Monday, February 07, 2005

நன்றி

நண்பர்களே...

உயிர்மை வலைப்பதிவை வரவேற்று உடனடியாக வந்து சேர்ந்த பதிவுகள் மிகவும் உற்சாகம் தருகின்றன. கயல்விழி, மு.மயூரன், நாராயண், தங்கமணி, டிசே தமிழன், ஜெஸ்ரீ, ராதா கிருஷ்ணன், ஹெச்.பக்ருதீன், சுரேஷ் கண்ணண், நண்பர்கள் பி.கே.சிவகுமார், இரா.முருகன்....எல்லோருக்கும் என் பிரியங்கள். வலைபதிவுகளின் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பன் தேசிகனுக்கும் நன்றி.

பி.கே.சிவகுமார், உயிர்மை ஆரம்பித்த பிறகு நான் எழுதுவது குறைந்துபோனது பற்றி எழுதியிருந்தார் .உயிர்மை ஒரு விதத்தில் மிகவும் படைப்பூக்கமுள்ள ஒரு செயல்பாடாக இருந்தபோதும் எனது தனிப்பட்ட எழுத்துக்கள் குறைந்துபோனது அந்தரங்கமான கடும் இழப்புணர்வை ஏற்படுத்துகிறது.(தமிழுக்கு எந்த இழப்பும் இல்லை). ஆனால் இதற்கு பத்திரிகை நெருக்கடிகள் காரணம் என்று முற்றாகக் கருத இயலவில்லை. இதைவிடவும் நெருக்கடியான காலங்களில் நிறைய எழுதியிருக்கிறேன். எப்போது உறைபனி ஒரு படைப்பாளியைச் சூழ்கிறது என்பதற்கான காரணங்கள் மர்மமாகவே இருக்கிறது. இத்தகைய உலர்ந்த பருவங்களை எல்லா எழுத்தாளனும் அவ்வப்போது கடந்துகொண்டுதான் இருக்கிறான். எழுத்து எனக்கு தொழிலுமல்ல, தவமுமல்ல. அது ஒரு வாதை. ஒரு கனவின் திடுக்கிடல். தற்செயலாக வந்து சேரும் காதலின் ஸ்பரிசஸம்...சரி இப்படியே போனால் அதிகமாக இதைரொமாண்டிசிஸ் செய்தது போலாகிவிடும்.

ஊற்றின்மீது வந்து படியும் சாம்பலை ஊதி அகற்ற ஒரு பொழுது வரவேண்டியிருக்கிறது.

மனுஷ்ய புத்திரன்
manushyaputhiran@yahoo.com

4 comments:

Jayaprakash Sampath said...

//ஊற்றின்மீது வந்து படியும் சாம்பலை ஊதி அகற்ற ஒரு பொழுது வரவேண்டியிருக்கிறது.//

அட.... உரை நடையைக் கூட கவிதை போல அழகாய் எழுதுகிறீர்கள்.

ROSAVASANTH said...

வாங்க மனுஷ்யபுத்திரன்!

உங்கள் பதிவுகளை வாசிக்க காத்திருக்கிறோம்!

இளங்கோ-டிசே said...

//எழுத்து எனக்கு தொழிலுமல்ல, தவமுமல்ல. அது ஒரு வாதை. ஒரு கனவின் திடுக்கிடல். தற்செயலாக வந்து சேரும் காதலின் ஸ்பரிசஸம்...//

பிடித்திருந்தது.

//எப்போது உறைபனி ஒரு படைப்பாளியைச் சூழ்கிறது என்பதற்கான காரணங்கள் மர்மமாகவே இருக்கிறது. இத்தகைய உலர்ந்த பருவங்களை எல்லா எழுத்தாளனும் அவ்வப்போது கடந்துகொண்டுதான் இருக்கிறான்.//

இதை வாசிகும்போது, அ.முத்துலிங்கம் அண்மையில் (உயிர்மையிலோ அல்லது காலச்சுவடிலோ) எழுதியிருந்த, 'ஒரு வார்த்தை வேண்டும்' என்ற கட்டுரை நினைவில் வந்தது.

Narain Rajagopalan said...

நல்ல உரைநடைக்கு உதாரணம், படிக்கும்போது, அதன் நிகழ்வுகள் கண்முன் ஓட வேண்டும். உங்களின் நடையில் அது தெரிகிறது. நிறைய எழுதுங்கள். நிறைய விவாதிப்போம். நிறைய சண்டை போடுவோம். இவையனைத்தும் பிரியத்தினாலேயே.

//ஊற்றின்மீது வந்து படியும் சாம்பலை ஊதி அகற்ற ஒரு பொழுது வரவேண்டியிருக்கிறது.//

ப்பூ....... ஊதியாச்சு