ஸ்தனதாயினி
இனிய வெண்கலப் பழங்கள்
உன் மார்பகங்கள்
உள்ளே
உயிர்தழைக்கப் பெய்யவெனத்
திரண்டிருக்கும் பால்மேகம்.
ஒன்றில்
தாய்மையின் கசிவு
மற்றதில்
காதலின் குழைவு
உன் இடது முலை அருந்துகையில்
என் கண்களில்குழந்தமையின் நிஷ்களங்கம்
அப்போது உன் இடதுமுலை பரிந்து சுரக்கும் ஊற்று
உன் வலதுமுலை அருந்துகையில்
என் கண்களில்காதலின் உற்சவம்
அப்போது உன் வலதுமுலை
நெகிழ்ந்து பெருகும் அருவி
குழந்தைமையும் காதலும் கனிந்தமனவேளையில்
உன் மார்பகங்களின் இடைவெளியில்
உணர்கிறேன்
அமைதிக் கடலாய் ஒரு மூன்றாவது முலை.
உன் பெயர்
உன்பெயர்-
கபாலத்தின் உட்கூரையிலில் கிளைத்து
என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு
என் தனிமைப் பாலையில் துணைவரும் நிழல்
என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை
காணிநிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி
உன் பெயர்-
இன்று என் உற்சாகங்களை மூடும் வலை
என் காதை அறுத்துத் தரச் சொல்லும் விநோதக் கோரிக்கை*
கொய்யபட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்**
என் இதயத்தைத் துளைக்கும் அன்பின்விஷம் தடவிய வாள்
நீயே என் ஆனந்தம், அலைச்சலில் ஆசுவாசம், குதூகலம்.
நீயே எந்துக்கம், பதற்றம், பிரிவின் வலி.
காலம் அறியும்; உன் பெயர் வெறும் பெயரல்ல எனக்கு
நீயே அறிபவள்;நான் வழியில் எதிர்ப்பட்ட வெறும் பெயரா உனக்கு?
உன் பெயர்-
இந்த இரவில் காலி அறையில் மாட்டிய கடிகாரம்
* தன் காதலிக்கு பரிசாக தன் காதை அறுத்துத் தந்த வான்கோ
** யோவானின் தலையை அன்பளிப்பாக வேண்டிய பைபிள் பாத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
சுகுமாரனின் ஸ்தனதாயினி என்ற இந்தக் கவிதை இலக்கியத்துக்கும் போர்னோவுக்கும் இடையே இருக்கிற வித்தியாசத்தைக் கலாபூர்வமாகவும் இலக்கியத்தரமாகவும் எடுத்துக் காட்டுகிறது. அசூயையோ, உள்ளாடைக்குள் தன்னையறியாமல் எழுந்தாடுகிற உணர்வுகளையோ, அதிர்ச்சி தருகிற நோக்கத்தில் ஆத்மாவை இழந்துவிடுகிற எழுத்தென்ற உணர்வையோ, தராமல் - இக்கவிதை ஸ்னேகமாய், ஓர் அந்தரங்க நட்புடன் பேசுகிறது ஆத்மார்த்தமாய்.
ஜே.பி.சாணக்யாக்கள் எழுதுவதற்குமுன் ஒருமுறை இப்படிப்பட்ட படைப்புகளைப் படித்துவிடுவது நல்லது.
அன்புடன், பி.கே. சிவகுமார் (PK Sivakumar)
ஸ்தனதாயினியை விட "உன் பெயர்" மிக நன்றாக இருக்கிறது
எனக்கு ஸ்தனதாயினி பிடித்துள்ளது
Post a Comment