சுனாமி என்ன ஊழி வந்து இந்த உலகத்தை மூழ்கடித்தாலும் அற்பங்களுக்கு எந்த ஞானமும் வராது என்பதற்கு தமிழக அரசியல்வாதிகளை விட உதாரணம் காட்டுவது கடினம். சுனாமி நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையிலான பெயர்தட்டிச் செல்லும் போட்டிகள் மத்திய மாநில அரசுகளின் உரிமைப் பிரச்சினையாகி சூடு பறக்கும் விவாதங்கள் பறந்துகொண்டிருக்கின்றன. சன் டிவி. திரட்டிய நிதியை வாங்குவதற்கு ஜெயலலிதா நேரம் ஒதுக்காததால் அது பிரதமரிடம் நேரடியாக அளிக்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கின்றன. சட்ட மன்றத்தில் சுனாமியில் இறந்து ஆடு மாடு கோழிகளுக்குநிவாரணத் தொகை விவரம் அமைச்சரால் அறிவிக்கப்படும்போது முதல்வர் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார். சடலங்களை அகற்றியது ராணுவமா உள்ளூர் துப்புரவுப் பணியாளர்களா என்பதும் பிரச்சினையாகி இருக்கிறது ( ராணுவம் மத்திய அரசைச் சேர்ந்தது. அதாவது தி.மு.க. உள்ளூர் துப்புரவுத்தொழிலாளர்கள் மாநில அரசைச் சேர்ந்தவர்கள். அதாவது அ.தி.மு.க.)
சட்ட மன்றத்தில் நேற்று நடந்தது அநாகரிகத்தின் உச்சக் கட்டம். கருணாநிதி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்காமலிருக்கவே அந்த சமயத்தில் மருத்துவமனையில் போய்படுத்துக் கொண்டார் என்ற அதிமுகவினரின் பேச்சினால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அதிமுக அமைச்சர் ஜெயகுமார்' கருணாநிதி கைது செய்யபட்டபோது பயந்து அலறியதை டிவியில்தான் பார்த்தோமே' என்று கிண்டலடிக்க பெரும் அமளி ஏற்பட்டது. அமைச்சரின் தரகுறைவான பேச்சை சபாநாயகர் காளிமுத்து வழக்கம்போல அவைக் குறிப்பிலிருந்து நீக்க மறுத்துவிட்டார்.
சுனாமிப் பேரழிவின் கொடுங்கனவிலிருந்து உலகம் இன்னும் விடுபடவில்லை. உயிரிழப்புகளும் பொருள் இழப்புகளும் கணக்கிட்டுத் தீரவில்லை. பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கை முற்றாக அழிந்துபோயிருக்கிறது. உதவிகள் சரிவரக் கிட்டாதவர்களின் கூக்குரல் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளது. மனப் பிறழ்வுக்கு ஆளான குழந்தைகள் கடல் வருகிறது... என்று கதறியவண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உலகெங்கிலுமிருந்து மக்கள் உதவிகள் அனுப்பியவண்ணம் இருக்கிறார்கள்.
ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட, அவர்கள் அளித்த அதிகாரத்தை உண்டுவாழும் அரசியல்வாதிகள் இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில்நிவாரணப்பணிகளை மேம்படுத்துவது, ஒருங்கிணைப்பது தொடர்பாக ஆக்கபூர்வமான விவாதங்களை உருவாக்குவதற்குப்பதில் தங்களதுகீழ்த்தரமான சண்டைகளை மீண்டும் ஒருமுறை அரங்கேற்றியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் மடிந்ததைக் காட்டிலும் அதை யார் போய்ப் பார்த்தார்கள், யார் பார்க்கவில்லை என்பதுதான் முக்கியப் பிரச்சினையாகி இருக்கிறது.
பிணந் தின்னிக் கழுகுகள் இறந்த சடலங்களைப் போய் பார்ப்பதற்கும் அரசியல்வாதிகள் போய்ப் பார்ப்பதற்கும் என்ன வித்தியாசம் என்று உண்மையாகவே எனக்குப் புரியவில்லை. கழுகுகள் அப்போதே தங்கள் பசியைத் தீர்த்துக் கொள்ளும். அரசியல்வாதிகளின் பசி அடுத்த தேர்தல்வரை நீடிக்கும்.
அரசியல் நாகரிகம்கூடவேண்டாம், குறைந்தபட்ச மனிதாபிமானமும் மனசாட்சி உறுத்தலும் கூடவா இல்லாமல் போகும்?
மனுஷ்ய புத்திரன்
manushyaputhiran@yahoo.com
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
இதில் ஆச்சரியம் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது. வேறு மாதிரி நடந்திருந்தால்தான் ஆச்சரியம் வரக்கூடும். அரசியல் காரணங்களால் பலர் கொல்லப்படும் கலவரங்களை தூண்டும் அரசியல்வாதிகள், இப்படி ஒரு பேரழிவில் மட்டும் மனிதாபிமானத்தை காட்டுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்.
ஆனால் அரசியவாதிகள் மட்டுமல்ல, எல்லா அரசாங்கங்களும், இலங்கை, இந்தோனேஷியா, அமேரிக்கா, எல்லாமே இந்த பேரழிவை தங்களுக்கு சாதகமாவே பயன்படுத்த முனைகிறது. கிரிஸ்தவர்கள் இதை முன்வைத்து திருசெய்தியை பரப்ப நினைக்கிறார்கள். வேறு வக்கிரங்கள் பெரியவாளை உள்ளேபோட்டதையும் இதையும் முடிச்சி போடுகிறார்கள். ஆக இதில் அரசியல்வாதி வேறு மாதிரி நடப்பதை ஏன் எதிர்பார்க்க வேண்டும்? மேலும் அரசிய்யல்வாதிகளின் சுயநலமும், மனிதாபிமானமற்ற தன்மையும் வெளிப்படையானவை. எளிதில் புலப்பட கூடியவை! மற்றவை குறித்து அதிகம் பேசவேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.
'எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்' என்ற மனோபாவமே பலருக்கும் இருக்கிறது. அரசியல்வாதிகளை விடுங்கள், சுனாமி பாதித்த பகுதிகளைச் சேர்ந்த, ஆனால் சுனாமியால் பதிக்கப்படாத மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? பாதிக்கப்பட்டவர்களுக்குச் சென்று சேர வேண்டிய பொருட்களை கொள்ளையடிக்கிறார்கள், எங்கிருந்தோ வந்தவர்கள் நிவாரணப் பணி புரிய இவர்கள் வீணில் அமர்ந்து சீட்டாடிக் கொண்டும் சாலை மறித்துக் கொண்டும் பொழுது போக்குகிறார்கள். தமிழக அரசின் 'டாஸ்மாக்' மது விற்பனையை சாதனை படைக்க வைத்திருக்கிறார்கள். நம் மக்களின் பிரதிநிதிகள்தானே அங்கே ஆள்பவர்களும்? குடிகளின் வழிதான் இங்கே அரசும்.
சீட்டாடுவதிலும், தண்ணியடிப்பதிலும் அப்படி என்ன பெரிய பிரச்சனை இருக்கிறது. சுநாமி வந்து பாதிக்கப்பட்டதால் *அவர்கள்* தண்ணி அடிக்க கூடாது, சீட்டாட கூடாது, கறிசோறுக்கு கூட ஆசைப்பட்கூடாது என்றெல்லாம் ஏன் எண்ணம் தோன்றுகிறது என்பதையும், அதற்கு பின்னுள்ள உளவியலை யோசிக்கவேண்டும். இப்படி ஒரு கருத்தை பல இடங்களில் வலைப்பதிவுகளில் பார்த்ததால் ஒரு முறையேன்னும் ஆட்சேபிக்க இதை எழுதுகிறேன்.
இவற்றை சாதாரண சமயங்களில் செய்வதில் எந்தப் ப்ரச்னையும் இல்லை. ஒரு பேரழிவினால் பாதிக்கப்பட்டருக்கும்போது, அங்கே சம்பந்தமே இல்லாத தன்னார்வலர்கள் இவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும்போது சீட்டாடி பொழுது போக்கிக் கொண்டிருப்பது தான் தவறு.
அன்பு மனுஷ்யபுத்திரன்,
சமீபத்தில் எதிலேயோ படித்த நகைச்சுவைத் துணுக்கு நினைவுக்கு வருகிறது.
கழிவுகள் நிறைந்த பன்றிப் பண்ணையின் உள்ளே சில மணிநேரங்கள் இருப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்றொரு போட்டி நடத்தப்பட்டது. பல பேர் முயன்று அந்த துர்நாற்றத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் சில நிமிடங்களிலேயே வெளியே ஓடி வந்தனர். பின்பொருவர் உள்ளே போனபோது பன்றிகள் அனைத்தும் வெளியே ஓடிவந்தன. பிறகு விசாரித்ததில் தெரிந்தது, அவர் ஒரு அரசியல்வாதி என்று.
மக்களின் பிணங்களின் நடுவில் அரசியல் தேடும் அரசியல்வாதிகளின் அநாகரிகங்களைப் பற்றி எழுதி உங்கள் நேரத்தை வீணடித்திருக்க வேண்டாம். அரசியல்வாதிகள் என்றால் (சில நேர்¨மான விதிவிலக்கானவர்கள் தவிர) சேற்றில் உழலும் பன்றிகள் (பன்றிகள் மன்னிக்க) என்று அகராதியில் பொருள் மாறி நீண்ட வருடங்களாகி விட்டது.
உங்கள் கவிதைகளை விட அழகான சொற்கோர்வைகளுடன் கூடிய உங்களின் உரைநடைபால் (உயிர்மையின் தலையங்கள் போன்று) பிரேமை கொண்டவன் நான். கடந்த பதிவைப் போன்று சிறந்த பதிவுகளை பல்வேறு தலைப்புகளில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
இன்றைய செய்தித்தாளில் நேற்று சட்டமன்றத்தில் நடைபெற்ற அநாகரிகமான விவாதங்களைப் படித்து வருத்தமடைந்தேன். உருப்படியான விவாதங்கள் ஒன்று கூட இப்பொழுதெல்லாம் தமிழக சட்டமன்றத்தில் நடப்பதாகவே தெரியவில்லை. ஆனால் பிற மாநிலங்கள் இவ்வளவு மோசமில்லை.
இது தமிழகத்தின் சாபக்கேடு.ஒரு பேரழிவு நிகழ்வதும் அதற்க்காக இரண்டு மூன்று அறிக்கைகளை வெளியிட்டுவிட்டு,நிவாரணப்பணிகள் இவர்களால் மட்டுமே நிகழ்ந்தது என்ற ஒரு தோற்றத்தை எற்படுத்துவது இவர்களின் வாடிக்கையாகிவிட்டது.இழந்தவர்களை மேலும் துன்பபடுத்தக்கூடியது இது.இவர்கள் அமைதியாக இருந்தாலே மற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
"உபகாரம் செய்யாவிடினும்,குறைந்தபட்சம் உபத்திரம் செய்யாமல் இருக்கலாம்"
ரோஸா வஸந்த் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தண்ணியடிப்பதிலும் சீட்டாட்டத்திலும் ஈடுபடுவது என்ன தவறு என்றும் இதைத் தவறு
என்று சொல்பவர்களின் உளவியலை ஆராயவேண்டும் என்றும் கூறியிருந்தார் தாராளமாக ஆராயலாம். தவறே இல்லை. சுனாமியால்
பாதிக்கப்பட்டவர்கள் பழைய துணிகளையும் தரக் குறைவான இலவச உணவையும் வாங்க மறுத்த சம்பவங்கள் பல இடங்களில்
நிகழ்ந்துள்ளன. இது உழைக்கும் மக்களின் சுயமரியாதையை வெளிப்படுத்தியது. மத்திய தரவர்க்க போலி மனிதாபிமானிகள் இதை எரிச்சலுடன்
விமர்சிப்பதை நானே கேட்டிருக்கிறேன். ஆனால் 'தண்னியடிப்பது' சம்பந்தமான பிரச்சினையை ஏதோ உழைக்கும் மக்கள் மேல் திணிக்கப்படும் ஒழுக்கவியல் மதிப்பீடாக
அல்லது அவர்களை அறவியல் ரீயாதாக மேலாண்மை செய்ய முற்படும் மனோபாவமாக மட்டும் நாம் புரிந்துகொள்ளக்கூடாது. சுனாமியால்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் களப்பணிகளில் ஈடுபட்டுள்ள நண்பர்கள் இரண்டு விஷயங்களை திரும்பத் திரும்பத்
குறிப்பிடுகிறார்கள்.
முதலாவதாக மக்களுளுக்கு நினியோகிக்கபடும் உதவிப் பொருட்கள் பல சமயங்களில் உள்ளூர் தாதாக்களால் அபகரிக்கப்படுகிறது.
இரண்டாவதாக, உதவித் தொகை பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஆண்களின் கைகளில் சேரும்போது பலரும் அதை ஊதாரித்தனமாக
செலவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே. சுனாமி நிவாரணப் பணிகள் நடைபெறும் இடங்களில்
அரசு மதுபானக் கடைகளில் மதுபான விற்பனை கணிசமாக உயர்ந்திருப்பதை பத்த்கிகைகள் சுட்டிக்காட்டுகின்றன. சமீபத்தில் தமிழ
அரசு நிவாரண உதவிகளை பெண்களிடம் வழங்கவேண்டும் என அறிவுறுத்தியிருப்பதும் இந்தப் பிண்ணணியிலேயே. இது குடிக்கும்
சூதாட்டத்திற்கும் எதிரான பிரச்சினையல்ல.
மனுஷ்ய புத்திரன்
கழகங்களின் அரசியல் கலாசாரத்தை விமர்சிக்கும் உங்களின் பதிவு வரவேற்கப்படவேண்டியது. கழகங்களுக்கு மாற்றாக கருதப்படும் அரசியல் சக்திகளான வைகோ போன்றவர்களை தங்களை போன்ற நடுநிலையாளர்கள் மறுதலிப்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.
//சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தண்ணியடிப்பதிலும் சீட்டாட்டத்திலும் ஈடுபடுவது என்ன தவறு என்றும் இதைத் தவறு
என்று சொல்பவர்களின் உளவியலை ஆராயவேண்டும் என்றும் கூறியிருந்தார் தாராளமாக ஆராயலாம். தவறே இல்லை//
//இது குடிக்கும் சூதாட்டத்திற்கும் எதிரான பிரச்சினையல்ல. //
அதிர்ச்சியாக இருக்கிறது. நிவாரணப் பொருட்களை லாரியிலிருந்து இறக்கி வைக்க முடியாமல் தட்டுத்தடுமாறும் அந்த கன்னடத்து ஆசாமியும், அதை ஓரக் கண்ணால் பார்த்தபடி மாரியம்மன் கோயில் வாசலில் சீட்டாடும் அந்த மீனவ இளைஞனும் ஞாபகத்துக்கு வருகிறார்கள்.
1. எந்த பாதிப்பும் இல்லாத பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த அந்த மீனவ இளைஞன் சீட்டாடத்தை துறந்த உதவிக்கு வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?
2. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குடிப்பழக்கம், சீட்டாட்டத்தை தவறென்று விமர்சிக்க எழுத்தாளர்கள் தயக்கம் காட்டுவது சரிதானா?
புரியவில்லை!
ராம்கி
குடியையும் சூதாட்டத்தையும் ஆதரிப்பது தமிழ் எழுத்தாளர்களின் வேலையல்ல. அப்படி ஒரு கற்பிதம் எவ்வாறோ பரப்பப்பட்டிருக்கிறது. போலி ஒழுக்கவாதிகள் கற்பிக்கும் நடத்தை விதிகள் பற்றியே எழுத்தாளர்கள் கேள்வி எழுப்பி வந்திருக்கின்றனர். மேலும் ஒரு சமூகத்தின் நலன்களை அழிப்பது சுரண்டலும் வன்முறையும் அதிகார வர்க்க கயமைகளுமே அல்லாமல் குடியும் சூதாட்டமும் அல்ல.
மனுஷ்ய புத்திரன்
அன்புள்ள ரஜினி ராம்கி,
நான் உங்கள் கட்டுரைகளிலும் இப்படி சில கருத்துக்களை பார்திருக்கிறேன். அந்த தொனி குறித்து எனக்கு விமர்சனம் இருந்தும் சொல்லியதில்லை. காரணம் உங்களுக்கும் தெரியும். நீங்கள் களத்தில் இருக்கிறீர்கள். நான் ஒரு துரும்பை கூட எடுத்து போடாமல் இணையத்தில் தட்டிக்கொண்டிருக்கிறேன். இந்த ஒரு காரணத்திற்காக மட்டும் எப்போதும் வாயை மூடிகொண்டிருக்க வேண்டுமா என்று தெரியவில்லை.
மேலே சுதர்சன் அரசியல்வாதிகளின் செயல்களோடு, மக்கள் குடிப்பதையும் சீட்டாடுவதையும் ஒப்பிடும்போதே சொல்லாமல் இருக்க கூடாது என்று தோன்றி என் ஆட்சேபத்தை தெரிவித்தேன். குடி, சீட்டாட்டத்தில் மனுஷ்யபுத்திரன் குறிப்பிடும் பிரச்சனைகளை நானும் ஏற்றுகொள்கிறேன். எல்லா நேரத்திதிலும் அப்படி ஒரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.
மீனவர்களின் பொதுவான வாழ்க்கையே கேர்ஃப்ரீயாகத்தான் இருக்கிறது. நமக்கு ஏற்படும் அதிர்ச்சி மதிப்பீடுகளை வைத்து அதை அளப்பது நியாயமாக தோன்றவில்லை. 'ஒரு நாள் போவார், ஒருநாள் வருவார்' என்று பொதுவாக இருக்கும் வாழக்கை, அதன் காரணமான கவலைப்படா தன்மை சுனாமி வந்த ஒரே காரணத்தால், நாம் விரும்பும் பொறுப்புணர்வு வரவேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்? நேற்றுவரை இருந்த சிட்டாட்டமும், குடியும் இன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட காரணத்தால் நாம் விரும்புவது போல் மாறவேண்டும் என்று நினைப்பது என்ன நியாயம்?
கர்நாடகாவிலிருந்து வந்து உதவிவிட்டு அவர்கள் வேலையை பார்க்க போககூடும். இப்படி பலரை பார்த்து அது ரொம்பவே பழக்கமும் ஆகியிருக்கும். இப்படி ஒவ்வொருவர் வரும்போதும், அதற்கான வரவேற்ப்பையும், நன்றியுணர்வையும் காட்டவேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும்? ஒரு நல்ல நோக்கத்தில், உதவுபவர்கள் மனம் கோணக்கூடாது என்று நீங்கள் நினைக்கலாம். தினமும் இப்படிபட்ட காட்சிகளை எத்ர்கொள்ளும் அவர்களும் ஒவ்வொருமுறையும் அப்படி நினைக்க முடியுமா?
எல்லாவற்றிலும் பிரச்சனை இருக்கிறது. நாம் பரிசீலனை செய்யாமல் மேலோட்டமக தோன்றுவதை மட்டும் சொல்லமுடியாது. ஆயினும் ஆண்களின் குடி போன்ற பிரச்சனைகளை முன்வைத்து 'அரசு நிவாரண உதவிகளை பெண்களிடம் வழங்கவேண்டும் ' என்று மனுஷ்யபுத்திரன் சொல்வதை ஏற்கிறேன்.
கடைசியாக ரஜினி ராம்கி, நான் அரோக்கியமான முறையில் ஸ்காட்ச் குடிப்பது குறித்து, என் தனிப்பட்ட பிரச்சனை என்பதை தாண்டி உங்களுக்கு விமர்சனம் இருக்காது என்றே நினைக்கிறேன். குறைந்தபட்சம் குடிப்பதை நிறுத்தி அந்த பணத்தையும் சுனாமி நிவாரணத்துக்கு அளிக்க வேண்டியதுதானே' என்று கூட கேட்க மாட்டீட்கள். அப்படி இருக்கும் போது மீனவர்களின் குடி குறித்து நீங்களும் நானும் எப்படி அறிவுரை சொல்லமுடியும்?
மனுஷ்யபுத்திரன் பதிலுக்கு நன்றி.வாக்களிக்க ஒரு வசதியை உங்கள் பதிவில் செய்துகொள்ளுங்கள். வாக்களிப்பதைவிட, புதிய மறுமொழி வரும்போது, தமிழ்மணத்தில் அது அப்டேட் ஆகும். அந்த வசதிக்காகவாது அதை செய்யவேண்டும். விவரம் தமிழ்மணம் பக்கத்தில் உள்ளது.
சுனாமி வந்து போன பின்னர். சந்தோஷமாக இயல்பாக இருப்பதற்குப் பலருக்குப் பயமாகவும், குற்ற உணர்வாகவும் இருக்கின்றது. இருந்தும் மனிதர்கள் சும்மா சோகமாக நடித்துக்கொண்டு எவ்வளவு காலத்திற்குத் தான் வாழ்வை இழுத்தடிக்க முடியும்.
சுனாமி வந்து போய் அடுத்த மாதமே கனேடியக் கலைநிகழ்ச்சிகள் ஒரு உச்சத்திற்கே போய் விட்டன. திரைப்படம் ஓடினால், நடன இசை நிகழ்வுகள் நாடகங்கள் நடாத்தப்பட்டால் எல்லாமே சுனாமியின் பெயரில், நிறுத்தப்பட்ட நத்தார் கொண்டாட்டங்களுக்கான ஒரு வடிகாலாக அமைத்துக் கொண்டார்கள். சந்தோஷமாக இருப்பது மனித இயல்வு. ஆனால் அதற்காக ஒரு சோகமான அனர்த்தத்தை இவர்கள் பாவிப்பதுதான் எனக்கு ஏற்றுக் கொள்ளச் சிரமாக உள்ளது.
நேற்று நான் பதிவில் இல்லை. இப்போது தான் பார்த்தேன். மனுஷயபுத்ரனும் வந்திருப்பது நல்ல அறிகுறிதான். வலைவாசகர்களுக்கு நல்ல படைப்புகள் கிட்டி வலைப்பதிவுகளின் முகம் மாறப்போகிறதாய் உணர்கிறேன்
இங்கே பேசப்பட்டிருக்கும் மனு.புத்,ரோசா கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன் என்றாலும் ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும்.
சுனாமிக்கு முன்னும், சுனாமிக்குப்பின்னும் மீனவர்களின் சகஜனிலை,பாதிப்பு போண்றவைகள் மாறினதே ஒழிய, அவர்களது கல்வியோ , அறிவோ திடிரென மாறிவிடாது. சுனாமிக்கு உதவ செல்லும்போது நமக்கு இருக்கும் மனநிலையில், நாம் அவர்களை எதிர்பார்ர்ப்பது(நிவாரண பணாத்தில்குடிக்காதே போன்றது) அதிகமோ என்று நினைக்கிறேன். அவர்களைப்பொறுத்தவரை எழவுக்கும் குடி,கல்யாணத்துக்கும் குடி என்றுதான் இதுகாலம் வரை வாழ்ந்திருப்பார்கள். சுனாமியில் கடுமையாய் தாக்கப்பட்டு , குடுமப்த்தினரை இழந்தவர்களுக்கு அதை விட பெரிய காரணம் தேவையில்லை. பாதிப்பில்லாதவர்கள், அவர்களை பொறுத்தவரையில், இது ஏதோ ஒரு பெரிய வித்தியாசமான விழா போன்றது என்ற புரிதலில் கூட இருப்பார்கள்.
பொறுப்பற்று நடக்கிறார்கள் என்று மீனவர்களை எதிர்பார்க்கும்/சாடும் நம் மனத்தை கொண்டுதான், அதேவேளையில் அவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள் என்றும்(பெரும்பாலும்), இது நாள் வரை கல்வி புகட்டப்படாத சமுதாயத்தைதான் நாம் உருவாக்கி வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் சற்று யோசிக்கவேண்டும் என்கிறேன்.
மற்றபடி தலைப்பில் அநாகரிகத்துக்கு எல்லை இருக்கிறதா? என்ற கேள்விக்கு,
அதன் எல்லை அநாகரிகர்கள் கையில்தான் இருக்கிறது. :-)
அதன் உச்சம் கொலையில் தான் முடியும். :)
மக்கள்தான் தலைவர்கள் என்பது என் கருத்து, அரசியல்வாதிகள் மட்டும் என்ன வானத்திலிருந்தா குதித்திருக்கிறார்கள்? சட்டசபை நிகழ்வில் மட்டமான பேச்சை முன்வைத்த அந்த அ.தி.மு.க அமைச்சர் யார்? அந்த மீனவர்களின் பிரதிநிதி தானே? எல்லா நேரத்திலும் குடிப்பதும் சீட்டாடுவதும் அவர்களின் பிறப்புரிமை போல நியாயப்படுத்தப்பட்டால், அரசியல்வாதிகள் எல்லாவற்றிலும் அரசியல் ஆதாயம் தேடுவதை மட்டும் ஏன் குற்றம் சொல்கிறீர்கள்? குடிப்பது, சீட்டாடுவது பற்றி அல்ல என் வாதம், அவர்களின் பொறுப்பைப் பற்றியது; அதற்கும் கல்வி இல்லாததுதான் காரணம் என்று சொல்லிவிடாதீர்கள்.
மனுஷ்யபுத்திரன்,
தங்களின் கருத்துக்களோடு நானும் உடன்படுகிறேன். இப்படிப்பட்ட கற்பிதங்களை களைய உங்களால் முடிந்த முயற்சிகளை செய்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
ரோ.வஸந்த்,
பிரச்னையை உணர்ச்சிப்பூர்வமாக மட்டுமே என்னால் அணுகமுடிகிறது. மீனவர்களின் வாழ்க்கை நிலையில்லாதது என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம் அவர்களைப் போன்று குறைவான சமூக பிரக்ஞை உள்ள ஆட்களை சமூகத்தில் நான் பார்த்ததில்லை. கடலும், மீனும் மட்டுமே அவர்களது வாழ்க்கையாகிப் போன காரணத்தால் இருக்கலாம். சுனாமிக்கு பின்னர் அவர்களுக்கு ஞானதோயம் வந்திருக்கலாம். அதற்காக முந்தைய கவலைப்படாதன்மையை யாரும் நியாயப்படுத்திவிடக்கூடாது என்பதுதான் எனது கவலை.
//சட்டசபை நிகழ்வில் மட்டமான பேச்சை முன்வைத்த அந்த அ.தி.மு.க அமைச்சர் யார்? அந்த மீனவர்களின் பிரதிநிதி தானே? //
மட்டமானது என்று ஒன்றை மட்டும் நினைப்பதிலும், அதற்கு காரணம் சிலவற்றை சொல்வதிலும் கற்பிப்பதிலும் நிறய பிரச்சனைகள் இருக்கிறது. உதாரணமாய் சுதர்சன் மேலே எழுதியுள்ளது அந்த அமைச்சரை விட மட்டமானதாய் எனக்கு தெரியலாம், தெரிகிறது.
'கல்வி இல்லாமை காரணம்' என்று கார்திக் சொல்வதையும் நான் ஏற்றுகொள்ளவில்லை. கார்திக் சுதர்சனும் மற்றவர்களும் சொல்வதை போல் பிரச்சனை மீனவர்களிடம் இருப்பதாகவும், அதற்கு காரணமாய் கல்வியின்மையையும் சொல்கிறார.நான் இங்கே பேச புகுந்தது சுதர்சன் போன்றவர்கள் சொல்வதில் உள்ள பிரச்சனையை,அவரகளிடம் உள்ள பிரச்சனையை!(மீனவர்களிடம் பிரச்சனை இல்லை என்று சொல்லவரவில்லை, அப்படி சொல்வது பிரச்சனைகளை கஃண்டுகொள்ளாமல் இருப்பதில் முடியும். )
Karthik,
'Ignorance is bliss' in many situations :)
வசந்த் சார், என்னிடம் உள்ள ப்ரச்னை என்னவென்று உண்மையாகவே எனக்குப் புரியவில்லை. தயவு செய்து இந்த பின்னூட்டத்திலோ, அல்லது ஒரு புதிய பதிவிலோ அல்லது என் தனி மின்னஞ்சலிலாவது சொல்லிவிடுங்கள்.
அன்புள்ள சுதர்சன்,
நீங்கள் என்னிடம் கேட்டு கொண்டதால் இதை எழுதுகிறேன்.
நீங்கள் உங்களையும், நீங்கள் அன்றாடம் தொடர்பு கொள்ளும் உங்களுக்கு பரிச்சயமான சமூகத்தையும், அதன் மூலம் உங்களுக்கு இருக்கும் மதிப்பீடுகள் நியாயங்கள், தர்கங்கள் இதை முன்வைத்து, உங்களுக்கு பரிச்சயமில்லாத சமூகத்தை பற்றி பேசவும் அளந்து பார்கவும் புரிந்துகொள்ளவும் முயல்கிறீர்கள். பிரச்சனை என்று கேட்டால் இதைத்தான் சொல்லமுடியும்.
பொறுப்புணர்வு என்பதற்கு உங்களுக்கு ஒரு அர்தம் இருக்கிறது. அதையே மேலே பயன்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் யோசித்து பாருங்கள். பொறுப்புணர்வு இல்லாமல் மீனவ வாழ்க்கை சாத்தியப்படுமா என்று. எல்லைகள் தெரியாத கடலில் பயணம் போகும்போது பொறுப்புணர்வு இல்லாமல் எப்படி அவர்களால் வாழமுடியும்? அவர்களுக்கு பொறுப்புணர்வு என்பதற்கு வேறு பல அர்தங்கள் இருக்கலாம். அத்தககய ஒரு பொறுப்புணர்வு நமக்கு என்றுமே தேவைஉப்படுவதில்லை. அந்த பொறுப்புணர்வு தேவை இல்லாத சந்தர்பங்களில் சீட்டாடுவதும், குடிப்பதும் அவர்களுக்கு மிக தேவையான விஷயமாய் கூட இருக்கலாம். நீங்கள் தர்கரீதியாய் ஒரு பொறுப்பு என்று வந்தடைந்த ஒன்றை அவர்களிடம் எதிர்பார்பது நியாயமல்ல என்பதைத்தான் நான் சொல்லவிரும்பினேன்.
நான் உங்களை குறிவைத்து பேசவில்லை. 'நன்றி கெட்ட ஜனங்கள்' என்கிற வகையில் கூட நேரடியாய் வலைப்பதிவுகளில் பேசப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு சந்தர்பத்திலாவது கருத்து சொல்லவேண்டுமே என்றுதான் சொன்னேன். மற்றபடி நானும் எனக்கு தெரிந்த அளவூகோல்களை வைத்துதான் எல்லாவற்றையும் அணுகுகிறேன். அது போதுமானவையல்ல, அதை வைத்து எல்லாவற்றையும் விளங்கிகொள்ள முடியாது என்ற தெளிவு மட்டும் இருக்கிறது.
நீங்கள் ஒரு பக்கம் மக்கள் சார்ந்த அக்கறையினால் கூட சொல்லியிருக்கலாம். உதாரணமாய் மீனவ சமூகத்தினரிடம் போய் 'குடிப்பதன், சிட்டாடுவதன்' பிரச்சனைகளை சொன்னால் அப்படி எடுத்துகொள்ள முடியும். இங்கே வலைப்பதிவுகளில் இதை சொல்வதற்கு என்ன பலன் இருக்க முடியும்? அந்த மக்களின் பிரச்சனைகளுக்கு அவர்களே காரணம், பிரச்சனை அவ்வர்களிடம் மட்டுமே இருக்கிறது, அவர்களை சுரண்டுபவர்களிடம் இல்லை, என்கிற வாதத்திற்கு வலு சேர்க்க மட்டுமே உதவும்.
நீங்கள் விவாதிக்க முன் வந்தமைக்கு நன்றி. இதை முன்வைத்து பேச நிறைய இருக்கிறது. என்னால் விரிவாய் விவாதமாய் எடுத்து செல்லவோ, கலந்து கொள்ளவோ முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன். வேறு ஒரு சந்தர்பத்தில் இன்னும் விரிவாகவும், நிதானமும் என்னால் விவாதிக்க முடிந்தால் கலந்து கொள்கிறேன். இன்றிலிருந்து இணையம் பக்கம் தலைகாட்டுவதே குறைந்துவிடும்.
வசந்த், உங்களுடைய விரிவான விளக்கத்திற்கு மிகவும் நன்றி! பெரும்பாலான கருத்துக்களில் நான் உங்களோடு உடன்படுகிறேன்.
நான் என்னுடைய அளவுகோல்களை வைத்துதான் எல்லாவற்றையும் அணுகுகிறேன் என்பது உண்மைதான். என் அறிவும், மனமும் இன்னும் விசாலப்பட வேண்டும்.
//நீங்கள் ஒரு பக்கம் மக்கள் சார்ந்த அக்கறையினால் கூட சொல்லியிருக்கலாம். உதாரணமாய் மீனவ சமூகத்தினரிடம் போய் 'குடிப்பதன், சிட்டாடுவதன்' பிரச்சனைகளை சொன்னால் அப்படி எடுத்துகொள்ள முடியும். இங்கே வலைப்பதிவுகளில் இதை சொல்வதற்கு என்ன பலன் இருக்க முடியும்?//
சரிதான். அப்படியானால் அரசியல்வாதிகளைப் பற்றி மட்டும் இங்கே பேசி என்ன பயன் இருக்க முடியும்?
முடிந்தால் பிறிதொரு சமயம் நாம் விவாதிப்போம். நன்றி!
//அப்படியானால் அரசியல்வாதிகளைப் பற்றி மட்டும் இங்கே பேசி என்ன பயன் இருக்க முடியும்?//
உதாரணமாய் அரசியல்வாதிகளை பற்றி இங்கே பேசுவது என்பது அவர்களை பற்றிய கருத்துக்களை உருவாக்கலாம். பிம்பங்களை உடைக்கலாம். கயமைத்தனத்தை வெளிக்காட்டலாம், இன்னும் என்னென்னவோ செய்யலாம். ஏற்கனவே சொன்னது போல் மீனவர்கள் குடிப்பதையும் சீட்டாடுவதையும் (ஒரு குற்றமாக) பேசுவது, அவர்களின் நிலமைக்கு அவர்கள்தான் காரணம் என்ற கருத்து உருவாக உதவும். இதை போன்ற பல பாதகமான அம்சங்கள் என்று நினைப்பதற்கே உதவும். இதைத்தான் சுட்டிகாட்ட விரும்பினேன்.
Rosavasanth-ன் கருத்துக்கள் நான் உடன்படும் விதமாக உள்ளது.
Post a Comment