Sunday, February 13, 2005

காதல் கவிதைகள்-1 ஆத்மாநாம்

காட்சி

முதலில்
நீதான் என்னைக்
கண்டுகொண்டாய்
எனக்குத் தெரியாது
மனிதர்களைப் பார்த்தவண்ணம்
முன்னே வந்துகொண்டிருந்தேன்
உயிருடைய ஒரு முகத்துடன்
பளிச்சிட்டுத் திரும்பினாய்
பின்னர் நடந்தவைக்கெல்லாம்
நான் பொறுப்பல்ல
எந்த ஒருகணம் என்பார்வை உன்மேல் இல்லையோ
அந்த ஒரு கணம் முழுமையாக என்னைப் பார்ப்பாய்
அதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
மாமன் ஒருவன் உன்னை இடம்பெயர்க்க
காட்சிகள் மாற மாற
நானும் நீயும் ஒரு நாடகத்தை முடிக்கிறோம்.


உன் நினைவுகள்

எனினும் நான்
உற்றுப் பார்த்தேன்
கூர் வைரக் கற்கள்
சிதறும் ஒளிக் கற்றைகளை
வீசும் விளக்கை

அப்பொழுதேனும்
துடிக்கும் மனத்தின்
பிணைப்பினின்று மீள

முடியாது
இவ்விதம்தொடர்ந்திருக்க முடியாது என்று
நிற்கும் தரையின்
பரிமாணங்களைச் செதுக்கிய
ஓவியத்திற்குச் செல்வேன்
பழகிவிட்ட ஓவியமும்
கைவிடும்

உதிர முடியாத
காகிதப் பூக்கள்
வண்ணம் இழக்கும்

மெல்லிய ஒலியுடன்
நாடி நரம்புகளைத்
தொற்றிக் கொண்டு
சிறிது நேரம்
மூச்சளிக்கும் இசை

எழுத்துக் கூட்டங்களுக்கும்
தொடர்வேன்
ஏதேனும் ஒரு மூலையில்
உன் நினைவுகள்

என் அறையில்
நான் முடங்கிக் கிடக்கையில்
எப்பொழுதேனும்
அந்த உயிரிழந்த பஸ்ஸரை
அழுத்திச் சென்றுவிட்டாயோ
என்று மன மதிரும்

பின்னர்
உயிர்த்திருக்கும்
புட்களுடன்
தேடிக்கொண்டிருப்பேன்
அலையும் நினைவுகளில்

நன்றி: ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு பதிப்பகம் 2002)

10 comments:

ROSAVASANTH said...

ஆத்மாநாம் என்ற உன்னத கவிஞனை நினைவுகொண்டதற்கும், நினைக்க வைத்ததற்கும் நன்றி!

சன்னாசி said...

காதலர் தினம்: நன்றி ஹால்மார்க் போன்ற வாழ்த்து அட்டை கம்பெனிகள்.

இருப்பினும், எனக்கு ஞாபகமிருக்கும் ஒரு கவிதையை இங்கே இடுகிறேன்.

உன் பார்வைகள்
காயங்களுடன் கதறலுடன்
ஓடி ஒளியுமொரு பன்றியைத்
துரத்திக் கொத்தும்
பசியற்ற காக்கைகள்
-கலாப்ரியா

(நினைவிலிருந்து எழுதுவதால், தவறிருக்கலாம்...)

ROSAVASANTH said...

என் நினைவிலிருந்து பிழை எதுவும் இல்லை!

Narain Rajagopalan said...

எனக்கு பிடித்த அறிவுமதியின் வரிகள் (?!)

என்னக் கேட்டாலும்
வெட்கத்தை பரிசாக
தருகிறாய்
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்

இளங்கோ-டிசே said...

நரேன், மேலே பதிந்த கவிதை அறிவுமதியினதா அல்லது தபூ சங்கரினுடையதா?
'வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்' என்ற தலைப்பில் தபூ சங்கர் ஒரு கவிதைத்தொகுப்பு வெளியிட்டதாய் நினைவு.

Anonymous said...

மனுஷ்யபுத்திரன்:
இன்று மேற்கில்கூட 'காதலர் தினம்' என்பதில் காதலர்களுக்கான முக்கியத்துவம் பாதிதான். மீதி வியாபாரிகளுக்கானது, மற்றெல்லா கொண்டாட்டங்களையும் போலவே. மழலைப் பள்ளிக் குழந்தைகளிலிருந்து நாளை எல்லோருமே வாழ்த்து அட்டைகள் பரிமாறிக்கொள்ள வேண்டும். கிறிஸ்த்மஸ்க்கு அடுத்து அதிகமாக அட்டைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது காதலர் தினத்தின்போது தான். வார இறுதியில் இந்த ஆண்டின் காதலர் தினம் சம்பந்தமான வியாபாரம் எவ்வளவு என்ற புள்ளிவிவரங்கள் கிடைக்கும். ஆகவே, இந்த சந்தர்ப்பத்தை நம்மூர் வெகுஜன அச்சு, மின் ஊடகங்கள் பயன்படுத்திக்கொள்வதில் எந்த வியப்புமில்லை.

ஆத்மாநாமின் 'சிகரெட்டிலிருந்து வெளியேறும் புகையைப் போல...' என்று ஆரம்பிக்கும் இன்னொரு கவிதையும் நினைவுக்கு வருகிறது.

மாண்ட்ரீசர்: கலாப்ரியா கவிதையின் வார்த்தைகள் சரிதான். முதல்வரி மட்டும் கடைசியில் இருக்கவேண்டும்.

சிவகுமாரின் கவிதை நன்றாக உள்ளது.

காதல் பற்றிய இன்னொரு கவிதை:

காதல் காதல் என்ப; காதல்
வெறியும் நோயும் அன்றே. நினைப்பின்
இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்;
சாதல் கவிந்த வாழ்வில்
வானம் தந்த வாம நிலவாம்.
-- சி. மணி

மு. சுந்தரமூர்த்தி

Anonymous said...

Narain
அது அறிவுமதிதான்...
மேலும் படிக்க இங்கு செல்லவும். அனைத்தும் அருமையான கவிதைகள்

http://www.tamil.com/ilavattam/kavithaivetkam.htm

அருளடியான் said...

நீங்கள் எழுதும் கவிதைகளைக் குறுப்பிட கீழே உங்கள் புனைப்பெயரையே எழுதுங்கள். நான் என எழுத வேண்டாம்.

நண்பன் said...

என்னக் கேட்டாலும்
வெட்கத்தை பரிசாக
தருகிறாய்
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்
---

இந்த வரிகளை எழுதியவர் - தபூ சங்கர்.

அறிவுமதியின் கவிதையில் ஒன்று -

இனி பார்க்க
வேண்டும் என்கிற
ஆசை
வருகிற போதெல்லாம்
அந்த வானத்தைப்
பார்த்துக் கொள்ளலாம்

எங்காவது
ஒர்ரு புள்ளியில்
நம் பார்வைகளாவது
சந்தித்துக்
கொள்ளட்டுமே

----

மிதர அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அப்பொழுது தான் அச்சடித்து வந்திருந்த பிரதிகளில் ஐந்தை எடுத்து துபாயில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் கொடுங்கள் என்று கூறி தந்தார். அந்த வகையில் இந்தப் புத்தகத்தின் முதல் பிரதி என் கையில்...

நண்பன் said...

அந்த புத்தகத்தின் பெயர் ---

ஆயுளின் அந்தி வரை....