறுப்புள்ள சாதகமான ஊடகமாக கருதும் நண்பர்களுக்காக.

1. எனது இயற்பெயர் ஜனாப் சாகுல் ஹமீட் அல்ல. எஸ். அப்துல் ஹமீது. ஜனாப்புகள் எல்லோரும் ஒன்றுதான் என நினைத்தால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. என்மீதும் இளைய அப்துல்லாஹ்மீதும் காட்டும் வெறுப்பிற்கு என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வெறுப்பிற்கு இந்தியாவில் ஒரு காரணம் இருக்கிறது. இலங்கையில் வேறொரு காரணம். ஆனால் அது என்னை உணர்வுபூர்வமாகத் தூண்டாது.. ஏனெனில் நான் மத நம்பிக்கைககளையோ சிறுபான்மை அடையாளத்தினையோ பின்பற்றுகிறவன் அல்ல.

2. 1983ல் என்னுடைய பதினாறு வயதில் எனது முதல் கவிதைத் தொகுப்பை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டது. 2005ல் என்னுடைய ஒரு கருத்திற்காக மணிமேகலைப் பிரசுர புத்தி என்று ஒருவர் திட்டுகிறார். கிறிஸ்துவுக்கு பிறகு புனிதர்களாகப் பிறந்து புனிதர்களான வாழ முடிகிறவர்களை வணங்குகிறேன். ஆனால் நான் பல்வேறு முரண்பட்ட தாக்கங்கள் பாதிப்புகள் வழியாக உருவாகிவந்தவன். அவை வெளிப்படையானவை. என்னாலேயே முன்வைக்கப்படுபவை. மேலும் நான் தமிழில் எழுதும் ஒரு எழுத்தாளன் என்பதால் என்னுடைய ஒவ்வொரு அபிப்ராயத்தையும் ஒட்டி என்னுடைய வம்ச சரித்திரத்தை ஆராயும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்லக்கடமைப்பட்டவன். ஆனால் என்னைக் கேள்வி கேட்பவர் ஒண்ணாங்கிளாஸ் படிக்கும்போது பக்கத்திலிருந்த யையனிடம் பல்பம் திருடினாரா என்று நான் அவரை ஒருபோதும் கேட்க மாட்டேன்.

3. என் சக எழுத்தாளர்களோடு எனது உறவுகளை கொடிபிடிக்கும் உறவுகளாகவோ வியபார உறவுகளாகவோ புரிந்துகொள்வது என்னுடைய பிரச்சினை அல்ல. ஒரு எழுத்தாளனாக என்னுடைய அபிப்பராயங்களும் ஒரு பத்திரிகையாசிரியனாக பதிப்பாளனாக எனது தொழிழில்சார்ந்த நியமங்களும் ஒரே நேர்க்கோட்டில் இயங்குவது சாத்தியமல்ல.

4. நாச்சார் மட விவகாரத்திற்காக காலாச்சுவடு கையெழுத்து வேட்டை நடத்தியதற்கு பல மாதங்களுக்கு முன்பே நான் காலச்சுவடிலிருந்து விலகிவிட்டேன். ஜெயமோகன் தனது கவனத்தை மீறி வெளிவந்தத கதை என்று சொல்லி, ஆசிரியராக தார்மீகப் பொறுப்பேற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்டபிறகும் தொடர்ந்து நடத்தபட்ட தாக்குதல்கள் பிரச்சினை சார்ந்து அல்ல. ஜெயமோகனை இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஒழித்துக்கட்டவேண்டும் என்ற ஆவேசமே அதற்குக் காரணம். அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அக்கதை பற்றிய என்னுடை எதிர்ப்புணர்வை நான் குமுதம் இதழில் பதிவு செய்தேன்.

5. வெள்ளாவி விடுதலைபுலிகளால் தடைசெய்யபட்டதென்ற தகவல் அதன் ஆசிரியரால் உயிர்மைக்கு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அதற்கு யதீந்திரா என்பவர் எழுதிய மறுப்பும் நடந்தது என்ன என்பதுகுறித்து இளைய அப்துல்லாஹ் எழுதிய கடிதமும் உயிர்மையில் வெளியிடப்பட்டன. ஒரு பத்திரிகை செய்யக்கூடியது இவ்வளவே. உயிர்மைக்கு நபர்களுக்கோ குழுக்களுக்கோ எதிரான எந்த உள்நோக்கங்களும் கிடையாது. மாற்றுக் கருத்துக்களை அது தயக்கமின்றி பிரசுரித்து வந்திருக்கிறது.

6. இஸ்லாமிய அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் இஸ்லாமியர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகயுமே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செலுத்தக்கூடியது என்பதை நான் பல அரங்குகளில் முன்வைத்திருக்கிரேன். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பத்தற்கோ, ஹிந்த்துத்வாவை எதிர்ப்பத்தற்கோ இஸ்லாமிய பயங்கரவாத்தை மறைமுகமாகவோ, ரகசியமாகவோ ஆதரிப்பது மிகவும் ஆபத்தானது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறேன். ஷாபானு ஜீவானாம்ச வழக்கில் நான் ஷாபானுவை ஆதரித்து எழுதிய கட்டுரைக்காக அடிப்படை வாதிகளால் மிரட்டப்பட்டேன். கவிஞர் ரசூலின் கவிதைத் தொகுப்பை அடிப்படை வாதிகள் எதிர்த்து இயக்கம் நடத்தியபோது அவரை ஆதரித்து நான் எழுதிய கட்டுரை என்னுடை 'காத்திருந்த வேளையில்' தொகுப்பில் இருக்கிறது.

மனோரீதியாகவும் சிந்தனாபூர்வமாகவும் பிறப்பு சார்ந்த அடையாளங்களை ஒருவர் எவ்வளவோ போராடிக் கடந்துவந்தபோதும் இதுபோன்ற விவாதங்களில் ஒருவர் எடுத்த எடுப்பில் இந்த அடையாளங்கலிலிருந்தே பேசத் தொடங்கும்போது உரையாடலின் சாத்தியங்கள் பற்றிய கேள்விகள் எழுகின்றன.

இந்த நீண்ட சுயவிளக்கங்கள் எனக்கு மிகுந்த சோர்வூட்டுகின்றன. இவற்றை படிக்க நேர்ந்த்தற்காக உங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். அடுத்த பதிவுகளில் வேறு விஷயங்கள்பற்றிப் பேசலாம்.

மனுஷ்யபுத்திரன்
manushyaputhiran@yahoo.com

8 comments:

ROSAVASANTH said...

பெயரிலியின் தாக்குதலுக்கு நிச்சயமாய் நீங்கள் விளக்கமளிப்பதாய் உங்கள் தரப்பை சொல்வது நியாயம்தான். ஆனால் சில விஷயங்கள் எரிச்சலை தருகின்றது. ஜெயமோகன் கைகொள்ளும் ஒரு வழிமுறை போல தென்படுகிறது.

உதாரணமாய் //பொறுப்புணர்ச்சியுடனும் ஆழமாகவும் எழுதப்பட்ட பலபக்கங்கள் காணக் கிடைக்கின்றன. //

என்பதும்

//தெருச் சண்டையில் எதிராளியை நிலை குலையச் செய்ய தங்கள் துணியை தூக்கிக் காட்டுகிறவர்களுக்கு நிகராக கீழ்த்தரமான தாக்குதல்களைத் தொடுப்பவர்கள் எல்லா ஊடகங்களிலும் இருப்பதுபோல இணையத்திலும் இருக்கிறார்கள். இணையம் அளிக்கும் உடனைடி வெளிப்பாட்டிற்கான சுதந்திரத்தையும் முகமற்ற தன்மையையும் வன்முறைக்கான கூடுதலான வாய்ப்பாக பாவிப்பவர்கள் தங்களுடைய நியாங்களைக்கூட முன்வைக்க முடியாத பரிதாப நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். ஒருவர் எதிராளியை அவமானப்படுத்துவதால் அவரைவிட மேலான நியாயத்தைகொண்டவராகிவிட மாட்டார். இழிசொற்களை உபயோகிப்பவர்கள் அவை போய்ச் சேருமிடத்தை அறிந்தால் இன்னொருமுறை அவற்றை உபயோகிக்க துணிய மாட்டார்கள்.//

இதையெல்லாம் வேறு ஒரு இடத்தில் பொத்தாம் பொதுவாய் சொன்னால் பிரச்சனையில்லை. இப்படி ஒரு விளக்கத்தின்போது பொத்தாம் பொதுவாக சொல்வது எரிச்சல் தருகிறது.

எனக்கு பெயரிலி இட்ட தாக்குதல் தேவையற்றது, மிகையானது என்றே தோன்றுகிறது. நான் ஒரு ஈழதமிழனாய் இருந்து, அப்படி தோன்றியிருந்தால் நிச்சயம் அதை அவருக்கு சொல்லகூடும். இந்திய தமிழனாய் அதை மெல்லியதாய் இங்கே மட்டுமே சொல்லமுடியும்.

மேலே உள்ள இரண்டு மேற்கோள்களில் எதிர்மையாக சொல்லபடும் இரு தரப்புகளாக வலைபதிவுகளை வைத்து குறிப்பிட்ட வாசிப்புக்கு ஒருவர் போக கூடும்.

அது போலியான பொறுப்புணர்சியும், நாகாரீகத்தையும் போர்த்திகொண்டு, உள்ளே கயமைத்தனத்தை செயல்படுத்தி கொண்டு அது வெளிபடும்போதும் சுரணையற்று இருப்பவர்களையும, வெளிப்படையாய் (சுயநலத்தை முன்னிடாத, அபிப்ராயங்களை முன்னிட்ட காரணங்களுக்காய்) சண்டையில் இறங்குபவர்களையும் குறிப்பிடுவதாய் வாசிக்க முடியும். என்னால் பெயரிலியை இரண்டாம் வகையிலேயே சேர்க்கமுடியும் -பல சந்தர்பங்களில் அவருடன் ஒத்து போகவில்லையெனினும்.

மற்றபடி இந்த விஷயத்தில் நான் முன்னமும் கருத்து சொல்லவில்லை. மேற்கொண்டும் கருத்து சொல்வதை தவிர்கிறேன்.

நீங்கள் எழுத தொடங்கிய பதிவிலேயே இது நடந்தது துரதிர்ஷ்டமானது. பெயரிலி தன் கருத்தையும், கோபத்தையும் சற்று தள்ளி வெளிபடுத்தியிருக்கலாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. இதை மனதில் வைக்காமல், உங்களுக்கிருக்கும் முதிர்சியுடன் தொடர்வீர்கள் என்று நினைக்கிறேன்.

வாசன் said...

மனுஷ்யபுத்திரன்:

நானொரு சராசரி தமிழ் வாசகன்.பல பதிவர்களை போன்று அயல்நாட்டில் வாழ்கிறவன்.

உங்களைப் பற்றி ஓரளவே தெரியும்.நீங்கள் வலைப்பதிய ஆரம்பித்துள்ளது குறித்து மகிழ்ச்சி.
மேலும் தொடர்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.

newsintamil said...

அன்புள்ள மனுஷ்யபுத்ரன்

உங்கள் பதிவுகளின் ஆரம்பத்திலேயே இந்த வகை இணையத் தாக்குதல்களை சந்தித்திருப்பதும் உங்களின் விளக்கங்கள் சார்ந்த பதிவும் ....இவை உங்களின் கருத்து சார்ந்த வரவிருக்கும் பதிவுகளைப் பாதிக்காது என நம்புகிறேன். தொடருங்கள் தீவிரமாய்...இந்த வகை விவகாரங்களில் தீவிரமாய் மனதை ஈடுபடுத்தாமல் இருப்பது என்பதே வலைப் பதிவுலகில் வந்தபின் நான் கற்றுக் கொண்டதும்!.

Narain said...

சில பல கருத்து வேறுபாடுகள் இருப்பினும் வலைப்பதிவுகளில் தங்களின் இருப்பு மிக முக்கியமாய் தோன்றுகிறது. ஆகையால், இதுவரை எழுந்த சலசலப்புகளுக்கும், இனிமேல் எழப் போகும் சலசலப்புக்கும் போதிய கவனங்களை கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

வசந்தின்
//நீங்கள் எழுத தொடங்கிய பதிவிலேயே இது நடந்தது துரதிர்ஷ்டமானது.// என்பதை மூழுமையாக ஒப்புக் கொள்ளும் தருணத்தில் இதன் மூலம் உங்களின் கவனம் வேறு பக்கம் திரும்பிவிடக்கூடாது என்பதையும் என்னளவில் சற்றே ஆழமாய் சொல்லலாம் எனத் தோன்றியது.

//இழிசொற்களை உபயோகிப்பவர்கள் அவை போய்ச் சேருமிடத்தை அறிந்தால் இன்னொருமுறை அவற்றை உபயோகிக்க துணிய மாட்டார்கள்.//

உங்களின் உணர்வுகள் புரிகின்றது. சொற்களும், அவை வெளிப்படுத்தும் வீரியங்களும் குறித்து எனக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபங்களின் வாயிலாக, அதன் வலியையும், உட்காயத்தையும் அறிந்திருக்கிறேன்.

உங்களுக்கான மனமுதிர்ச்சியுடனும், தெளிவுடனும், இந்த பதிவினை தொடர்ந்து எழுதுங்கள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட.

ஈழநாதன்(Eelanathan) said...

அன்பின் மனுஸ்யபுத்திரன்

தங்களின் வலைப்பதிவில் ஏற்பட்ட இந்த அனுபவம் துரதிஸ்ட வசமானது என்று கூறிவிடுவதற்கில்லை.ஒரு சிறுபத்திரிகை ஆசிரியனாக இவ்வாறான விவாதங்களை எதிர்கொண்டிருப்பீர்கள்.தனிப்பட்ட காழ்ப்புணர்வுகள் எதுவுமின்றி சுராவுக்கு எந்தவித உறவுமின்றி உங்களின் கருத்துகளுக்கு எதிர்வினையாக மட்டுமே பெயரிலி முன்வைத்தவற்றை தனிப்பட்ட தாக்குதல் என்று ஒற்றைப்படையாகச் சுட்டுவது சிறிது மனவருத்தமளிக்கின்றது.இதனால் எந்தவித மனச்சஞ்சலமுமற்று வலைப்பதிவைத் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன்.

வெள்ளாவி குறித்த ஒரு பதிவை எனது பதிவில் இடுவேன்.சர்சைக்காக இல்லை விளக்கத்துக்காக மட்டுமே

சுட்டுவிரல் said...

//இஸ்லாமிய அடிப்படைவாதமும் பயங்கரவாதமும் இஸ்லாமியர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகயுமே பல நூற்றாண்டுகள் பின்னோக்கி செலுத்தக்கூடியது என்பதை நான் பல அரங்குகளில் முன்வைத்திருக்கிரேன். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பத்தற்கோ, ஹிந்த்துத்வாவை எதிர்ப்பத்தற்கோ இஸ்லாமிய பயங்கரவாத்தை மறைமுகமாகவோ, ரகசியமாகவோ ஆதரிப்பது மிகவும் ஆபத்தானது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறேன். ஷாபானு ஜீவானாம்ச வழக்கில் நான் ஷாபானுவை ஆதரித்து எழுதிய கட்டுரைக்காக அடிப்படை வாதிகளால் மிரட்டப்பட்டேன். கவிஞர் ரசூலின் கவிதைத் தொகுப்பை அடிப்படை வாதிகள் எதிர்த்து இயக்கம் நடத்தியபோது அவரை ஆதரித்து நான் எழுதிய கட்டுரை என்னுடை 'காத்திருந்த வேளையில்' தொகுப்பில் இருக்கிறது.

மனோரீதியாகவும் சிந்தனாபூர்வமாகவும் பிறப்பு சார்ந்த அடையாளங்களை ஒருவர் எவ்வளவோ போராடிக் கடந்துவந்தபோதும் இதுபோன்ற விவாதங்களில் ஒருவர் எடுத்த எடுப்பில் இந்த அடையாளங்கலிலிருந்தே பேசத் தொடங்கும்போது உரையாடலின் சாத்தியங்கள் பற்றிய கேள்விகள் எழுகின்றன.// அன்புள்ள மனுஷ்யபுத்திரன், தெரியாமல் தான் கேட்கிறேன், அது என்ன இஸ்லாமிய பயங்கரவாதம்? தயவுசெய்து பயங்கரவதிகளுக்கு பிரபலமான எழுத்தாளர்களாகிய உங்களைப் போன்றவர்கள் குல்லாவோ சிலுவையோ விபூதியோ அணிவிக்காதீர்கள். காரணம், நல்ல மத்ங்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை.முரண்பாடாக, பயஙகரவாதம் ஹிந்து பயஙகரவாதம் யென்று சமீபதில் தான் பத்திரிக்கைகள் எழுதத்தொடங்கின.
பிற்றப்பு சார்ந்த அடையலஙளை ஏன் கடந்து வர வேன்டும்? 1) அதன் மகிமை புரியாத பொது 2) பார்வையிலோ அல்லது அந்த அடயளங்களிலொ கோளாறு இருந்தாலொழிய கடந்து வரவேண்டியதில்லயே?
என்க்கென்னவோ, உங்கள் பார்வை தான் கோளHறு என்று நினைக்கிறேன். ஆனல் 'பிரபல்யமானவர்களின் அபிப்ராயங்கள் சரி தான்' என்பது ஒரு காலம் காலமான மூட நம்பிக்கை- இலக்கியவாதிகளிடத்திலும் தான்.

Jsri said...

சுட்டுவிரல், இந்தப் பதிவு, உங்க பதில் ரெண்டுமே ரொம்ப யோசிக்கவெக்குது.

ஆனா பிறப்பைவிடுங்க, நீங்க ஏன் உங்க பெயர் அடையாளத்தையே கடந்துவந்து இதைச் சொல்லணும்னு தெரியலையே. சுட்டுவிரல் உங்க சொந்தப்பெயர் இல்லைன்னு நம்பறேன்.

Jsri said...

சுட்டுவிரல், மன்னிக்கவும். உங்க பதிவு இப்பத்தான் 5 நிமிஷம் முன்னால தமிழ்மணத்துல வந்திருக்கு. அதனால உங்களை எனக்குத் தெரியாம போன பின்னூட்டம் எழுதிட்டேன்.

உங்க பதிவுகளும் படிச்சுட்டு சொல்றேன்.